ரூ.670 கோடி மதிப்புள்ள 200 சோழர் கால சிலைகள் உள்ளிட்டவை மீட்பு: மோடியிடம் அமெரிக்கா ஒப்படைப்பு!
நியூயார்க்: தமிழகத்தில் இருந்து அமெரிக்காவுக்குக் கடத்தப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் கால கடவுள் சிலைகளை அமெரிக்க அரசு மீட்டு பிரதமர் மோடியிடம் ஒப்படைத்துள்ளது. அவற்றில் இந்தியாவின் பிற மாநில சிலைகளும் அடக்கம்.
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடியிடம் அவை ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதில் சென்னை சிவன் கோயிலில் இருந்து திருடப்பட்ட துறவி மாணிக்கவாசகரின் சிலையும் அடங்கும். சோழர் காலத்தைச் சேர்ந்த இந்தச் சிலை 2000 ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.670 கோடி மதிப்புள்ள, ஆயிரம் ஆண்டுகள் பழமையான வெண்கல விநாயகர் சிலை உட்பட 200 கலைப் பொருட்களை அமெரிக்கா இந்தியாவிடம் திருப்பி அளித்துள்ளது.
இதற்காக, நியூயார்க்கில் நடந்த சிலை ஒப்படைப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு அவர் பேசுகையில்,'இந்தியா வுக்குச் சொந்தமான பொருட்களை அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது. அதற்காக அதிபர் ஒபாமாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது திருப்பி அளிக்கப்பட்ட கலைப்பொருட்கள் வெறும் சிலைகள் அல்ல. அவை இந்திய பாரம்பரியத்தோடு இணைந்தவை. இந்திய கலாச்சாரம், பாரம்பரியம் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. அதனால்தான் இந்தியாவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.' என்றார்.
இதைத் தொடர்ந்து, மறைந்த இந்திய-வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். ஆர்லிங்டன் தேசிய கல்லறையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் விகாஸ் ஸ்வரூப் தனது ட்விட்டர் பக்கத்தில், “தியாகத்துக்கு கௌரவம், துணிச்சலுக்கு வீர வணக்கம். இரங்கலுடன் அஞ்சலி நிகழ்ச்சி தொடங்கியது. தலைமைத்துவம், அளவிடமுடியாத துணிச்சலுக்கு அஞ்சலி” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஸ்பேஸ் ஷட்டில் கொலம்பியா நினைவிடத்தில், கல்பனா சாவ்லா வின் கணவர், அவரது குடும்பத் தினர், நாசா மூத்த அதிகாரிகள், இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அவரின் தந்தை ஆகியோருடன் மோடி உரையாடினார்.
இந்நிகழ்ச்சியில், அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் அஷ்டன் கார்ட்டர், இந்திய தூதர் அருண் கே சிங், வெளியுறவுத் துறை செயலாளர் எஸ். ஜெய்சங்கர், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் வர்மா, தெற்கு, மத்திய ஆசியாவுக்கான வெளியுறவுத் துறை துணைச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ரூ.670 கோடி மதிப்புள்ள 200 சோழர் கால சிலைகள் உள்ளிட்டவை மீட்பு: மோடியிடம் அமெரிக்கா ஒப்படைப்பு!
Reviewed by Author
on
June 08, 2016
Rating:

No comments:
Post a Comment