இலங்கை அரசு இனப்பிரச்சினைக்கான தீர்வினை ஒருபோதும் முன்வைக்கப் போவதில்லை!- த.தே.கூட்டமைப்பு
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன், இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேசாமல் தென்னிலங்கை சிங்கள பௌத்த சக்திகளுடனா பேச முடியும்? என கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்துடன், காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களும் இதேபோன்று இனப்பிரச்சினைக்கு தீர்வு காண விரும்பாத நிலையிலேயே தமிழர்கள் சர்வதேசத்தை எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் இந்தியக் குழுவினருக்கிடையே நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கள் குறித்து நேற்று ஊடகவியலாளர்ளேிடம் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
இனப்பிரச்சினைக்கான தீர்வு இலங்கை அரசாங்கத்திடம் இருந்திருக்குமானால் இந்திய அரசாங்கம் இலங்கை விவகாரத்தில் தலையிட்டிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
அதனடிப்படையில் இந்திய-இலங்கை ஒப்பந்தம், 13வது திருத்தச் சட்டம் என எதுவுமே தேவையற்றவையாக மாறியிருக்கும்.
ஆனால் இனப்பிரச்சினை தீர்வுக்கான அடிப்படைக் கொள்கைகள் கூட இலங்கை அரசாங்கத்திடம் இல்லை.
காலத்திற்கு காலம் வந்த அரசாங்கங்களும் சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையுடன் வந்து அதே சிந்தனையில் ஆட்சி செய்தார்களே தவிர இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு நினைத்திருக்கவில்லை.
யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சீனா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள், யுத்தத்திற்கு உதவி வழங்கியிருந்தன.
அப்போது இதே அரசாங்கம் கூறியது யுத்தம் நிறைவடைந்ததும் அரசியல் தீர்வு உடனடியாகவே காணப்படும் என்று. அதனையே ஜக்கிய நாடுகள் சபைக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் கூறியிருந்தது.
ஆனால் இன்று யுத்தம் நிறைவடைந்த 4 வருடங்களாகின்றன. இப்போதும் இனப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
13வது திருத்தச் சட்டம் போதாதென பிறேமதாஸ, சந்திரிக்கா, போன்ற ஜனாதிபதிகள் தொடக்கம் இன்றுள்ள மஹிந்த ராஜபக்ச வரையில் பல தீர்வுத் திட்டங்களையும், இந்த அரசாங்கம் நிபுணர்குழு, சர்வகட்சி போன்றவற்றையும் அமைத்திருந்தது.
ஆனால் இறுதியில் இவை அனைத்துமே குப்பைத் தொட்டிக்குள் போடப்பட்டு இன்று சம்பந்தனும் நானும் பேச முடியுமா எனக் கேட்கும் நிலை.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட, பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைத் தன்வசம் வைத்திருக்கும் ஒரு ஜனாதிபதியினால் இவ்வாறு பேச முடியாது. பேசினால் அவர் ஜனாதிபதியாக இருக்கவே தகுதியற்றவராகின்றார்.
எனவே நாம் மீண்டும் கூற விரும்புகின்றோம். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் தகுதியுள்ள தலைவர்கள் இந்த நாட்டில் இல்லை.
இலங்கை அரசு இனப்பிரச்சினைக்கான தீர்வினை ஒருபோதும் முன்வைக்கப் போவதில்லை!- த.தே.கூட்டமைப்பு
Reviewed by Admin
on
June 09, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment