பங்களாதேஷ் விமான விபத்தில் 19 பேர் உயிரிழப்பு
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பாடசாலை மற்றும் கல்லூரி வளாகத்தில் பங்களாதேஷ் விமானப்படையின் F-7 BGI பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்து இன்று (21) பிற்பகல் 1:06 மணியளவில் (12:36 PM IST) நிகழ்ந்தது. அப்போது விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளாகி, கல்லூரியின் ஹைதர் ஹால் கேன்டீன் கட்டடத்தில் மோதி தீப்பிடித்தது.
இந்த விபத்தில் விமானி, பிளைட் லெப்டினன்ட் தவ்கிர் இஸ்லாம் சாகர் உட்பட 19 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 100-க்கும் மேற்பட்டோர், பெரும்பாலும் மாணவர்கள், தீக்காயங்களுடன் பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
விமானம் புறப்பட்ட உடனேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது. ஆனால் விபத்தின் சரியான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பங்களாதேஷ் இராணுவம், எல்லைக் காவல் படை (BGB), மற்றும் தீயணைப்பு படையின் ஒன்பது பிரிவுகள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மைல்ஸ்டோன் பாடசாலை மற்றும் கல்லூரியில் சுமார் 2,000 மாணவர்கள் பயில்கின்றனர். மழலையர் பிரிவு முதல் 12ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறுகின்றன. விபத்து நடந்தபோது மாணவர்கள் வகுப்புகளில் இருந்தனர்.
பங்களாதேஷின் இடைக்கால அரசுத் தலைவர் முஹம்மது யூனுஸ் இந்த விபத்தை “பேரழிவு” என்று வர்ணித்து, விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு உதவி வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
ஜூலை 22 அன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

No comments:
Post a Comment