சர்ச்சைக்குரிய பக்கத்தை நீக்கிவிட்டு விநியோகிக்க யோசனை
சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கிலப் பாடக் கற்றல் தொகுதியை (Module) அச்சிடுவதற்காக 61 மில்லியன் ரூபாவுக்கும் அண்மித்த நிதி செலவிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெ தெரிவித்தார்.
எனவே, அதனை மீண்டும் அச்சிடுவதா அல்லது செலவைக் குறைக்கும் மாற்று நடவடிக்கையொன்றுக்குச் செல்வதா என்பது குறித்து தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, நாம் வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அதில் பின்பற்றக்கூடிய ஒரு மாற்றாக, குறித்த கற்றல் தொகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய பக்கத்தை நீக்கிவிட்டு விநியோகிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில், தற்போதைய அரசாங்கத்தின் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நடைபெறும் நேரத்தை 30 நிமிடங்களால் நீடிப்பது 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், பாடசாலை நேரத்தை நீடிக்கும் முடிவை நடைமுறைப்படுத்தாதிருக்கத் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு இன்று (02) அறிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாகச் சில மாகாணங்களில் பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துக் கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள சேதங்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, 2026 ஆம் ஆண்டிலும் தரம் 5 முதல் தரம் 13 வரை பாடசாலை நடைபெறும் நேரம் மு.ப. 7.30 மணி முதல் பி.ப. 1.30 மணி வரை மாற்றமின்றித் தொடரும்.
2026 ஆம் ஆண்டின் முதலாம் தவணைக்காக அரச பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்கள் ஜனவரி 05 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
மேலும், புதிய கல்விச் சீர்திருத்தச் செயன்முறையை இவ்வருடத்தில் தரம் 1 மற்றும் தரம் 6 இற்கு நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் கீழ், தரம் 6 இன் கல்வி நடவடிக்கைகளை முறைப்படி ஆரம்பிப்பது ஜனவரி 21 ஆம் திகதி நடைபெறும்.
தரம் 1 இற்கான மாணவர்களை இனங்காணுதல் ஜனவரி 05 ஆம் திகதி ஆரம்பமாகும் அதேவேளை, முறைப்படி கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது ஜனவரி 29 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அதற்கமைய தரம் 1 மற்றும் தரம் 6 இற்குரிய கற்றல் தொகுதிகளை (Modules), அந்தத் தரங்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் மாணவர்களுக்கு விநியோகித்து முடிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், 'டித்வா' புயல் காரணமாக இடைநடுவில் நிறுத்தப்பட்ட 2025 உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய கட்டங்கள், இவ்வருடம் ஜனவரி 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய பக்கத்தை நீக்கிவிட்டு விநியோகிக்க யோசனை
Reviewed by Vijithan
on
January 02, 2026
Rating:
Reviewed by Vijithan
on
January 02, 2026
Rating:


No comments:
Post a Comment