சம்பூரில் மிதிவெடி அகழ்வுப் பணியின்போது மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு
திருகோணமலை, சம்பூர் கடற்கரை ஓரமாக நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மனித எச்சங்கள் வெளிவந்தததையடுத்து, குறித்த கண்ணிவெடி அகழும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இக்கண்டுபிடிப்பு, இலங்கையின் உள்நாட்டுப் போரின் கொடூரமான காலப்பகுதியையும், குறிப்பாகச் சம்பூரில் நிகழ்ந்த படுகொலைகளின் நினைவுகளையும் மீண்டும் மக்கள் மனதில் எழுப்பியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (ஜூலை 17) மூதூர் - சம்பூர் கடற்கரையோரப் பகுதியில் நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோரப் பகுதியில், கடந்த ஒரு வாரகாலமாக எம்.ஏ.ஜி (MAG) எனப்படும் கண்ணிவெடி அகழும் நிறுவனம், தங்களுக்குரிய தளபாடங்கள் மற்றும் பொருட்களுடன் முகாமிட்டு, கடந்த வியாழக்கிழமை முதல் கண்ணிவெடி அகழும் பணியைத் தொடர்ந்தது.
இந்நிலையில், இன்று (ஜூலை 20) குறித்த பகுதியில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அகழ்வுப் பணி உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீதிமன்றக் கட்டளையைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பூர் படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியை அண்மித்த பகுதியிலேயே இந்த மனித எலும்புப் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
சம்பூர் படுகொலை: 35 வருட வரலாறு:
திருகோணமலை சம்பூர் பகுதி, இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது பல மனித உரிமை மீறல்களுக்கும், பொதுமக்கள் படுகொலைகளுக்கும் சாட்சியாக இருந்துள்ளது. குறிப்பாக, சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1990 ஜுலை 7 ஆம் திகதி, இப்பகுதியில் நடந்த ஒரு கோரமான சம்பவத்தில், அப்பாவிப் பொதுமக்கள் பெருமளவில் இராணுவம் எனக் கருதப்படும் சீருடை அணிந்தவர்களால் படுகொலை செய்யப்பட்டனர். சம்பூர் கிராமத்தில் வெட்டியும் சுட்டும் 57 பேர் க்கொல்லப்பட்டதாகப் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவங்களின் விளைவாக, அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து, பெரும் துன்பங்களை அனுபவித்தனர். உயிரிழந்த பலரின் உடல்கள் மீட்கப்படாமலோ, முறையாக அடையாளம் காணப்படாமலோ புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நீண்டகாலமாக நிலவி வருகிறது. இந்தப் படுகொலைகளின் நினைவாகவே சம்பூர் கடற்கரையோரத்தில் தூபியொன்று அமைக்கப்பட்டு, நீதிக்கான குரல் தொடர்ந்து ஓங்கி ஒலிக்கிறது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித எச்சங்கள், அந்தப் பழைய காயங்களை மீண்டும் கீறி, நீதி மற்றும் உண்மைக்கான தேடலுக்கு மேலும் உந்துதல் அளித்துள்ளன.
.jpg)
No comments:
Post a Comment