சாதாரண தர பெறுபேறு! தரவரிசைப்படுத்தலில் தமிழ்மொழி மூல மாணவர்களுக்கு அநீதி!
க.பொ.த.சா.த. பரீட்சைப் பெறுபேற்றினை தேசிய ரீதியில் தரவரிசைப்படுத்தும் போது சிங்கள மொழிமூல மாணவர்களை மாத்திரம் கவனத்திற் கொண்டுள்ளமை பாரபட்சமாகும். இது தமிழ் மொழிமூல மாணவர்க்கு இழைக்கப்படும் அநீதியாகும். எனவே இதனை பகிரங்கப்படுத்துமாறு கல்வியமைச்சரிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ள இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், கல்வி இராஜாங்க அமைச்சர் பி.இராதாகிருஷ்ணன் இது விடயத்தில் தலையிட்டு தமிழ் மொழி மூல மாணவர்களது உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளது.
சங்கத்தலைவர் வி.ரி.சகாதேவராஜா விடுத்துள்ள வேண்டுகோளில் மேலும் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்மொழி மூல ஆசிரியர் மற்றும் மாணவர்களது உரிமைகள் மற்றும் நலன்களில் கவனம் செலுத்திவரும் பாரம்பரிய தொழிற்சங்கம் என்ற அடிப்படையில் இது விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் எமக்குள்ளது.
நாட்டில் 3 மொழி மூலங்களில் பரீட்சையை நடத்திவிட்டு சிங்கள மொழி மூல மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து மறுநாளே அலரி மாளிகைக்கு வரவழைத்து பாராட்டிக் கௌரவிப்பதென்பது கல்வியில் பாரபட்சம் காட்டப்படுவதற்கு ஒப்பானதாகும். இது தமிழ்மொழி மூல மாணவரது மனநிலையில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.
கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற இவ்வாறன அராஜக செயற்பாடுகள் இன்றைய நல்லாட்சியிலும் தொடர்வது முறையா?
சிங்கள மற்றும் தமிழ் மொழிமூல பரீட்சை முடிவுகளை ஒரு பட்டியலில் சேர்த்து தரப்படுத்துவதென்பது ஏற்புடையதல்ல.
நாட்டில் சிங்கள மொழிமூல பாடசாலைகள் தமிழ்மொழி மூல பாடசாலைகள் என இரு வகைப் பாடசாலைகளே உள்ளன. அதுபோல இரு மொழிமூலத்தில் பரீட்சைகளும் நடைபெறுவது தெரிந்ததே.
அப்படி இருமொழிமூலத்தில் நடத்திவிட்டு ஒருமொழிக்கு மாத்திரம் தரப்படுத்தல் பெறுபேற்றினை வெளியிடுவதென்பது பாரபட்சமாகும்.
அதற்காக இது பொதுவான தரப்படுத்தல் என்ற கருத்துக்கும் வரமுடியாது. அப்படியெனின் அந்த முதல் 10ல் ஒருதமிழ் மொழிமூல மாணவனாவது வர நிகழ்தகவு இல்லையா?
கருப்பாடங்களைப் பொறுத்தவரை ஒரே வினாக்கள் 3 மொழிகளிலும் அமையும். ஆனால் தமிழ், சிங்களம், சமயம் ஆகிய பாடங்களில் கேட்கப்படும் வினாக்கள் இரு மொழி மூலத்திற்கும் வெவ்வேறானவையாகும்.
சில சமயம் பௌத்த சமயப் பாடங்களுக்கான வினாக்கள் இலகுவாகவிருக்க இந்து அல்லது இஸ்லாம் சமயப் பாடங்களுக்கான வினாக்கள் கஷ்டமாக இருக்கின்ற சந்தர்ப்பமும் வரலாம்.
இந்த சந்தர்ப்பத்தில் இவ்விரு பாடத்திற்கான புள்ளிகளை ஒரே பார்வையில் பார்த்து ஒரே பட்டியலில் தரப்படுத்துவதென்பது பொருத்தமல்ல. அவற்றைப் பொதுமைப்படுத்த முடியாது என்பது சகலரும் அறிந்தவிடயமே.
இதைவிட இற்றைக்கு 6 வருட காலத்திற்கு முன்பு தமிழ்மொழியில் முதலிடம் பெற்ற மாணவியாக காரைதீவைச் சேர்ந்த ச.சாலினி தெரிவாகியிருந்தார். அன்று அப்புள்ளியை வெளியிட்ட பரீட்சைத் திணைக்களத்திற்கு இன்று வெளியிடத் தயங்குவது ஏன்?
முதல் 10 நிலைகளில் ஒரு தமிழ் மொழி மூல மாணவனாவது வரமுடியாதா? அதற்கான நிகழ்தகவு ஏனில்லை? உயர்தரத்திலும் பல்கலையிலும் சாதனை படைக்கின்ற தமிழ் மாணவர்கள் ஏன் இப்பரீட்சையில் சாதனை படைத்திருக்க முடியாது? எங்கோ ஓரிடத்தில் முதல் தமிழ் மாணவனின் உச்சப்புள்ளி வந்திருக்க வேண்டுமே. அது எங்கே?
எனவே ஒவ்வொரு மொழி மூலத்திற்கும் தனித்தனியாக தரநிலைப்படுத்தல்கள் வெளியிடப்பட வேண்டும். அது பகிரங்கமாக வெளியிடப்படவேண்டும்.
அதேவேளை மாவட்ட நிலை தரப்படுத்தல்களும் வெளியிடப்பட வேண்டும். எதனையும் பகிரங்கமாக வெளிப்படுத்தினால் எவருக்கும் சந்தேகம் எழாது என்றார்.
சாதாரண தர பெறுபேறு! தரவரிசைப்படுத்தலில் தமிழ்மொழி மூல மாணவர்களுக்கு அநீதி!
Reviewed by Author
on
March 21, 2016
Rating:

No comments:
Post a Comment