மொட்டுக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக தமிழ் அரசியல்வாதி முறைப்பாடு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தமக்கும் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் இருவருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ். தவபாலன், வவுனியா பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் ஒக்டோபர் 9 ஆம் திகதி அந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
தமிழ் மக்கள் செறிந்து வாழும் திரிவைத்தக்குளம் பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை போகஸ்வெவ கிராமத்தைச் சேர்ந்த சிங்கள மக்கள் பலவந்தமாக ஆக்கிரமித்துள்ளமை தொடர்பில் ஆராய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பீ. சத்தியலிங்கம் உள்ளிட்ட ஒரு குழுவினர் செப்டெம்பர் மாதத்தில் அவ்விடத்திற்குச் சென்ற சந்தர்ப்பத்தில் தனது பெயரையும் இன்னும் இரு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் பெயர்களையும் குறிப்பிட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வவுனியா வவுனியா மாவட்ட அமைப்பாளர் பிமல் தர்மதாச, இவ்வாறு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்ததன் பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த தவபாலன் குறிப்பிடுகின்றார்.
“கடந்த மாதம் 30ஆம் திகதி திரிவைத்தகுளம் பிரதேசத்தில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் சென்றிருந்தனர். அந்த இடத்திற்கு வருகை தநத காணியை ஆக்கிரமித்துள்ள பிமல் தர்மராஜா உள்ளிட்ட குழுவினர் அங்கு வருகை தந்தவர்களை பார்த்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதுடன், என்னுடைய பெயரினையும், பிரதேச சபை உறுப்பினர் தமிழ் செல்வன் அவர்களது பெயரையும், வன்னிப் நாடாளுடன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது பெயரையும் குறிப்பிட்டு அவர்கள் இங்கு இருக்கிறர்களா? அவர்களை வெட்டுவதற்காக, அவர்களை கொலை செய்வதற்குத்தான் வந்தோம் என தெரிவித்திருந்தார்கள்.”
வவுனியா போகஸ்வெவ கிராமத்தில் வசிக்கும் சிங்கள மக்கள் இலங்கை பொதுஜன முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் பிமல் தர்மதாசவின் ஒத்தாசையுடன் அரச காணிகளை பலவந்தமாக ஆக்கிரமித்து ஏலவே ஈடுபட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ். தவபாலன் ஊடகவியலாளர்களிடம் மேலும் தெரிவித்தார்.
அதற்கு மேலதிகமாக வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலக பிரிவில் உள்ள வெடிவைத்தகல் கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள திரிவைத்தக்குளம் கிராமத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 210 ஏக்கர் தனியார் காணிகளை பலவந்தமாக ஆக்கிரமிக்க போகஸ்வெவ கிராமத்தில் வசிக்கும் சிங்கள மக்களுக்கு பிமல் தர்மதாசவின் உதவி கிடைப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
தாம் வவுனியா பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் செய்த முறைப்பாடு தொடர்பில், விசாரணை செய்யுமாறு போகஸ்வெவ பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்து அத்தருணத்திலேயே அங்கிருந்த அதிகாரிகள் அறிவித்து நடவடிக்கை எடுத்ததாக தவபாலன் குறிப்பிட்டார்.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வவுனியா மாவட்டத்தில், புதிதாக நிறுவப்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் சிங்கள மக்களுக்கு விவசாயத்திற்காக அரச நிறுவனம் ஒன்று நிலத்தை பகிர்ந்தளித்தமை, அருகருகே வாழும் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.
ஏற்கனவே தமது பயிர் நிலங்கள் ஆக்கிரமித்துள்ள சிங்கள மக்களால் திரிவைத்தக்குளத்தில் புதிதாக காடழிப்பு நடைபெறுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் துரைராசா தமிழ்ச்செல்வன் ஆகியோர் 2025 ஜூலை மாதத்தில் முதன்முறையாக உண்மைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
அந்த காணியில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள ஒரு சிங்கள விவசாயியென தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு கடந்த ஜூலை மாதம் சமூக ஊடகங்கள் ஊடாக கருத்து தெரிவித்த பிமல் தர்மதாச சிங்கள மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள காணிகள் அவர்களது பரம்பரைக்காணிகள் எனவும், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுடனேயே காணிகளை துப்புரவு செய்யும் பணிகள் நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சுமார் 40 ஆண்டு காலமாக காடுகளாக காணப்பட்ட இடங்களை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் வழங்கப்பட்ட அனுமதியின் பேரில் சிங்கள விவசாயிகளால் பயிர்ச்செய்கைக்காக புதிதாக துப்புரவாக்கப்பட்டதாக திட்டவட்டமாகக் கூறும் பிமல் தர்மராச, சிங்கள விவசாயிகள் குத்தகை அனுமதிப்பத்திரத்தின் அடிப்படையிலேயே அந்த நிலப்பகுதியில் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதாக 2025 ஜூலை மாதம் மேலும் தெரிவித்திருந்தார்.

No comments:
Post a Comment