அண்மைய செய்திகள்

recent
-

யாழில் வித்தியாவின் தாய், சகோதரனைச் சந்தித்தார் ஜனாதிபதி-Photos


யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் வித்தியாவின் தாயார் மற்றும் சகோதரனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்க்கிழமை மதியம் ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடினார். மதிய போசனத்துடனான இந்த சந்திப்பில் வித்தியாவின் குடும்பத்தாரின் துயரத்தைக் கேட்டறிந்த ஜனாதிபதி, அவர்களுக்கு தன்னாலான முழு உதவிகளையும் வழங்க உறுதியளித்தார்.

மகளிர் விவகார பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு இன்று திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னதாக வேம்படி மகளிர் உயர்தர பாடசாலைக்குச் சென்று மாணவர்களையும் ஆசிரியர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின் பின்னர் ஆளுநர் அலுவலகத்தில் வித்தியாவின் தாயார் மற்றும் சகோதரனை ஜனாதிபதி சந்தித்தார்.

ஜனாதிபதியின் யாழ்ப்பாணம் விஜயம் குறித்து மகளிர் விவகார பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை தொடர்புகொண்டு கேட்டபோது,

வித்தியாவின் படுகொலைக்குப் பின்னரான நிலைமையை நேரடியாகப் பார்வையிட வேண்டுமெனக் கேட்டதற்கு இணங்க அவர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார்.

இதன்போது வித்தியாவின் தாயார், சகோதரனை அவர் சந்தித்து தனது அனுதாபத்தை வெளியிட்டதோடு, அவர்களது பாதுகாப்பு குறித்தும் தான் கவனம் செலுத்துவார் என்றும் உறுதியளித்தார். புங்குடுதீவுக்கு ஜனாதிபதி செல்ல வேண்டும் என்றே நாம் எதிர்பார்த்தோம். அவரும் அதில் விருப்பமாக இருந்தார்.

ஆனால் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் அதற்கான அனுமதியை வழங்கவில்லை. அவ்வாறு ஜனாதிபதி புங்குடுதீவுக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்திருந்தால் தீவகத்தின் நிலைமையை தெளிவுபடுத்தியிருக்க முடியும். அதற்குச் சிலர் அனுமதிக்காமை வருத்தமளிக்கிறது.

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலைக்குப் பின்னர் கடந்த 20 ஆம் திகதி நீதிமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உண்மையில் அவர்களில் பலர் அப்பாவிகள். குறிப்பாக பாடசாலை மாணவர்கள் 30 பேர், பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேர், மரணவீட்டுக்கு பாண்ட் இசைத்துவிட்டு வந்தவர்கள் 07 பேர் என பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் குறித்து உண்மையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதியிடம் நாம் கேட்டுக் கொண்டோம். அதற்கு ஜனாதிபதி இது குறித்து தான் கவனம் செலுத்துவார் என்று உறுதியளித்தார். – என்று பிரதியமைச்சர் விஜயகலா தெரிவித்தார். இந்தச் சந்திப்புக்களின் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.





யாழில் வித்தியாவின் தாய், சகோதரனைச் சந்தித்தார் ஜனாதிபதி-Photos Reviewed by NEWMANNAR on May 26, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.