நல்லதை தொடர்ந்து செய்வோம் எதையும் மறக்கமாட்டேன் : பிளேட்டர்
"எல்லோரையும் மன்னித்துவிட்டேன். ஆனால் எதையும் மறக்கமாட்டேன்' என்று 5-ஆவது முறையாக சர்வதேச கால்பந்து அமைப்பின் (பிபா) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட செப் பிளேட்டர் கூறியுள்ளார்.
பிபா அமைப்பில் ஊழல்இலஞ்சம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் அதன் இரண்டு துணைத் தலைவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊழல் மலிந்துவிட்டதால் பிளேட்டர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்த சூழ்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலையில் பிபா கூட்டம் நடந்துகொண்டிருந்த ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் தலைவர் பதவிக்கான தேர்தல் தாமதமாகத் தொடங்கியது.
பின்னர் நடந்த வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்றின் முடிவில், வெற்றிக்கு தேவையான 140 வாக்குகளில் பிளேட்டர் 133 வாக்குகளைப் பெற்றிருந்தார். ஜோர்டான் இளவரசர் அல் ஹூசைன் 73 வாக்குகளை பெற்றிருந்தார். தொடர்ந்து இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்க இருந்த நேரத்தில் திடீரென போட்டியிலிருந்து தான் விலகுவதாகவும், தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பிளேட்டரை எதிர்த்து போட்டியிட்ட ஜோர்டான் இளவரசர் அலி பின் அல் ஹூசைன் அறிவித்தார்.
இதனால் 79 வயதான செப் பிளேட்டர் மீண்டும் தலைவராக தேர்வானார். 209 நாடுகளின் உறுப்பினர்கள் செலுத்திய வாக்குகளில் பிளேட்டருக்கு மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைத்தது. இதில் ஐரோப்பாவின் 53 வாக்குகள் இளவரசர் அல் ஹூசைனுக்கு கிடைத்தன. ஐரோப்பா தவிர அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளும் அல் ஹூசைனுக்கு வாக்களித்தன.
ஆனால் அதிக வாக்குகளை கொண்ட ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களை சேர்ந்த உறுப்பினர்கள் பிளேட்டரை மீண்டும் தலைவராக தேர்ந்தெடுத்தனர்.
வெற்றிக்குப் பின்னர் பிளேட்டர் பேசும்போது, "என் மீதான குற்றச்சாட்டுகள் எனக்கு அதிர்ச்சி அளித்தன. பிபா தலைவர் என்ற முறையில் இன்னொரு அமைப்பில் என்ன நடக்கிறது என்று உறுதியாக தெரியாத போது என்னால் கருத்து சொல்ல இயலாது.
நான் சிறந்தவன் இல்லை எனில் யாருமே சிறந்தவர் கிடையாது. நல்லதை நாங்கள் தொடர்ந்து செய்வோம்' என்றார்.தான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்திய ஐரோப்பிய யூனியன் கால்பந்து அமைப்பின் தலைவர் மைக்கேல் பிளாட்டினியை மன்னிப்பீர்களா? என்ற கேள்விக்கு "எல்லோரையும் நான் மன்னித்துவிட்டேன். ஆனால் எதையும் நான் மறக்கமாட்டேன்' என்றார் பிளேட்டர்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தேர்தல் முடிவு குறித்து கூறுகையில்,
"பிளேட்டர் மீண்டும் தலைவர் ஆவதை தடுக்கும் முயற்சிகள் தகர்க்கப்பட்டுள்ளன. 2018-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை நடத்த எங்கள் நாட்டுக்கு வாய்ப்பளித்ததற்காக பிளேட்டருக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர் என்றார்.
நல்லதை தொடர்ந்து செய்வோம் எதையும் மறக்கமாட்டேன் : பிளேட்டர்
Reviewed by Author
on
June 01, 2015
Rating:
Reviewed by Author
on
June 01, 2015
Rating:

No comments:
Post a Comment