ஆஸி மற்றும் நியூசிலாந்து பிரதிநிதிகளை தடுத்து வைக்கவில்லை. இலங்கை அரசு.
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த வாரம்
இலங்கைக்கு விஜயம் செய்த நிலையில் வீசா விதிமுறைகளை மீறியதாக கண்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது .
இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டு அல்லது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக சில ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிட்டுள்ளன .
அவுஸ்திரேலிய செனட்டர் லீ ரைனோன் மற்றும் நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் லோகி ஆகியோர் சுற்றுலா வீசா அனுமதியில் இலங்கை வந்து , அந்த வீசா விதிமுறைகளை மீறியதாக அதிகாரிகளினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கடந்த 10 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சு வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது .
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கொழும்பு அலுவலகத்தில் கடந்த 10 ஆம் திகதி ஒழுங்கு செய்திருந்த ஊடக மாநாடு ஒன்றில் சில வெளிநாட்டினர் கலந்து கொள்ள உள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது .
இதனையடுத்து அதன் அதிகாரிகள் மேற்படி இரு வெளிநாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவர்களின் வீசா நிலை குறித்து விசாரித்தனர் என வெளிவிவகார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது .
ரைனோன் மற்றும் லோகி ஆகியோர் சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட போவதாகவும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்ள இருப்பதாக தெரியவந்தது .
இதனடிப்படையில் இவர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் 28 ஆம் பிரிவின் வீசா விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறியுள்ளமை தெளிவாகியது .
எனினும் எந்த சந்தர்ப்பத்திலும் இந்த வெளிநாட்டு பிரதிநிதிகள் தடுத்து வைக்கவோ , விசாரணைக்கு உட்படுத்தப்படவோ இல்லை . எனினும் சில ஊடகங்கள் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளன .
குடிவரவு அதிகாரிகள் இவர்களின் வீசாக்களை சரி பார்க்கும் முன்னர் , அவர்கள் கொழும்பில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர் .
இந்த நிலையில் நடந்த சம்பவங்களை மறைத்து ஊடகங்களும் , கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகமும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடிவரவு அதிகாரிகளினால் ரோணுகா ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதாகவும் அவர்களின் கடவூச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருந்தன .
இந்த நிலையில் நாட்டில் இருந்து வெளியேறிய இரண்டு பிரதிநிதிகளும் , இலங்கை குடிவரவு அதிகாரிகள் தமக்கு வழங்கப்பட்ட வீசா அனுமதியை மீறி செயற்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளனர் .
மாணவர்களுக்கு மாத்திரமே விசேட திட்டங்களுக்கான வீசா அனுமதி வழங்கப்படும் . எனினும் தமக்கு விசேட திட்டங்களுக்கான வீசா அனுமதி வழங்கப்பட்டதாக கூறி குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களை திசைத் திருப்ப முயற்சித்துள்ளமை துரதிஷ்டவசமானது .
அத்துடன் இவர்கள் வீசாக்களை இணையத்தளம் வழியாக பெற்றிருந்ததுடன் சிட்னியில் உள்ள இலங்கை தூதரகத்தில் பெற்றதாக தவறாக குறிப்பிட்டுள்ளனர் என்றும் வெளிவிவகார அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது .
ஆஸி மற்றும் நியூசிலாந்து பிரதிநிதிகளை தடுத்து வைக்கவில்லை. இலங்கை அரசு.
Reviewed by Author
on
November 13, 2013
Rating:
Reviewed by Author
on
November 13, 2013
Rating:


No comments:
Post a Comment