வவுனியா மாநகர சபையின் சபை செயற்பாடுகளுக்கு இடைக்கால தடை - மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு
வவுனியா மாநகர சபையின் சபை செயற்பாடுகளுக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதி வரை இடைக்கால தடை விதித்து செவ்வாய்க்கிழமை (21) தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
வவுனியா மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு ஆதரவு கோரப்பட்ட போது ஜனநாயக தேசிய முன்னணியின் போனஸ் ஆசனத்தினால் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதி மேயர் பதவி கோரி ஆதரவளித்திருந்தார்.
எனினும் அவர் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட எல்லையில் வசித்த நிலையில் மாநகர சபையில் போட்டியிட்டமை அதனூடாக பதவியை பெற்றமை சட்ட விதிகளுக்கு மீறிய செயற்பாடு என மாநகர சபை உறுப்பினர்களான தேசிய மக்கள் சக்தியின் சார்பில் க. விஜயகுமாரும் சுயேற்சை குழு உறுப்பினரான பிரேமதாஸ் சிவசுப்பிரமணியமும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இதன் பிரகாரம் கடந்த நான்கு தவணைகளின் பின்னர் செவ்வாய்க்கிழமை (21) நீதிமன்றத்தினால் மேற்குறித்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வழக்கு தாக்கல் செய்தவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment