கருணா உட்பட 4 பேருக்கு தடை விதித்த UK
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி, நான்கு இலங்கையர்களுக்கு ஐக்கிய இராச்சியம் தடைகளை விதித்துள்ளது.
முன்னாள் பாதுகாப்பு படைத் தலைமை அதிகாரி ஜெனரல் ஷவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தலைவர் அட்மிரல் ஆஃப் தி ஃப்ளீட் வசந்த கரன்னாகொட, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோருக்கு இவ்வாறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, எல்.டி.டி.ஈ அமைப்பின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான விநாயகமூர்த்தி முரளிதரன் என்று அழைக்கப்படும் கருணா அம்மானுக்கும் ஐக்கிய இராச்சியம் தடைகளை விதித்துள்ளது.
இதன்படி, இந்த நபர்களுக்கு ஐக்கிய இராச்சியத்திற்கு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சொத்துக்களை சேர்ப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
அவர்களுக்கு ஐக்கிய இராச்சியத்தில் ஏதேனும் சொத்துக்கள் இருந்தால், அவையும் தடை செய்யப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது சட்டவிரோத படுகொலைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சிய அரசின் உத்தியோகபூர்வ இணையதளம் தெரிவிக்கிறது.
உள்நாட்டுப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களை விசாரித்து, பொறுப்பானவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு தாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஐக்கிய இராச்சியம் அறிவித்துள்ளது.
இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதாகவும், தேசிய ஒற்றுமைக்கான அவர்களது அர்ப்பணிப்பை பாராட்டுவதாகவும் அந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகிறது.

No comments:
Post a Comment