சுன்னாகம் குடிநீர்ப் பிரச்சினை – அதிகாரிகளுக்குப் பிடியாணை வழங்கிய நீதிமன்றம்...
சுன்னாகம் குடிநீர்ப் பிரச்சினை தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது நீதி மன்றில் ஆஜராகாத தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகளுக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணைகள் இன்று யாழ். மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கழிவு எண்ணெய் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக மேற்கொள்வதில்லை என தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த இரு சுகாதார வைத்திய அதிகாரிகள் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு கடந்த மாதம் 5ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது வடமாகாண விவசாய அமைச்சர் பொ .ஐங்கரநேசன் உள்ளிட்டவர்களுக்கு நீதி மன்றம் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், குறித்த வழக்கு மல்லாகம் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ. யூட்சன் முன்னிலையில் கடந்த மாதம் 18ஆம் திகதி மீண்டும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
எனினும், அழைப்பாணை விடுக்கப்பட்வர்கள் நீதி மன்றில் முன்னிலையாகவில்லை. இதன் காரணமா குறித்த வழக்கு இன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும், வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதால் இன்றைய தினம் நீதிமன்றத்துக்குச் சமூகமளிக்க முடியாது எனத் தெரிவித்து தனது சட்டத்தரணியூடாக நேற்று முன்தினம் மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி அனுமதி கோரியிருந்தார்.
அவரது விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி அடுத்த வழக்குத் தவணையின் போது கண்டிப்பான நீதி மன்றில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் சுன்னாகம் குடிநீர்ப் பிரச்சினை தொடர்பான அறிக்கையொன்றை தேசிய சுற்றுச் சூழல் அதிகார சபை இன்றைய தினம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகள் இன்றைய தினம் நீதிமன்ற வழக்கு விசாரணைக்குச் சமூகமளிக்காத காரணத்தால் அவர்களுக்கு எதிராக யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரினூடாகப் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பெற்றுக் கொள்ளக் கூடிய நீரைப் பயன்படுத்தலாமா? பயன்படுத்த முடியாதா? என்ற ஆய்வறிக்கையை உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் தேசிய சுற்றுச் சூழல் அதிகார சபைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதேச சபைகளில் நிதி பற்றாக்குறை காரணமாகவே நிலத்தடி நீர்மாசுவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீரை விநியோகிக்க முடியாதுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சு நீதிமன்றத்தில் அறிவித்தது.
எனினும், பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு உரிய வகையில் குடிநீர் விநியோகிக்கப்பட வேண்டுமென உத்தரவிட்ட நீதவான், வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 8ஆம் திகதி வரை ஒத்தி வைத்தும் உத்தரவிட்டுள்ளார்.
சுன்னாகம் குடிநீர்ப் பிரச்சினை – அதிகாரிகளுக்குப் பிடியாணை வழங்கிய நீதிமன்றம்...
Reviewed by Author
on
March 19, 2016
Rating:

No comments:
Post a Comment