யாழ்.வைத்தியசாலையிலிருந்து 85 டாக்டர்கள் இடமாற்றம்!- பணிகளை முடக்கும் நடவடிக்கை!- சுரேஸ் பா.உ.
யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து 85 வைத்தியர்களை ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்வது வைத்தியசாலைப் பணிகளை முடக்கும் நடவடிக்கை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்.போதனா வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் செய்யப்படவிருக்கும் வைத்தியர்களுக்கு பதிலாக பதிலீட்டு வைத்தியர்களை நியமிக்க நடவடிக்கைகள் வேண்டும்.
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு 412 வைத்தியர்கள் தேவையாக உள்ளபோதும் தற்போது 322 வைத்தியர்கள் மாத்திரமே உள்ளனர்.
இந்நிலையில் 85 வைத்தியர்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த இடமாற்றங்களை சுகாதார அமைச்சு மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.
ஒரே நேரத்தில் இவ்வளவு வைத்தியர்களை இடமாற்றம் செய்வது வைத்தியசாலைப் பணிகளை முற்றாக முடக்கும் செயல்.
போதனா வைத்தியசாலைக்கு தாதியர்களும் வைத்தியர்களும் இன்னமும் தேவை என்றார்.
இது தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளதாவது,
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற 90 வைத்தியர்களை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு சுகாதார அமைச்சின் ஊடாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
உடனடியாக வைத்தியர்களை இடமாற்றம் செய்யமுடியாது கட்டம் கட்டமாக இடமாற்றம் செய்ய முடியுமென சுகாதார அமைச்சுக்கு வைத்தியசாலை நிர்வாகத்தினர் பதில் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளனர் என யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.சிறிபவானந்தராஜா தெரிவித்தார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமைபுரியும் வைத்தியர்களின் இடமாற்றம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
மத்திய சுகாதார அமைச்சின் ஊடாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற 90 வைத்தியர்களை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி பெயர்ப் படிவம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளது.
அதில் 13 வைத்தியர்கள் எந்தவிதமான மாற்று ஏற்பாடுகளுமின்றி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற வைத்தியர்கள் ஒரு வருடத்தின் பின்னர் இடமாற்றம் பெறலாம் என்ற பழைய நடைமுறையை வைத்துக் கொண்டு இவ் நடவடிக்கையை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொண்டுள்ளது.
எமது வைத்தியசாலைக்கு 32 வைத்தியர்கள் தேவையாக உள்ள இடத்தில் 24 வைத்தியர்களே கடமையில் உள்ளனர்.
ஏற்கனவே வைத்தியர்கள் குறைவாக உள்ள இடத்தில் 90 வைத்தியர்களை இடமாற்றம் செய்து புதிய வைத்தியர்களை நியமித்தால் எமது வைத்தியசாலையின் சிகிச்சைத் தரம் குறைவடைந்து போய்விடும்.
எனவே வைத்தியர்களை கட்டம் கட்டமாக இடமாற்றம் செய்யக் கோரி சுகாதார அமைச்சுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளோம் என்றார்.
யாழ்.வைத்தியசாலையிலிருந்து 85 டாக்டர்கள் இடமாற்றம்!- பணிகளை முடக்கும் நடவடிக்கை!- சுரேஸ் பா.உ.
Reviewed by Admin
on
September 26, 2013
Rating:
Reviewed by Admin
on
September 26, 2013
Rating:


No comments:
Post a Comment