300 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் தீயிட்டு அழிப்பு
சுமார் 300 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மற்றும் அபின் வகை போதைப்பொருட்கள், வனாத்தவில்லுவ லெக்டோ தோட்டத்தில் அமைந்துள்ள அதிஉயர் வெப்பத் தகன உலையில் இட்டு அழிக்கும் நடவடிக்கை, இன்று (02) கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இடம்பெற்றது.
கடந்த 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மட்டக்களப்பு பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாக, கடற்படையினரின் உதவியுடன் கைப்பற்றப்பட்டு, பின்னர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட 106 கிலோ 248 கிராம் ஹெரோயின் மற்றும் 90.5 கிராம் அபின் ஆகிய போதைப்பொருட்களே இவ்வாறு அழிக்கப்பட்டன.
குறித்த போதைப்பொருள் தொகை தொடர்பான வழக்கு விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து, அவற்றை அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதற்கமைய, இன்று காலை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இருந்து போதைப்பொருள் தொகை பொறுப்பேற்கப்பட்டு, பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வனாத்தவில்லுவ பகுதிக்குக் கொண்டு வரப்பட்டது.
அவ்வாறு கொண்டுவரப்பட்ட ஹெரோயின் மற்றும் அபின் போதைப்பொருட்கள், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்ட பின்னர், கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேனவின் மேற்பார்வையில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.என்.எம்.சி. ஹேரத்தின் வழிகாட்டலில் உலையில் இட்டு அழிக்கப்பட்டன.
இந்தச் சந்தர்ப்பத்தில் தகன உலை அமைந்துள்ள பகுதி மற்றும் போதைப்பொருள் கொண்டுவரப்பட்ட வீதியின் இருமருங்கிலும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது
Reviewed by Vijithan
on
January 02, 2026
Rating:


No comments:
Post a Comment