அண்மைய செய்திகள்

recent
-

நமது பண்பாட்டு வேர்களை நாம் கண்டுபிடிக்க வேண்டும் மட்டக்களப்பு கண்ணகி விழாவில் தமிழ் நேசன் அடிகளார்

கிழக்கிலங்கை மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்துள்ள கண்ணகி தொடர்பான இலக்கியங்களையும், கலைகளையும் மீளக்கண்டுபிடிக்கின்ற முயற்சி காலத்தின் தேவையாகும். புதைந்துகிடக்கின்ற நமது கலை   இலக்கியக் கருவூலங்களை வெளிக்கொண்டுவருகின்ற விழா  இது. கிழக்கிலங்கையின் கலை இலக்கியங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்ற விழா இது. தமிழர்களாகிய நாம் நமது பண்பாட்டு வேர்களை மீளக்கண்டுபிடிக்க வேண்டும். அதற்குரிய உந்துதலையும், உற்சாகத்தையும் இந்த விழா நமக்குத் தருகின்றது என மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மைய இயக்குனரும், மன்னார் சர்வமதப் பேரவையின் தலைவருமான அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் குறிப்பிட்டார். கடந்த சனிக்கிழமை (28.07.2012) அன்று மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற 'கண்ணகி கலை இலக்கிய விழா 2012' நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அடிகளார் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
   மீன்பாடும் தேன் நாடாம் மட்டுமாநகரிலே மீண்டுமொரு கண்ணகி விழா நடந்தேறுகின்றது. கிழக்கிலங்கை மக்களின் கலை, இலக்கிய மரபில் கண்ணகி என்ற ஆழுமை குறிப்பிடத்தக்கதொரு செல்வாக்கை செலுத்திவருகின்றது. கண்ணகியை தெய்வமாகப் பார்க்கின்ற மரபு பெருமளவில் வளர்ச்சிபெற்றாலும் அதையும் தாண்டி மக்களின் பண்பாட்டோடு, கலையோடு, இலக்கியத்தோடு கண்ணகி செலுத்துகின்ற செல்வாக்கு தொடர்ந்து ஆய்வுசெய்யப்படவேண்டும்.
  நமது நாட்டுத் தமிழ் அறிஞர்கள் தவத்திரு தனிநாயகம் அடிகளார், சுவாமி விபுலானந்தர், நாவலர் பெருமான் போன்றவர்கள் தமிழர்களின் பண்பாட்டு வேர்களைக் கண்டுபிடிப்பதில் முனைப்பாக ஈடுபட்டனர். அவர்களுடைய முயற்சியின் தொடர்;ச்சியாகத்தான் இந்த விழாவை நான் பார்க்கின்றேன். கண்ணகி விழா ஒரு சமய விழா மட்டுமல்ல, இது மக்கள் விழாளூ பண்பாட்டு விழா. கிழக்கிலங்கை மக்களின் வாழ்வியலோடு கலந்துவிட்ட கண்ணகிக்கு விழா எடுப்பதென்பது நமக்கு நாமே விழா எடுப்பதாகும்.
  ஓவ்வொரு பிரதேசத்தைச் சார்ந்தவர்களும் தத்தமது கலை இலக்கிய மரபுகளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். கிழக்கிலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த விழிப்புணர்வு தமிழர் தாயகப் பகுதியெங்கும் ஏற்பட வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்கள் தமது பண்பாட்டு மரபுகளை, கலை, இலக்கியப் பாரம்பரியங்களை கண்டுபிடிக்க வேண்டும், அவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டுவரவேண்டும். மட்டக்களப்பில் நடைபெறும் இந்த விழா ஏனைய பகுதி மக்களுக்கும் ஓர் உந்துதலை, தூண்டுதலை ஏற்படுத்த வேண்டும்.






 
படங்களுக்கான விளக்கம்
  கடந்த சனிக்கிழமை (28.07.2012) அன்று மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற 'கண்ணகி கலை இலக்கிய விழா 2012'  நிகழ்வின் அலங்கார வளைவையும் விழாவிற்கு தலைமை வகித்த பேராசிரியர் மௌனகுரு அவர்களையும், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழ் நேசன் அடிகளாரையும் படத்தில் காணலாம்.
விழாவையொட்டி நடைபெற்ற ஊர்வலத்தையும், தமிழ் நேசன் அடிகளார் உரையாற்றுவதையும் படங்களில் காணலாம்.
நமது பண்பாட்டு வேர்களை நாம் கண்டுபிடிக்க வேண்டும் மட்டக்களப்பு கண்ணகி விழாவில் தமிழ் நேசன் அடிகளார் Reviewed by NEWMANNAR on July 30, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.