அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறியதில் உண்மை இல்லை மன்னார் ஆயர்
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, மன்னார் ஆயர் புலிகளுக்குச் சார்பாகவே செயற்பட்டு வந்தார் என்று என்னைப் பற்றி கூறியிருப்பது அத்தனையும் அப்பட்டமான பொய். இவ்வாறு மன்னார் மறை. மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆண்டகை தெரிவித் துள்ளார்.
மன்னார் மறை. மாவட்ட ஆயர் புலிக்கு சார்பாகவே செயற்பட்டு வந்தார். அதற்கு உதாரணங்கள் என்னிடம் உள்ளனவெனவும் அமைச்சர் கூறியிருக்கிறார். அவ்வாறாயின் அமைச்சர் என்னை அழைத்து விளக்கம் கேட்கட்டும். நான் சென்று விளக்க தயாராக இருக்கின்றேன். இவ்வாறு மன்னார் மறை. மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆண்டகை தெரிவித் துள்ளார்.
மன்னார் மறை. மாவட்ட ஆயர் புலிகளுக்குச் சார்பாகவே செயற்பட்டு வந்தார் என்ற கருத்தை அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல அண்மையில் தெரிவித்தமை தொடர்பாகவும் தெரிவுக்குழுவுக்கு வரும்படி ஜனாதிபதி கூட்டமைப்புக்கு விடுத்துள்ள பகிரங்க அழைப்புத் தொடர்பாகவும் ஆயர் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
என்னை ஒரு பயங்கரவாதியென்று காட்டும் தோரணையில் மடு மாதா சொரூபத்தை பாதுகாக்க இராணுவத்தினர் கேட்ட போது தான் கொடுக்க மறுத்ததாகவும் அந்த சொரூபத்தை விடுதலைப் புலிகளிடம் ஒப்படைத்ததாகவும் அப்பட்டமான பொய்யொன்றை கூறியிருக்கிறார்.
இந்த விடயத்தை அமைச்சர் எந்த இடத்திலிருந்து அவதானித்தாரோ தெரியவில்லை. இராணுவத்தினர் சொரூபத்தை தரும்படி எம்மிடம் கேட்கவுமில்லை. கேட்டிருந்தாலும் நான் கொடுத்திருக்கப் போவதுமில்லை. அதேவேளை விடுதலைப் புலிகள் சொரூபத்தை தரும்படி எம்மிடம் கேட்கவுமில்லை.
தற்போது மடு மாதாவுக்குப் பொறுப்பாக இருக்கும் மடு தேவாலய பரிபாலகர் வண. எமிலியானூஸ்பிள்ளையே அந்த நேரத்தில் மடு தேவாலயத்தின் பரிபாலகராக இருந்தார். கடுமையான ஷெல் தாக்குதல் காரணமாக அவரும் நமது சாமிமாரும் உயிரைப் பணயம் வைத்து தமது உயிர் போனாலும் பரவாயில்லையென்ற திடகாத்திரத்துடன் தேவன்பிள்ளை பங்கு ஆலயத்துக்கு சொரூபத்தை எடுத்துச்சென்று பாதுகாத்தார்கள். இதுதான் உண்மை.
குறித்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளைச் சந்திப்பதற்கு நான் மாத்திரம் செல்லவில்லை. என்னுடன் அஸ்கிரிய பீடத்தைச் சேர்ந்த வணக்கத்துக்குரிய தேரர் வந்திருந்தார். இன்னும் சொல்லப்போனால் அஸ்கிரிய பீடத்தேரர் உட்பட பல ஆயர்மார்களும் சென்றிருந்தோம். தேரர் மடுவுக்கு வந்து தங்கியிருந்தே நாம் எல்லோரும் ஒன்றாக சென்றிருந்தோம்.
அமைச்சர் கெஹெலியவும் ஏனைய சில அமைச்சர்களும் என்னைப் பற்றி தவறாக கூறுவதற்குக் காரணம், நான்தான் எல்லாவற்றுக்கும் காரணமென அவர்கள் நினைக்கிறார்கள். தற்பொழுது ஆயர் சபையின் கோரிக்கையும் என்னால் உண்டாக்கப்பட்டதென நினைக்கின்றார்கள்.
உண்மையில் எல்லா ஆயர்மாரும் ஒன்றுகூடி, ஆலோசனை செய்து ஜெபித்து மனச்சாட்சியுடன் இக்கருத்துக்களை எழுத்து வடிவுக்கு ஆயர் சபை கொண்டு வந்தது. இது எனது தனிப்பட்ட முன்னெடுப்பென்று சொல்ல முடியாது. அதில் உண்மைத்தன்மையுமில்லை.
பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தையென்று எத்தனையோ முறைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சென்றிருக்கிறது. முன்னேற்றமும் காணப்படவில்லை. நடந்ததும் ஒன்றுமில்லை. எவ்வித பயனுமற்றே போயிருக்கிறது. பேச்சுவார்த்தையின் தோல்விக்கு காரணமாக இருந்தது என்னவென்றால் அரசாங்கம் இதுவரை எச்சந்தர்ப்பத்திலும் எந்தத் தீர்வைத் தரப்போகின்றோமென்று சொன்னதுமில்லை, வைத்ததுமில்லை. அடிப்படையாக வழங்கக்கூடிய கூறுகள் என்னவென்று கூட அவர்கள் கூறியது கிடையாது.
அரசாங்கம் தீர்வாக என்ன தரப்போகின்றார்கள் என்பதை தெரிந்த பின்பே கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு போக முடியும். அவை தெரியாமல் காலத்தைக் கடத்துவதற்கும் உலகப் போக்கை திசை திருப்புவதற்கும் முயற்சி செய்யும் அரசாங்கத்தின் அழைப்புக்காக பேச்சுவார்த்தைக்குப் போக முடியாது, போகவும் கூடாது.
அரசாங்கமானது தான் எதை வாக்குறுதிகளாக சர்வதேசத்துக்கும் தமிழ் மக்களுக்கும் கூறினார்களோ அதை முதலில் நிறைவேற்றிக்காட்ட வேண்டும். அப்பொழுதுதான் நம்பிக்கை ஏற்பட முடியும். பேச்சுவார்த்தைக்கு கூட்டமைப்பு செல்ல தயங்குவதற்குக் காரணம் கடந்த காலங் களில் ஏற்பட்ட தோல்வி அனுபவங்களாகும்.
பேச்சுவார்த்தைக்குப் போவதற்கு முன் வாக்குறுதிகளை தாருங்கள் என கூட்டமைப்பு அரசாங்கத்தைக் கேட்பதற்கு இதுவே காரணமாகும். அதன் காரணமாகவே, இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிந்து போகும் என்ற அவநம்பிக்கை காரணமாகவே அவர்கள் அழைப்பை ஏற்கவில்லையென்று நம்புகின்றோம்.
2012ஆம் ஆண்டு என்ன காரணத்துக்காக பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது? என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மிகத் தெளிவாகவே குறிப்பிட்டிருந்தார். எனவேதான் பேச்சுவார்த்தையென்பது பேச்சுவார்த்தைக்கு ஆகவல்ல என்பதை உணர்ந்து கொண்டு ஒரு நல்ல முடிவையும் தீர்வையும் தர வேண்டுமென்பதை சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
ஆயர் சபையினர் கூட்டமைப்புடன் அர சாங்கம் பேச வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது என்பது உண்மையே. அவ்வாறு அவர்கள் கோரிக்கை விட்டிருப்பதனால் அதில் உண்மையுள்ளதா? இல்லையா? என்பதை ஆராய்ந்து தீர்மானம் எடுக்க வேண்டிய பொறுப்பு அர சாங்கத்தைச் சார்ந்தது.
ஆயர் சபையின் கோரிக்கையானது நாட்டின் நன்மை கருதியே விடுக்கப்பட்டுள்ளது. அதை ஏற்பதும், ஏற்காமல் விடுவதும் அரசாங்கத்தைப் பொறுத்தது. கடந்த நூறு வருடங்களுக்கு மேலாக இப்பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு தரப்பினர் முயற்சி செய்து வந்துள்ளார்கள்.
ஆனால் இலங்கை அரசாங்கங்களோ எந்தவிதமான முயற்சிகளையும் எடுக்கவில்லையென்றே கூற வேண்டும். இந்த அரசாங்கம் மாத்திரமல்ல இதற்கு முன்னைய அரசாங்கங்களும் காலத்தை கடத்தி வந்ததே தவிர காத்திரமான எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லையென்பதே உண்மை.
இந்த வரலாற்றுப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டே கத்தோலிக்க ஆயர் மன்றம் குறித்த கோரிக்கைகளை முன் வைத்திருக்கின்றது. ஆயர் மன்ற கோரிக்கை என்பது தன்னிச்சையாக எழுந்த ஒரு விடயமல்ல. மக்களுடன் கலந்து ஆலோசித்தமை அவர்களின் கருத்துக்கள் அபிலாஷைகளின் அடிப்படையிலேயே ஆயர் மன்றம் தமது கருத்தை முன்வைத்துள்ளது.
அந்த வகையில்தான் அரசாங்கம் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை வைக்க வேண்டும். நல்ல அடிப்படையுடன் வைக்க வேண்டும். இதய சுத்தியுடன் வைக்க வேண்டுமென இலக்கை அடைய வேண்டுமென்ற நோக்கத்துடன் வைக்க வேண்டும். அதுமாத்திரமன்றி அடிப்படைக் கூறுகள் என்ன? என்ன அடிப்படையில் அரசியல் தீர்வைத் தரப்போகின்றீர்கள் என்பதை அரசாங்கம் முன்வைக்க வேண்டும்.
அவ்வாறு வைக்கும்போது தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம், வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் பூரண சுயநிர்ணய உரிமை உடையவர்கள். ஒரே நாட்டின் கீழ் தங்களைத் தாங்களே ஆள்வதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கின்றது என்ற அடிப்படைத் தத்துவங்களைக் கொண்டதாகவே பேச்சுவார்த்தை இடம்பெற வேண்டும்.
அப்பொழுதுதான் பேச்சுவார்த்தை வெற்றியாக நிறைவேற முடியும். கண்துடைப்புக்காக கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு செல்ல முடியாது. எனவேதான் ஆயர்மன்றம் கூறிய விடயங்களை அரசாங்கம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
ஒற்றையாட்சி முறையொன்றின் மூலம் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க முடியாது. 13வது அரசியல் சாசனத்திலும் எல்லாம் பிடுங்கி எடுக்கப்பட்டு வெறும்கோதே கையளிக்கப்பட்டுள்ளது. ஒற்றையாட்சியென்ற பதம் ஒரே நாடு ஒரே மக்கள் என்ற தத்துவத்தைச் சொல்லிக்கொண்டேயிருக் கிறது. உண்மையில் இந்த நாடு, ஒரே நாடு என்ற போதிலும் பல்லின மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அரசாங் கம் ஏற்றுக்கொள்வதாகவில்லை.
எனவே இந்த கோட்பாடு நீக்கப்பட வேண்டும். பெளத்த மதம்தான் தேசிய மதம் என்ற சிறப்பான மதிப்பு வழங்கப்படக் கூடாது. எல்லா மதங்களையும் ஒருசேர மதிக்க வேண்டும். ஆனால் இலங்கையில் நடப்பதென்னவென்றால் எல்லா மதமும் சமமானதுதான். ஆனால் பெளத்த மதமே பெரியது என்ற உயர்வு பாராட்டப்படுகிறது.
இது விபரீதமான நிலைப்பாடாக இருக்கின்றது. அது மாற்றப்பட வேண்டும். எல்லா மதங்களுக்கும் மொழிகளுக்கும் இந்த நாட்டில் சமத்தன்மை வழங்கப்பட வேண்டும். இது கொண்டு வரப்பட வேண்டுமானால் ஒற்றையாட்சியை வகுத்துக் கொண்டிருக்கின்ற இலங்கை அரசியல் அமைப்பு மாற்றப்பட வேண்டும்.
இரா.சம்பந்தன் அவர்களையும், முதல் அமைச்சர் அவர்களையும் பேச்சுவார்த்தைக்கு இலங்கையரசாங்கம் அழைத்திருந்தாலும் நாங்கள் அழைத்தோம் அவர்கள் வரவில்லையென போக்குக்காட்டவே கூட்ட மைப்பு அரசாங்கத்தால் அழைக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாக அமையுமென கூட்டமைப்பு நம்பினால் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு போக தயங்கமாட்டார்கள்.
சர்வதேசமும் ஏனையவர்களும் கொடுக்கின்ற அழுத்தம் காரணமாகவே அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறதே தவிர மற்றும்படி எதையும் தந்துவிடுவதற்காக அல்ல. எக்காரணங்கொண்டும் இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரப் போவதேயில்லை. இதுதான் உண்மை நிலை.
சர்வதேசத்திலிருந்தும் ஏனைய தரப்பினரிடமிருந்தும் இந்த அரசாங்கத்துக்கு தொடர்ச்சியான அழுத்தம் கொடுக்கப்பட்டாலே தவிர மற்றும்படி ஒன்றும் நடக்கப்போவதில்லை. அப்படி அழுத்தம் வந்தால்தான் எமக்கு நம்பிக்கை பிறக்கும்.
எங்களைப் பொறுத்தவரை நாம் ஏமாற்றப்பட்ட இனமாகவே தொடர்ந்தும் இருந்து கொண்டிருக்கின்றோம் என்பதே உண்மை. இலங்கையரசாங்கமானது தமது மக்களிடம் சென்று இப்படியொரு தீர்வை நாங்கள் வழங்கப்போகிறோம். அதற்கு உங்களுடைய ஆதரவு தேவையென்ற விடயத்தை சிங்கள மக்களிடம் சொன்னதும் கிடையாது, கேட்டதும் கிடையாது.
ஒரு சதவீதமான முயற்சியைக் கூட இலங்கை அரசாங்கம் இதுவரை எடுக்க வில்லை. தனிநாடு தமிழர்கள் கேட்கிறார்கள். தமிழ் ஈழம் கேட்கிறார்கள் என்று விஷக்கருத்தை தம் மக்களிடம் விதைத்து வருகிறார்களே தவிர, உண்மை நிலையை சிங்கள மக்களிடம் எடுத்துக் கூற எந்த ஒரு பேரின அரசாங்கமும் முயற்சி மேற்கொள்ளவில்லையென்றே கூற வேண்டும்.
சர்வதேசமானது இலங்கையில் நிலவி வரும் பிரச்சினைகளை பரிபூரணமாக ஆராய்ந்து அறிந்து முக்கியமாக போர்க்காலத்தில் என்ன குற்றம் இழைக்கப்பட்டது. அப்பாவி பொதுமக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள். மனித உரிமை மீறல்கள் எப்படி நடந்துள்ளன.
மனிதாபிமான ஒழுங்கு முறைகள் பின்பற்றப்படவில்லை, போர் வரையறைகள் காப்பாற்றப்படவில்லையென்ற காரணங்களின் அடிப்படையிலேயே சர்வதேசம் இதனைப் புரிந்து கொண்டு இலங்கையில் சமாதான வாழ்வு முறைகொண்டு வரப்பட வேண்டுமென்பதற்காக பாடுபட்டு வருகின்றார்கள்.
சர்வதேசமாகிய தங்களுக்கு ஒரு பொறுப்பும் கடமையும் உண்டு என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டிருப்பதனாலேயே, இலங்கையில் நிலையான சமாதானமொன்றைக் கொண்டு வரவேண்டுமென்ற நோக்கில் பல்வேறு முயற்சிகளை சர்வதேசம் எடுத்து வருகிறது. இதை தண்டனையாகவோ, தங்களுக்கு கெளரவம் இல்லாமல் போய் விடுமென்றோ இலங்கையரசாங்கம் நினைத்து விடக்கூடாது.
ஆகவேதான் தூரப் பார்வையுடன் நாட்டின் நன்மை கருதி இலங்கையரசு நடந்து கொள்ள வேண்டும். எனவே தான் இலங்கையரசாங்கமானது நாட்டின் எதிர்கால நன்மை கருதி சர்வதேச சமூகத்துடன் ஒத்துப்போக வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என ஆயர் தெரிவித்தார்.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறியதில் உண்மை இல்லை மன்னார் ஆயர்
Reviewed by Admin
on
December 29, 2013
Rating:

No comments:
Post a Comment