அண்மைய செய்திகள்

recent
-

அனர்த்தத்தின் பின்னர் ஏற்படக்கூடிய நோய்கள் குறித்து அவதானம்

 ஏற்பட்ட அனர்த்த நிலைமையின் பின்னர் ஏற்படக்கூடிய தொற்று நோய்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனத் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. 


இந்த நிலைமையில் கொதிக்க வைத்த நீரைப் பருகுவது மிகவும் முக்கியமானது என அப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அதுல லியனபத்திரண தெரிவித்தார். 

அத்துடன், குடிநீருக்காகப் பயன்படுத்தப்படும் கிணறுகள் வெள்ள நீரால் நிரம்பி வழிந்திருந்தால், அவற்றை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்னர் முறையாகச் சுத்தம் செய்து, குளோரின் இட்டு தொற்று நீக்கம் செய்த பின்னரே பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விசேட வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டினார். 

மேலும், உணவின் மூலம் பரவக்கூடிய நோய்கள் குறித்துக் கவனமாக இருக்கையில், சமைத்த உணவுகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். சுத்தமாக உணவைச் சமைப்பதுடன், வயிற்றுப்போக்கு போன்ற நோய் நிலைமைகளைக் கொண்ட ஒருவர் உணவு சமைக்கும் செயற்பாட்டில் ஈடுபடக்கூடாது என்றும் விசேட வைத்திய நிபுணர் குறிப்பிட்டார். 

அத்துடன், உணவு தயாரிக்கும் நேரம் மற்றும் உண்ணும் நேரங்களைப் பொறுத்து உணவு நஞ்சாகக்கூடும் என்றும், அதற்கமைய உணவு சமைத்ததிலிருந்து 4 மணித்தியாலங்களுக்குள் உணவை உட்கொள்வது மிகவும் சிறந்தது என்றும், உணவருந்தும் முன் கைகளை நன்றாகக் கழுவுவது அவசியம் என்றும் விசேட வைத்திய நிபுணர் இங்கு குறிப்பிட்டார். 

மேலும் கருத்துத் தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் அதுல லியனபத்திரண, 

"பல இடங்களில் நீர் தேங்கியுள்ளது, சேறு தேங்கியுள்ளது. இது எலிக்காய்ச்சல் (Leptospirosis) பரவுவதற்கு மிகவும் ஏதுவான சூழலாகும். எலிக்காய்ச்சல் என்று கூறினாலும், எலிகள் மட்டுமல்லாது நாய்கள், மாடுகள் மற்றும் பன்றிகளின் சிறுநீரிலிருந்தும் நீர் அசுத்தமடையக்கூடும். அந்த அசுத்தமான நீர் எமது உடலில் உள்ள வெட்டுக்காயங்கள், சிராய்ப்புகள் அல்லது காயங்கள் மூலமாகவும் உடலுக்குள் செல்லக்கூடும். 

வெள்ளப்பெருக்கிற்கு உள்ளான அனைத்து நபர்களுக்கும் வழங்குவதற்காக 'டொக்ஸிசைக்ளின்' (Doxycycline) எனும் மருந்தை நாம் விநியோகித்துள்ளோம். அந்த மருந்து வில்லைகளில் 200 மில்லிகிராமை உடனடியாக உட்கொள்ள வேண்டும். சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டாலோ அல்லது உங்கள் வீடு நீரில் மூழ்கியிருந்தாலோ, வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து இந்த மருந்தளவை உட்கொள்ளுங்கள்," என்றார்.




அனர்த்தத்தின் பின்னர் ஏற்படக்கூடிய நோய்கள் குறித்து அவதானம் Reviewed by Vijithan on December 07, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.