மன்னார் சிந்துஜா மரணம் தொடர்பில் பணியிடை நீக்கம் செய்யப் பட்டவர்களில் மூவர் கைது-விளக்கமறியலில் வைக்க உத்தரவு.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரியான இளம் குடும்ப பெண் மரணத்துடன் தொடர்புடையதாக பணி நீக்கம் செய்யப்பட்ட வைத்தியர் ஒருவர் உள்ளடங்களாக ஐவரில் மூவர் இன்றைய தினம் சனிக்கிழமை(9) கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த வருடம் ஜூலை மாதம் 28 உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரியான இளம் குடும்ப பெண்ணின் மரணத்திற்கு நீதி கோரி வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
-மருத்துவக் கவனயீனத்தால் ஏற்பட்ட அதீத இரத்தப்போக்கு காரணமாக குறித்த இளம் தாயின் மரணம் சம்பவித்துள்ளது என மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளி வந்தது.
இந்த நிலையில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் உள்ளடங்களாக இரண்டு தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக குறித்த ஐவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் குறித்த ஐவரில் தாதிய உத்தியோகத்தர் ஒருவரும்,இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர் களும் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை(9) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இதன் போது மன்னார் நீதவான் குறித்த மூவரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
மேலும் சந்தேக நபரான வைத்தியர் ஒருவரையும் ,தாதிய உத்தியோகத்தர் ஒருவரையும் கைது செய்ய உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்தார்.
இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
Reviewed by Vijithan
on
August 09, 2025
Rating:


No comments:
Post a Comment