யுத்தத்தில் கணவனை இழந்த குடும்பங்கள் பெண் தலைமையில் வாழ்ந்து வருவதால் உழைப்பதற்கு ஆண்கள் இல்லாத நிலையில் பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். என யுத்தத்தின் பின் மன்னார் மாவட்டத்தில் மீளக்குடியமர்ந்துள்ள குடும்பங்களில் பெண்கள் நிலை குறித்து மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை கவலை வெளியிட்டுள்ளார்.
தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் சர்வமதத் தலைவர்கள் கலந்து கொண்ட சர்வமத நிகழ்வு ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை மன்னார் சமூகத் தொடர்பு அருட்பணி மையத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கவலை தெரிவித்துள்ளார்.
யுத்தத்தினால் எத்தனையோ குடும்பப் பெண்கள் விதவைகளாக்கபபட்டுள்ளனர். யுத்தத்தின் போது உழைக்கும் ஆண் குடும்பத்தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் நிலை மற்றும் அவர்களின் தற்போதைய நிலை குறித்த தரவுகளைப் பெற்று அவர்களுக்குரிய உதவித்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை அனாதைகளாக்கப்பட்டுள்ள பிள்ளைகள் எதுவித உதவியும் இன்றி வீடுகளில் உள்ளனர். தாய் தகப்பன் அற்ற நிலையில் பிள்ளைகள் அதிகம் உள்ளனர். அவ்வாறான பிள்ளைகளை நாங்கள் ஏற்றுக் கொள்ளுகின்றோம்.
அதிகமாக பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லை, வீடு இல்லை ,படிப்பதற்குரிய வசதி இல்லை, தகப்பனை இழந்தமையால் பாதுகாப்பு குறைவு. ஆகவே இந்த பிள்ளைகளுக்கு என்ன நடக்குமோ தெரியாது. இதானால் தாய்மார் எத்தனையோ பேர் தங்களின் பிள்ளைகளை எங்களிடம் கொண்டு வந்து தருகின்றார்கள். அவர்களை ஏற்று அருட்சகோதரிகளிடம் ஒப்படைக்கின்றோம்.
அவர்களை நாம் ஏற்று மனிதத் தன்மையான முறையில் சமூகத்தில் நல்ல பிள்ளைகளாக வர உருவாக்குகின்றோம். அவர்கள் சிறப்பான பாடசாலைகளில் சேர்ந்து கல்வி கற்கின்றார்கள்.
இறுதி யுத்தத்தின் போது கல்வியை இழந்தவர்கள். நலன்புரி நிலையங்களில் இருந்து படிக்க முடியாத நிலையில் இருக்கும் மாணவர்கள் கத்தோலிக்க அமைப்புகள் மட்டுமல்ல இந்து மறையைச் சார்ந்தவர்களாலும் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இப்படியாக பாதிக்கப்பட்ட பிள்ளைகளை நாங்கள் வைத்து பராமரித்து வருகின்ற போது சிறுவர் நன்நடத்தை பிரிவு அதிகாரிகள் வந்து எங்களை பெரும் பாடு படுத்துகின்றனர். பல சிறுவர் இல்லங்கள் தகுதி அற்ற இடத்தில் உள்ளதாகவும் அவ்வாறு இருக்கக்கூடாது என்ற பல்வேறு காரணங்களைக்கூறி அந்த இல்லங்களில் உள்ளவர்களை வீட்டில் விடச் சொல்வதுடன் இல்லங்களை மூடுகின்றார்கள்.
யுத்தத்தின் பிடியில் பெண்களும், பிள்ளைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். எத்தனையோ பேர் கை, கால்களை இழந்துள்ள நிலையில் அங்கவீனமாக்கப்பட்டுள்ளனர். அவ்வாறானவர்களைத் தூக்கி விடுவதற்கான முயற்சிகள் எதுவும் இடம் பெறுகின்றாதா என்ற கேள்வி கேட்டால் அப்படி இல்லை என்பதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment