மன்னாரில் இருந்து கொழும்பிற்குச் சென்ற காணாமல் போனவர்களது உறவினர்கள் காட்டையடம்பன் பகுதியில் தடுத்து வைப்பு-மக்கள் வீதி மறிப்பு போராட்டம். படங்கள்
மன்னாரில் இருந்து கொழும்பிற்கு சென்ற காணாமல் போனவர்களது உறவினர்கள் இன்று
புதன் கிழமை காலை மன்னார் கட்டையடம்பன் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டமையினால் அந்த மக்கள் இன்று மதியம் வரை வீதி மறிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில் , , , , ,
கொழும்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் வளாகத்தில் இடம் பெற்று வரும் மனித உரிமைகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மன்னாரில் இருந்து காணாமல் போன உறவுகளின் பெற்றோர் மற்றும் குடும்ப உறவுகள் இன்று கொழும்பிற்கு செல்ல முற்பட்ட போது இன்று காலை 6.45 மணியளவில் மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் உள்ள கட்டையடம்பன் சந்தியில் படைத்தரப்பால் தடுத்து நிறுத்தப்பட்டனர் .
மன்னார் பிரஜைகள் குழுவும் , காணாமல் போனரை தேடும் குடும்பங்களின் சங்கமும் இணைந்து ஏற்படு செய்திருந்த குறித்த நிகழ்வில் கலந்து கொள்ளுவதற்காக மன்னாரில் இருந்து காலை 6 மணியளவில் மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்களது உறவினர்கள் மற்றும் பெற்றோர் என சுமார் நூற்றுக்கணக்கானவர்கள் கொழும்பு நோக்கி பயணித்துள்ளனர் .
இதன் போது காலை 6.30 மணியளவில் மன்னார் மதவாச்சி பிரதான வீதி கட்டையடம்பன் பகுதியில் இராணுவத்தினராலும் , பொலிஸாரினாலும் குறித்த மக்கள் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர் .
எனினும் அந்த மக்கள் தமது பயணத்தை தொடர அனுமதி மறுக்கப்பட்டமையினால் குறித்த பேரூந்தில் இருந்த காணாமல் போனவர்களது உறவினர்கள் காலை 9.15 மணி முதல் குறித்த வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
இதனால் மன்னார் - மதவாச்சி பிரதான வீதியூடான போக்குவரத்துகள் நீண்ட நேரம் பாதீக்கப்பட்டது சுமார் 10 மணிவரை வீதி மறியல் போராட்டம் இடம் பெற்றது .
பொலிஸார் விபரங்களை பதிவு செய்து உடனடியாக தமது பயணத்தை தொடர அனுமதி வழங்குவதாக கூறியதினை தொடர்ந்து வீதி மறிப்பு போராட்டம் கை விடப்பட்டது .
எனினும் அனைவருடைய பதிவுகளும் மேற்கொள்ளப்பட்ட போதும் அவர்கள் செல்ல அனுமதி வழங்கப்படாமையினால் மீண்டும் காலை 10.30 மணிமுதல் அந்த காணாமல் போனவர்களது உறவினர்கள் வீதியை மறித்து போராட்டதம்தில் ஈடுபட்டுள்ளனர் .
சுமார் 11.30 மணிவரை குறித்த போராட்டம் இடம் பெற்றது .
இராணுவ , பொலிஸ் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் பொலிஸார் அவர்களின் பயணத்தை தொடர அனுமதி வழங்கிய போதும் இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளனர் .
புலனாய்வுத்துறையினர் அதிகளவில் அவ்விடத்தில் பிரசன்னமாகியிருந்ததோடு இராணுவத்துடன் இணைந்து அவர்கள் காணாமல் போனவர்களது உறவினர்களை கடுமையாக அச்சுறுத்தியுள்ளனர் .
எனினும் மக்கள் அஞ்சாது தொடர்ந்தும் வீதி மறிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதோடு இராணுவத்தினருக்கு எதிராகவும் கோசங்களை எழுப்பினர் .
.இதனால் மதவாச்சி - மன்னார் பிரதான வீதியூடான போக்குவரத்துக்கள் நீண்ட நேரம் பாதிப்படைந்ததோடு வாகன நெரிசலும் ஏற்பட்டிருந்தது .
. காலை 11.30 மணிளவில் வவுனியாவிற்கு செல்வதற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டது .
ஏனைய இடங்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டதோடு பொலிஸ் பாதுகாப்புடனே செல்ல முடியும் என தெரிவித்திருந்தனர் .
இந்த நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் தமது பயணத்தை நிறுத்தி மடு திருத்தலத்திற்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டு தமது இருப்பிடங்களுக்குச் சென்றனர் .
இந்த நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் , பெற்றோர் கொழும்பிற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளமையினை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் . வினோ நோகராதலிங்கம் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் சட்டததரணி எஸ் . பிரீமூஸ் சிறாய்வா ஆகியோர் தமது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர் .
மன்னாரில் இருந்து கொழும்பிற்குச் சென்ற காணாமல் போனவர்களது உறவினர்கள் காட்டையடம்பன் பகுதியில் தடுத்து வைப்பு-மக்கள் வீதி மறிப்பு போராட்டம். படங்கள்
Reviewed by NEWMANNAR
on
November 13, 2013
Rating:

No comments:
Post a Comment