'நட்புறவுப் பாலம்' என்ற பெயரில் பாரிய சதித்திட்டம்
எதிர்வரும் 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் 'நட்புறவுப் பாலம்' என்ற பெயரில் அநுரகுமார திசாநாயக்கவின் அரசு ஒரு பாரிய சதித்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் எச்சரித்துள்ளார்.
இந்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அன்றைய தினம் கறுப்புக் கொடி கட்டி தமிழ் மக்கள் தங்கள் எதிர்ப்பையும் துக்கத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என அவர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கொக்குவிலில் உள்ள தனது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த கஜேந்திரன், பின்வருமாறு கூறினார்:
"ஜூலை 23 என்பது தமிழ் மக்களுக்கு கறைபடிந்த ஒரு நாள். 1983ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பாரிய இனப்படுகொலையை மறைப்பதற்கும், அதன் வரலாற்றை மழுங்கடிப்பதற்கும் அநுர அரசு ஒரு சதித்திட்டத்தை மிகச் சாதுர்யமாக முன்னெடுக்க முயல்கிறது. இதற்காக, தென்னிலங்கையில் இருந்து ஒரு தொகுதி நபர்களை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்து, அநுர அரசின் ஆதரவாளர்களைப் பயன்படுத்தி, மக்களை ஏமாற்றி, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உருவாக்குவதாகக் கூறி 'நட்புறவுப் பாலம்' என்ற நிகழ்வை நடத்த திட்டமிடுகிறது.
கஜேந்திரனின் கூற்றுப்படி, இந்த நிகழ்வு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து இலங்கையில் நடைபெற்ற யுத்தக் குற்றங்களுக்கு சர்வதேச குற்றவியல் விசாரணையை கோரும் முயற்சிகளை சிதைப்பதற்கும், திசை திருப்புவதற்கும் மேற்கொள்ளப்படும் ஒரு தந்திரோபாயமாகும். "இந்த நட்புறவுக் கொண்டாட்டம், 1983 இனப்படுகொலையை மூடி மறைப்பதற்கான ஒரு உத்தியாகவே உள்ளது. முந்தைய அரசுகள் இந்த விவகாரத்திற்கு தீர்வு வழங்காவிட்டாலும், அதை மறைக்க முயற்சிக்கவில்லை. ஆனால், அநுர அரசு, முந்தைய அரசுகள் தீர்வு வழங்கவில்லை என்ற தோற்றத்தை உருவாக்கி, இந்த விடயத்தை நீர்த்துப் போகச் செய்ய முயல்கிறது," என அவர் குறிப்பிட்டார்.
அநுர அரசு, யுத்தக் குற்ற விசாரணை மற்றும் சர்வதேச விசாரணையை தேவையற்றவை என சர்வதேச சமூகத்திற்கு காட்ட முயல்வதாகவும் கஜேந்திரன் குற்றம் சாட்டினார். "'நட்புறவுப் பாலம்' என்ற இந்த நிகழ்வு, அநுர அரசின் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது. இது தமிழ் மக்களின் அழிவுகளை மறைத்து, யுத்தக் குற்றங்களுக்கு நீதி கோரும் முயற்சிகளை பலவீனப்படுத்துவதற்கான முயற்சியாகும்.
கஜேந்திரன், தமிழ் மக்களை விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தி, "எதிர்வரும் ஜூலை 23 அன்று, தென்னிலங்கையிலிருந்து வரவுள்ளவர்களுடன் இணைந்து அநுர அரசின் ஆதரவாளர்களின் இந்த முயற்சியில் தமிழ் மக்கள் பங்கேற்கக் கூடாது. அந்த நாளை ஒரு கறைபடிந்த நாளாகக் கருதி, கறுப்புக் கொடி கட்டி எமது துக்கத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்துவோம்," என அழைப்பு விடுத்தார்.
'நட்புறவுப் பாலம்' என்ற பெயரில் பாரிய சதித்திட்டம்
Reviewed by Vijithan
on
July 22, 2025
Rating:

No comments:
Post a Comment