இலங்கை கணக்காய்வு தேர்வுகளில் உள்ள குழறுபடிகளால் தமிழ் பரீட்சார்த்திகள் பாதிப்பு
கடந்த வருடமும் இந்த வருடமும் நடத்தப்பட்ட இலங்கை கணக்காய்வு சேவை பரீட்சைகளில், வினாத்தாள்களில் இடம்பெற்றுள்ள மொழி பெயர்ப்பு குழறுபடிகளால் புள்ளிகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் தமிழ் பரீட்சார்த்திகள் சித்தியடையாது பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிங்கள மொழியில் தெரிவு செய்யப்படும் வினாத்தாள்கள் சிங்களத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்படும்போது மொழி பெயர்ப்பாளர்களில் உள்ள பாரிய குறைபாடு காரணமாக வினாக்களின் அர்த்தங்களிலும் பொருள்களிலும் தவறுகள் நிகழ்ந்துள்ள நிலையில் தமிழ் பரீட்சார்த்திகளால் சரிவர விடையளிக்க முடியாமல் போயுள்ளது.
புள்ளியிடல் திட்டம் இரண்டு மொழி பிரிவினருக்கும் ஒன்று என்பதால் சிங்கள மொழி பரீட்சார்த்திகள் பெருமளவானோர் சித்தியடைந்தும் தமிழ் பரீட்சார்த்திகள் சித்தியடையாத நிலையும் காணப்படுகின்றது.
இலங்கை கணக்காய்வு சேவையின் கணக்காய்வு அத்தியட்சகர்களை சேர்த்துக்கொள்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை 2014(2015) வினாத்தாளில் வினா இலக்கம் 4ன் பகுதியில் வினாக்களில் சிங்கள மொழியில் 'பகுப்பாய்வு மீளாய்வு" என்று காணப்படுவது தமிழில் 'பகுப்பாய்வு நடவடிக்கை" என காணப்படுகின்றது.
சிங்கள மொழியில் “கணக்காய்வு நிகழ்ச்சி திட்டம்” தமிழ் மொழியில்“'கணக்காய்வு வேலைத்திட்டம்" எனவும் சிங்கள மொழியில் “அறிக்கைகள் மற்றும் ஆவணங்கள்” எனப்படுவது தமிழில் “அறிக்கைகள் மற்றும் ஏடுகள்” என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
சுமார் 20 புள்ளிகளுக்கான வினாக்களில் இந்த தவறுகள் நிகழ்ந்துள்ளதால் தமிழ் மொழி பரீட்சார்த்திகள் அந்த 20 புள்ளிகளுக்குரிய வினாவை மொழி பெயர்ப்பு குழறுபடி காரணமாக சரியாக எதிர்கொள்ளாத நிலையில் அவர்களின் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கணக்காய்வு தேர்வுகளில் உள்ள குழறுபடிகளால் தமிழ் பரீட்சார்த்திகள் பாதிப்பு
Reviewed by NEWMANNAR
on
June 01, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
June 01, 2015
Rating:


No comments:
Post a Comment