மன்னார் இணையத்தின் விம்பம் ஊடாக மூத்த கலைஞர் மன்னாமணி என அழைக்கப்படும் அலேசு மரியதாஸ் அவர்களின் அகத்தில் இருந்து…
கலைஞனின் அகம்
கணனியில் முகம்
கலைஞனின் அகம் கணனியில் முகம் இப்பகுதியில் விம்பம் ஊடாக எம்மை காணவருபவர் ஓய்வு பெற்ற உதவி அரசாங்க அதிபர் கவிஞர் சமூகசேவகர் மூத்த கலைஞர் மன்னாமணி என அழைக்கப்படும் அலேசு மரியதாஸ் அவர்களின் அகத்தில் இருந்து…
தங்களைப்பற்றி?
எனது செந்த இடம் மன்னார் மாவட்டத்தில் நானாட்டன் உள்ள நெஞ்சை அள்ளும் வஞ்சியன்குளம் தான் அங்கு தான் எனது ஆரம்பக்கல்வியையும் எருக்கலம்பிட்டி மகாவித்தியாலயத்தில் சாதாரண தரம் உயர் தரக்கல்வியையும் கற்றுதேறிய நான் உதவி முகாமைத்துவ உதவியாளர் பரீட்சையில் சித்தியடைந்து பின் பொதுமுகாமைத்துவ பரீட்சைகள் சித்தியடைந்து படிப்படியாக பதவி உயர்வு பெற்று அதியுயர் பதவியான மாந்தை மேற்கு பிரதேசத்திற்கு உதவி அரசாங்க அதிபராக 4 வருடங்களும் மடுப்பிரதேசத்தில் 2 வருடங்களும் பின்னர் மன்னாரில் நிர்வாக அதிகாரியாக கடமையாற்றி ஓய்வூபெற்றுள்ளேன்.
தங்களின் கலைப்பிரவேசம் பற்றி?
1967-2015 வரை நான் கலையோடு தான் இருக்கிறேன் முழுமையாக இல்லாவிட்டாலும் ஈடுபாடு அதிகமாகவே உள்ளது. நான் ஆரம்பத்திலே சிரித்திரன் வாசகராக இருந்தேன் சிரித்திரன் நகைச்சுவை இதழ் 1967 ல் கேள்வி எழுதி துணுக்குகள் கவிதை –சிறுகதை என எழுதத்தொடங்கினேன் எனது முதலாவது சிறுகதை டாக்டர் என் கணவர் எழுதினேன் நகைச்சுவையாக அமைந்தது. புதிய உலகம்--பாதுகாவலன்--போன்ற இதழ்களிலும் மன்னா—தினக்குரல்--வீரகேசரி போன்ற பத்திரிகைளிலும் எழுதினேன் எழுதிவருகிறேன்.
1967 ல் எழுத்துப்பணியினை ஆரம்பித்த நீங்கள் ஏன் எழுதியவைகளை நூலாக்கவில்லை?
நூலாக்கும் எண்ணம் இருந்தது தான் ஆனால் அதற்கான பொருளாதார வசதியின்மையினால் அவ்வெண்ணம் அப்படியேதான் இருந்தது அத்தோடு எனது வேலையூம் தொடர்ச்சியான சேவையூம் என்னை முழுமையாக எழுத்துப்பணியில் ஈடுபடமுடியாமல் போனது எனக்கு வருத்தம் தான் இப்போதும் எனது முதுமையும் இயலாமையும் சேர்ந்து கட்டிப்போட்டுள்ளது காலம் வழிவிட்டால் கடவுள் நினைத்தால் நிகழும்.
ஓய்வு பெற்ற அரசாங்க அதிபர் என்ற வகையில் மன்னார் மாவட்டத்தின் அன்றைய நிலையு ம் இன்றைய நிலையு ம் பற்றி?
அந்தக்காலத்தில் ஆளணிகள் குறைவாக இருந்தாலும் மக்களுக்கு முழுமையான சேவையை வழங்கக்கூடியதாக இருந்தது தற்போதைய நிலையில் ஏராளமான ஆளணி வசதிகள் ஏனைய வசதிகள் இருந்தும் குறிப்பிட்ட அளவுதான் மக்களுக்கான சேவைகள் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றது என்பதுதான் எனது கருத்து.
தங்கள் சேவைக்காலத்தில் தங்களால் நிகழ்த்தப்பட்ட சாதனை என எதைக்கருதுவீர்கள்?
எனது சேவைக்காலத்தில் அந்தோனியார்புரம் தேவன்பிட்டிக்கிராமம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. மக்களின் நலன் கருதி பயிர்ச்செய்கை திடடத்தை வாழ்வுதயத்தின் உதவியோடு முன்னெடுத்தோம் அது போல பல அபிவிருத்திகளை போராட்ட காலங்களிலும் தொடார்ச்சியாக செய்தோம் குறிப்பாக அன்றைய சூழலில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தேவைகளையே நிறைவேற்றுவதே முக்கியமான சேவையாக இருந்தது என்னால் முடிந்தவரை செயலாற்றியுள்ளேன் என்பது எனக்கு பெரும் மகிழ்ச்சிதான்.
தங்களது முதலாவது சிறுகதை கவிதை பற்றி?
முதலாவது சிறுகதை
“கை நனைக்காதவர்கள்” எனும் எனது முதலாவது எழுச்சி சிறுகதை என்பேன் நான் எழுதிய சிறுகதைகள் புரட்சிகரமானதாக அமையும். எங்கள் கிராமத்தில் பல விடையங்கள் உள்ளது அதில் என் மனதை மிகவும் பாதித்த விடையம் ஒன்று சாதி அந்தஸ்து உயர் குலம் தாழ்ந்த குலம் பார் ப்பார்கள் எதுவும் சடங்குகள் விழாக்களில் கலந்து கொண்டாலும் “கை நனைக்கமாட்டார்கள் அப்படியென்றால் சாப்பிடமாட்டார்கள்” இதன் தாக்கம் என்னை மிகவும் தொட்டது அதையே சிறுகதையாக “கை நனைக்காதவர்கள்” எனும் தலைப்பில் எழுதினேன் இச்சிறுகதை எனது கிராமத்தில் பெரும் தாக்கத்தினையும் சர்ச்சையினையும் ஏற்படுத்தியது ஏற்படுத்தினாலும் காலப்போக்கில் சகல மக்களும் சமமாக எல்லோர் வீட்டிலும் கை நனைக்க பழகிக்கொண்டார்கள் இலக்கியத்தால் சமுதாயத்தில் பாரிய மாற்றங்களை கொண்டுவர முடியும் என்பதை எனது சிறுகதையின் மூலம் உணர்ந்து கொண்டேன் சந்தோஷமும் சாதனையும் என்பேன்.
முதலாவது கவிதை எனும் போது?
எனது பால்ய வயதில் நண்பார்களோடு சேர்ந்து விளையாட்டாக சொன்னது நீங்கள் கேட்டதிற்காக சொல்கிறேன்
உனக்கென்ன…
தூக்கி இறக்கி…
இறுக்கி உடுத்துகின்றாய்
எனக்கென்றால் எள்ளளவும்
உறக்கம் எழுவதில்லை அறிவாயோ…
இப்படியாக பல கவிதைகள் எழுதியுள்ளேன் மாவட்டம் தேசியமட்டம் என பல பரிசில்களையும் பெற்றுள்ளேன்.
சிறுகதைகள்
டாக்டர் என் கணவர்
கை நனைக்காதவர் கள்
நூலில் தொங்கும் விருதுகள்- 1ம் இடம்(2007)
விடிவு
ஓடிப்போனவள்
கவிதைகள்
மக்கள் மனங்களில் என்றும் மகிழ்வுடன் குடியிருப்போம்-3ம் இடம் தேசியமட்டம் 2007
சகலதிலும் சமபங்கு- 2ம் இடம் மருதூர் வாணன் சஞ்சிகை 2006
கவிதை 2005 மன்னார் பிரதேசசெயலகத்தினால் போட்டியில் 2ம் இடம்
கவிதை சிறுகதை மன்னார் மாவட்டபோட்டியில் 1ம்-2ம் இடம்
இதுவரை கிடைக்கப்பெற்ற விருதுகளும் பட்டங்களும்?
2003 - எனது சொந்தக்கிராமமக்களால் “கவித்தென்றல் பட்டமும் தங்கப்பதக்கமும் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டேன்.
2007 தேசிய மட்ட கவிதைப்போட்டியில் வெற்றி பெற்றமைக்கான சான்றிதல்(அரசநிர்வாகமற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு)
2008 கலைஞருக்கான விருது மன்னார் பிரதேச செயலகம்
2010 இலக்கியத்துறைக்கான பாராட்டு விருது( மன்னார் தமிழ்ச்சங்கம்)
2013 “கலாபூஷணம் அரச விருது கலாச்சார திணைக்களம் மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு.
20-09-2014 கலாபூஷண விருது பெற்றமைக்கான மன்னார் ஆயர் அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு(முருங்கன் முத்தமிழ் கலா மன்றம் பொன்விழாவில்)
04-12-2014 கலாபூஷண விருது பெற்றமைக்கான பாராட்டி விருது (வஞ்சியன் குளம் பாடசாலை சமூகம்)
11-02-2014 வீதி அபிவிருத்தி சாதனை விருது
தங்களின் சேவைக்காலம் பற்றி?
எழுதுனர்
பிரதம எழுதுனர்
பதவியணி அலுவலர்
நிருவாக அலுவலர்
உள்ளககணக்காய்வாளர்
உதவி அரசாங்க அதிபர்
தற்போது சமூக சேவையில்
மன்னார் தமிழ்ச்சங்க உறுப்பினர்
மன்னார் சர்வமதபேரவையின் உறுப்பினர்
மன்னர் மணி என புனை பெயர் வைத்துக் கொண்டதிற்கு காரணம்?
நான் தற்போது தான் மன்னாரில் வசிக்கின்றேன் எனது சொந்த இடம் நானாட்டான் வஞ்சியன்குளம் அங்கு இருந்தாலும் என்னவோ மன்னார் மண்ணில் இனம்புரியாத பற்று. நான் சிறுவயதிலே என்னை மன்னார் மணி என்று அழைப்பதைத்தான் விரும்புவேன் பல கவிதைகள் சிறுகதைகள் மன்னார் மணி எனும் பெயரில்தான் எழுதிவருகின்றேன் தற்போது மன்னாரில் மன்னார் மணி என்று கேட்டால் தான் பலருக்கு தெரியும் அந்தளவிற்கு உள்ளது முருங்கனில் வசிக்கும் கலைத்தவசிக்கு குழந்தை எவ்வாறு அமைந்ததோ அதுபோல எனக்கு நான் அமைத்துக்கொண்டேன்.
உங்களை மிகவும் கவர்ந்த கலைஞர் என்றால் யாரை சொல்வீர்கள்?
என்னை கவர்ந்த கலைஞர் என்றால் அது கலைக்காகவே வாழ்கின்ற கலைஞர் குழந்தை மாஸ்டர் செபமாலை) அவர்களைத்தான் சொல்வேன் ஏன் என்றால் அவரின் நாட்டுக்கூத்து நாடகங்களை கல்வெட்டுப்பாடல்களை கவிதையரங்குகளை பார்த்தும் ஓரிரு நாடகங்களில் நடித்தும் மேடைகளில் பேச்சாளனாக கலந்தும் கொண்டும் பார்த்தே வளர்ந்தவன் பல முறை வியந்து போயிருக்கிறேன் அவரின் கலையார்வம் அர்ப்பணிப்பு விடாமுயற்சி தனியாளாக நின்று மன்னாரின் கலைப்பரம்பரியம் முன்னேற முன்னோடியாக அவரை நான் கண்டுணர்ந்தேன் அவர் மன்னாரின் பொக்கிஷம் அவர் தான் என்மனம் கவர்ந்த கலைஞர் கலைத்தவசி குழந்தை மாஸ்டர் என்பேன் எனக்கு மட்டுமல்ல மன்னாரில் இருக்கும் பலருக்கும் அவரைப்பிடிக்கும்.
தற்போதைய இளைஞர் யுவதிகளுக்கு தங்களின் அனுபவப்பகிர்வு?
கருத்து அறிவுரை எனும் போது யார் யார் சொல்லிக் கேட்கிறார்கள் ஒருவருக்கிடையிலும் புரிந்துணர்வு என்பது இல்லை குறிப்பாக இளம் கலைஞர்கள் மூத்த கலைஞர்கள் இவர்களுக்கிடையிலே இடைவெளி அதிகமாகவுள்ளது இதனால்தான் மன்னார் மாவட்டம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் அங்கும் குளறுபடிகள் பிரச்சினைகள் உள்ளது இவர்களுக்கிடையிலான இடைவெளி குறைந்து ஒருமித்து ஒற்றுமையாக செயற்பட்டால் தான் மன்னார் மாவட்டம் சிறப்படையும் இளைஞர்கள் யுவதிகள் எவராக இருந்தாலும் சிந்தனை தெளிவும் பெரியவர்களின் ஆலோசனையும் கடவு ளின் ஆசீர் வாதமும் உடன் இருப்பின் எல்லாமே வெற்றியளிக்கும்.
மன்னாரில் ஏன் கலைஞர்களை கண்டு கொள்கிறார்கள் இல்லை?
மன்னாரில் மட்டுமல்ல இப்போது எல்லா மாவட்டங்களிலும் மக்கள் நகரவாழ்க்கயைத்தான் விரும்புகிறார்கள் அதனால் கலைப்பாரம்பரியம் கலைவளர்ச்சி எதையும் யாரும் விரும்புவதில்லை தற்போது தேவையும் இல்லை என்று நினைக்கின்றார்கள் அதனால் தான் நாட்டுக்கூத்து பாரம்பரியமான பல விடையங்கள் காணமல் போய்கொண்டு இருக்கிறது. இலக்கியசசுவை அதன் தரம் அறிந்திராதவர்களிடம் எவ்வாறு கலைஞர்கள் தங்களுக்கான அங்கீகாரத்தினையும் கௌரவத்தினையும் எதிர்பார்க்க முடியும் அதை நினைத்து கவலைப்படுவதால் பயன் எதுவுமே இல்லை…
கலாபூஷண விருது கவித்தென்றல் விருது இவை இரண்டில் எதைப்பெறும் போது மட்டற்ற மகிழ்ச்சியடைந்தீர்கள்?
கலாபூஷண விருது தேசிய விருது மகிழ்ச்சிதான் ஆனாலும் எனது கிராமத்தில் என்னை கௌரவித்து எனது மக்களால் தந்த கவித்தென்றல் விருது தான் எனக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது. அந்த கை நனைக்காதவர்கள் சிறுகதை எழுதியபின்புதான் விருது கிடைத்தது. பைபிளில் ஒரு வசனம் உண்டு எந்தவொரு தீர்க்கதரிசியும் தனது சொந்த இடத்தில் மதிக்கப்படுவதில்லை அந்த இறைவசனத்தினையும் எனது மக்களால் கவித்தென்றல் விருதும் பொன்னாடையும் பொற்கிளியும் பெற்றது மட்டற்ற மகிழ்ச்சிதானே மறக்குமா மனம்.
உங்கள் வளர்ச்சிக்கு காரணம் எது என கருதுகிறீர்கள்?
அருமையான கேள்வி எனது வளர்ச்சிக்கு எனது எண்ணங்கள் தான் எனக்கு மட்டுமல்ல ஒவ்வொருவருக்கும் அவரது உயர்ந்த எண்ணங்கள் தான் உயர்த்தும் இந்தியா முனனாள் ஜனாதிபதி அப்துல்கலாமும் சொன்னார் கனவு காணுங்கள் என்று அது போலவே மன்னார் மாவட்ட முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் பி.எம்.சூசைதாசன் வங்காலையில் ஒரு விழாவில் பேசும் போது ஒவ்வொருவரும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் அதிகூடுதலான உயரத்தினை நினையுங்கள் அப்போதுதான் அரைவாசியாவது அடைவீர்கள் இவரின் வசனம் என் உள்ளத்தில் புடம் போட்டது.
நான் 19 வயதிலே எழுதுவினைஞராக பொறுப்பேற்றேன் அப்போது நினைத்தேன் படிப்படியாக பதவி உயர்வு பெற்று உதவி அரசாங்க அதிபராக வரவேண்டும் என நினைத்தேன் அதுபோலவே ஆனேன் அவ்வாறே சொக்கலிங்கம் ஐயாவைப்பார்த்து நானும் ஒரு பேச்சாளனாக வரவேண்டும் என நினைத்தேன் அவ்வாறே பேச்சாளனானேன் குழந்தை மாஸ்ரரைப்பார்த்து நானும் எனக்கு புனைபெயரொன்றை வைத்து பெயர் பெறவேண்டும் என எண்ணி மன்னார் மணி என்று பெயர் வைத்தேன் நினைத்தது போலவே ஒவ்வொன்றிலும் நிலைத்து நிற்கிறேன் உங்கள் எண்ணங்கள் உயரத்தில் இருந்தால் நீங்களும் உயரத்தில் இருப்பீர்கள் எண்ணமே வாழ்வு …
மன்னார் மக்களின் நெஞ்சில் நிலைத்து நிற்கும் மன்னார் இணையம் பற்றி தங்களின் பகிர்வு ?
எனக்கு தற்போது வயது 63 இலக்கியச்சேவையில் 48 வருடங்களை பூர்த்தி செய்துள்ளேன் இன்னும் தொடர்கிறேன் இதுதான் எனக்கு முதலாவது செவ்வி என்னையும் யாரும் செவ்வி காணவரவில்லை அந்தளவிற்கு நான் இன்னும் வளரவில்லையோ…! என்ற ஏக்கமும் கேள்வியும்…? என்னுள் இருந்து கொண்டே இருந்தது இன்று மன்னார் இணையத்தின் மூலம் என்னையும் செவ்வி கண்டதன் மூலம் எனது நெடுநாள் ஏக்கமும் கவலையும் தீர்ந்தது மகிழ்ச்சியாகவுள்ளது எந்தளவிற்கு அளப்பரிய சேவையினை செய்கின்றீகள் என்று வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது இச்சேவை இடைவிடாது தொடரவேண்டும் என்னைப்போன்றவர்களின் எண்ணங்கள் வண்ணங்களாகும் எனது இதயபூர்வமான வாழ்த்தினை மன்னார் இணையநிர்வாகிக்கும் உங்களுக்கும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
மன்னார் இணையத்தின் விம்பம் ஊடாக மூத்த கலைஞர் மன்னாமணி என அழைக்கப்படும் அலேசு மரியதாஸ் அவர்களின் அகத்தில் இருந்து…
Reviewed by NEWMANNAR
on
October 03, 2015
Rating:
No comments:
Post a Comment