மாணவர்களை கைதுசெய்யும்போது பொலிஸார் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும் : – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்...
நாட்டில் இடம்பெறும் துஷ்பிரயோகங்கள் மற்றும் மோசமான நடவடிக்கைகள் காரணமாக சந்தேகத்தின் பேரில் மாணவர்களை கைது செய்யும்போது பொலிஸார் மிகுந்த பொறுப்புடன் அவர்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்து செயற்பட வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டாரநாயக்க தெரிவித்தார்.
"சிறுவர்களுக்கு நட்புறவான சூழல் உலகை மிளிரச் செய்யும் அழகிய தேசம்" எனும் தொனிப் பொருளில் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற தேசிய சிறுவர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
2015 ஆம் ஆண்டுக்கான தேசிய சிறுவர் தின நிகழ்வை சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் மாவட்டத்தில் நடைபெறுவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். அத்துடன் இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்ய உதவிய அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எனது நன்றியைத் தெரிவிக்கின்றேன்.
இந்த தேசிய நிகழ்விற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் கலந்துகொள்ள இருந்தபோதும் உத்தியோகபூர்வ கடமை காரணமாக சமுகமளிக்கவில்லை. இருந்தபோதும் அவர்கள் தங்களது பங்களிப்பை வழங்கினர்.
மேலும் வறுமை ஒழிப்புக் கோட்டின் கீழ் வாழும் சிறுவர்களின் எதிர்காலம், பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் உரிமைகள் இவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எமது அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.
அத்துடன் மதத் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள் சிறுவர் உரிமை குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். இலங்கையில் சிறுவர்களின் எழுத்தறிவு வீதம் உயர்ந்த மட்டத்தில் இருப்பது சிறப்பம்சமாகும். பெற்றோர், ஆசிரியர்கள் சிறுவர்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதற்கான வழிவகைகளையும் நடவடிக்கைகளையும் நாங்கள் ஏற்படுத்துவோம்.
சிறுவர்கள் மீது துஷ்பிரயோகங்கள் மற்றும் மோசமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் அச் சம்பவங்களை ஊடகங்கள் வெளிப்படுத்தும்போது பொறுப்புடன் அவற்றை வெளிப்படுத்த வேண்டும். அத்துடன் பொலிஸார் மற்றும் நீதித்துறை கடமைகளை மேற்கொள்வோர் இது குறித்து அதிகளவிலான கவனம் செலுத்த வேண்டும்.
சிறுவர் பாதுகாப்பு குறித்து பொலிஸாரின் கடமை அளப்பரியது. அவர்களும் இந்த சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அத்துடன் நாட்டில் இடம்பெறும் துஷ்பிரயோகங்கள் மற்றும் மோசமான நடவடிக்கைகள் காரணமாக சந்தேகத்தின் பேரில் மாணவர்களை கைது செய்யும்போது பொலிஸார் இது குறித்து சிந்தித்து செயற்பட வேண்டும் என்றார்.

மாணவர்களை கைதுசெய்யும்போது பொலிஸார் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும் : – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்...
Reviewed by Author
on
October 03, 2015
Rating:

No comments:
Post a Comment