இராணுவத்தினருடன் இணைந்து விகாரை கட்டியமை மகா தவறு!! நாக விகாரை விகாராதிபதி அதிருப்தி
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு சொந்தமான காணி இருக்கும் போது, தமிழ் மக்களின் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி இராணுவத்தினருடன் இணைந்து விகாரை கட்டியமை மகா தவறு.
அதனை பௌத்த துறவி செய்திருக்க கூடாது என நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி ஸ்ரீ நவடகல பதும கீர்த்தி திஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாக தீப விகாராதிபதி தலைமையிலான பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிக்கு நேரில் சென்று, தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன், திஸ்ஸ விகாரை முன்னர் இருந்த இடத்தினையும் , திஸ்ஸ விகாரைக்கு சொந்தமான காணிகளையும் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
தையிட்டி திஸ்ஸ விகாரை இப்போது அமைந்துள்ள பகுதி தனியாருக்கு சொந்தமான காணிகள்.
திஸ்ஸ விகாரைக்கு என சொந்தமாக காணிகள் இருக்கும் போது இராணுவத்தினருடன் இணைந்து தனியார் காணிகளை அபகரித்து விகாரையை கட்டியுள்ளனர்.
இது மகா தவறு, பௌத்த பிக்குகள் அவ்வாறு செய்திருக்க கூடாது. மற்றவர்களுக்கு போதனை செய்யும் நாங்கள் , பிறர் பொருட்களை எடுக்க கூடாது என புத்தரே சொல்லி இருக்கிறார்
தற்போது விகாரைக்காக கையகப்படுத்தியுள்ள காணிகளை நான்கு கட்டமாக விடுவிப்பதாக கூறி இருப்பதும் ஏமாற்று வேலையே. நான்கு கட்டம் என கூறுவார்கள்.
பிறகு ஒவ்வொரு கட்டத்திற்கு இடையில் நான்கு ஐந்து வருடங்களுக்கு மேலாகும். எனவே விடுவிப்பதனை ஒரு தடவையில் தர வேண்டும் என கோரி பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த மக்களின் போராட்டம் நியாயமானது. இதனால் தான் இந்த காணிகளை விடுவிக்க வேண்டும் என நான் குரல் கொடுத்தேன்.
அதன் பிறகு யாழ்ப்பாண நாக விகாரை விகாரதிபதியும் எனது கருத்தோடு ஒத்த கருத்தை தெரிவித்தார்.
அதனை தொடர்ந்தே தையிட்டி விகாரதிபதியும் ஊடக சந்திப்பினை மேற்கொண்டு , புதிய கட்டுமானங்களை கட்ட மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளிடமும் நான் கேட்டுக்கொள்வது. காணியை இழந்த இந்த மக்களின் போராட்டத்திற்கு எதிராக வழக்குகள் போடுவதனை நிறுத்த வேண்டும்.
இந்த மக்கள் தமது காணிகளை இழந்து வீதிகளில் நின்று போராடுகிறார்கள்.
அவர்களுக்கு காணிகளை கையளித்தால் , அவர்கள் போராட மாட்டார்கள் எனவே பொலிஸார் போராட்டங்களுக்கு தடை செய்யாது. போராடுபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
Reviewed by Vijithan
on
January 02, 2026
Rating:


No comments:
Post a Comment