ஓமந்தையில் கோர விபத்து! பெண் உட்பட இருவர் பலி!
வவுனியா ஓமந்தை எ9 வீதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 15பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இலகுரக வாகனம், ஓமந்தை மாணிக்கர் வளைவுப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியது.
விபத்தின் போது குறித்த வாகனத்தில் பெண்கள் சிறுவர்கள் உட்பட 15ற்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர்.
விபத்தினால் வாகனத்தில் இருந்த அனைவரும் வீதியில் தூக்கி வீசப்பட்ட நிலையில் படுகாயமடைந்திருந்தனர்.
இதன்போது வீதியால் பயணித்த பொது மக்களின் உதவியுடன் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் உட்பட இருவர் சாவடைந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 9 பேர் பெண்கள் என்றும் ஆறு பேர் சிறுவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் முல்லைத்தீவு விசுவமடு பகுதியை சேர்ந்த 33 வயதான பெண்ணும், 30 வயதான ஆணும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த அனைவரும் ஒரே குடும்பங்களை சேர்ந்த உறவினர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் கண்டியில் இடம்பெற்ற மரணவீடு ஒன்றிற்கு சென்றுவிட்டு மீண்டும் விசுவமடு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதேவேளை படுகாயமடைந்த சிறுவன் ஒருவர் உட்பட மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்து தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment