அண்மைய செய்திகள்

recent
-

தமிழர்களிடையே பிளவை ஏற்படுத்தி தமிழர் ஒற்றுமையை சிதைப்பதற்கு முயற்சி- மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் அறிக்கை.(அறிக்கை இணைப்பு)

ஒல்லாந்தரின் அராஜகத்தால் அம்மன் ஆலயம் அழிக்கப்பட்டு மடுமாதா ஆலயமாக மாற்றப்பட்டது. மடுமாதா ஆலயத்தை இராயப்பு யோசப் ஆண்டகை இந்துக்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என இந்து சம்மேலனத்தின் தலைவர் நா.அருண்காந்தன் தெரிவித்துள்ளதாக சில இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.
குறித்த செய்தி தொடர்பாக மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் செயலாளர் தே.பி.சிந்தாத்துரை இன்று (29) வெள்ளிக்கிழமை ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,,.

மேற்படி கூற்று இணையத்தளங்களிலும் முகநூல் மூலமாகவும் 'திரிசூலம்' எனும் பிரசுரம் மூலமாகவும் பரவ விடப்பட்டுள்ளது.

புரட்டஸ்தாந்தர்களான ஒல்லாந்தர்கள் இலங்கை கரையோரப் பிரதேசங்களை கைப்பற்றியதும் அவர்களால் எதிரிகளாக கருதப்பட்ட றோமன் கத்தோலிக்கர்களையும், கத்தோலிக்க தேவாலயங்களையும் அழித்தொழித்தனர்.

எந்த அம்மன் கோவிலையும் கத்தோலிக்க ஆலயமாக மாற்றுவதற்காக அழிக்கவில்லை, அப்படியாக மாந்தையில் கி.பி. 1590ல் ஸ்தாபிக்கப்பட்டிருந்த மாதா கோவிலை 1670 அளவில் ஒல்லாந்தர் அழித்தமையினாலேயே அங்கிருந்த மாதா சொருபத்தை கத்தோலிகர்கள் பாதுகாப்பாக அகற்றிச் சென்று பெரு வனாந்தரமாக இருந்த மடுவில் ஸ்தாபித்தார்கள் என்பது தான் வரலாறு.

அது மாத்திரமல்ல இலங்கையிலுள்ள தமிழ்க் கத்தோலிக்கர்களதும் ஏராளாமான சிங்கள கத்தோலிக்கர்களதும் புனித யாத்திரைத்தலமாக இவ்வாலயம் சில நூறு வருடங்களாக பூஐpக்கப்பட்டு வருகிறது.

இப்படியிருக்க இலங்கையில் கத்தோலிக்கம் தோன்றிய 500 ஆண்டுகளுக்கு மேலான காலப்பகுதியில் முதல் முறையாக இந்த அருண்காந்த் புதிய வரலாறு ஒன்றைக் கண்டுபிடித்திருப்பதும் அதனை உலகெங்கிலும் உள்ள இந்து மக்களிடையே பரப்ப முற்பட்டிருப்பதும், தன்னை ஒரு சுத்தமான இந்து சமய பாதுகாவலன் எனப்பறைசாற்றுவதற்காகவா?

அல்லது இலங்கையிலுள்ள இந்து, கத்தோலிக்க தமிழர்களிடையே பிளவை ஏற்படுத்தி தமிழர் ஒற்றுமையை சிதைப்பதற்காகவா? தமிழர் ஒற்றுமையை பலப்படுத்த வேண்டிய இன்றைய கால கட்டத்தில், இவரின் நாசகார செயற்பாடு அவ்வொற்றுமையைச் சிதைத்துவிடும் என்பது ஏன் தமிழரான இவர் சிந்திக்கவில்லை?

தவிர, மடுவில் அம்மன் கோவில் இருந்திருந்தால் அதனை வழிபடும் குடிமக்களும் இருந்திருக்க வேண்டும்.

அந்தப்பிரதேச வாசிகளான அவர்கள், எங்கிருந்தோ வந்த சில கத்தோலிக்கர்கள்; தமது மதச்சின்னத்தை அழித்து, அதுவும் பாரம்பரியமாக அவர்கள் வழிபடும் கோவிலை அழித்து, புதிய மத அடையாளமொன்றை ஸ்தாபிக்க அனுமதித்திருப்பார்களா?

மேலும் இன்று கத்தோலிக்கர்களாக இருக்கும் நாங்கள் 6-7 தலைமுறை தாண்டி வந்த கத்தோலிக்கர்கள்.

ஆனால் சம்மந்தப்பட்ட அன்றைய கத்தோலிக்கர்கள் தாம் வழிவழியாக இந்துக்களாக இருந்து மதம்மாறிய பரம்பரை இந்துக்கள்.

அவர்களால் சற்றேனும் உறுத்தல் இல்லாமல் இதுவரை தாம் வழிபட்ட தெய்வத்தை அழித்து புதிய தெய்வத்தை ஸ்தாபிக்க முடியுமா? சற்று சிந்திக்க வேண்டும்.

வெறுமனே யாரோ ஒருவரின் அராஜகத்தால் அழிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட ஆலயத்தை அதன் தலைவர் திரும்ப கையளிக்க வேண்டுமென கேட்பதற்கு, இது என்ன பண்டமாற்று வியாபாரமா?

மேலும் மடு (1670 – 2016) 346 ஆண்டுகளாக தொடர்ந்து இருந்த ஓர் வணக்கஸ்தலம். 150 வருடங்களுக்கு மேலாக இலட்சக்கணக்கான சிங்கள தமிழ் கத்தோலிக்கர்களாலும் இதர மதத்தவர்களாலும் கூட வழிபடும் இலங்கையின் மிகப் பாரிய புனிதத்தலங்களில் ஒன்றாகும்.

இத்தனை ஆண்டுகாலமாக இது இவர்களின் சிந்தனைக்கு எட்டவில்லையா? இப்போது மாந்தைமாதா கோவில் பிரச்சனையை முன்வைத்து அதற்கு பக்கபலமாக மடுக்கோவிலையும் பயன்படுத்த முயற்ச்சிக்கிறார்களா?

முன்னாள் ஆதிக் கத்தோலிக்கர்களின் உயிர்த்தியாகத்தால் வித்துக்களாக வேரூன்றிய விசுவாசிகளின் வழித்தோன்றல்கள் நாங்கள்; எம் விசுவாசத்தை காப்பற்ற எந்தத் தியாகத்தையும் செய்வோம்; இலங்கை வாழ் அனைத்துக் கத்தோலிக்கர்களினதும் இதயம் மடு அன்னையின் திருப்பதியாகும்! அவரது பூர்வீக வாசஸ்தலமான மாந்தை மாதா ஆலயமும் அவ்வாறானதே.

இந்த எமது ஆன்மீக உணர்வை கொச்சைப்படுத்துவது நியாயமல்ல. ஏற்கனவே இந்துசம்மேளனம், மன்னார் ஆயரையும், கூட்டமைப்பு கிறிஸ்தவ எம்பிக்களையும் கண்டிக்கிறோம் என்ற தலைப்பில் 'திருக்கேதீஸ்வர ஆலயத்தில் அத்துமீறி வைத்துள்ள மாதா சிலையை அகற்றுங்கள்' 'சிவபூமி மன்னாரை மறைபூமி ஆக்காதே' என்றும் சுவரொட்டிகளை நாட்டின் பிரதான நகரங்களில் ஒட்டியும், இணையதளங்களில் வெளிப்படுத்தியும் இருந்தது.

தமிழ் எம்பிக்களிடையே முரண்பாடுகளை தோற்றுவித்து, மதத்துவேசத்தை இந்து, கத்தோலிக்கர் மத்தியில் விதைப்பதுமான இச்செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று சம்மந்தப்பட்டோரை மிகவும் விநயமாக வேண்டி நிற்கிறோம்.

உண்மைக்கு எதிரான இப்படியான செயற்பாடுகள் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவர்களின் திட்டமிட்ட தமிழர் உரிமை அழிப்பின் கைக்கூலிதனமோ என நாம் சந்தேகிக்கிறோம்.

ஏனெனில் இதன் பின் விளைவுகளை தமிழினத்தை மிக மோசமாகவே பாதித்துவிடும் என அஞ்சுகிறோம்.

மேலும் நாம் எந்த ஒரு மாதா சுருபத்தையும் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் வைக்கவில்லை! சுருபம் வைக்கப்பட்டு இருப்பது எமக்கென காணி ஆணையாளர் நாயகத்தினால் ஒதுக்கப்படட்டுள்ள காணியின் உட்புறத்திலாகும்.

மேலும் 24 மணித்தியாலயமும் சடங்குகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் வெளியாள் ஒருவர் பிறமதச்சின்னத்தை திணிப்பது சாத்தியமானதா? அப்படி இருக்க ஏன் இந்த விசம பிரச்சாரம்? இந்து மக்களை கொம்புசீவி விடவா? தயவு செய்து அடாவடித்தனம் செய்யாதீர்கள்.

மடுத்திருத்தயாரிடம் வேண்டுதல் சமர்பித்து தங்கள் வாழ்க்கையில் மேலான நன்மைகளையும் புண்ணியபலன்களையும் அனுபவிக்கும் ஆயிரக்கணக்கான இந்துமத பக்தர்களின் உணர்வுகளையும் செப வேண்டுதல்களையும் கொச்சைப்படுத்தி அவர்கள் இத்திருப்பதியை நாடிவருவதை வெறுப்பூட்டலால் தடுத்து நிறுத்த முடியும் என பகற்கனவு காணும் உங்கள் ஈனச்செயல் நிறுத்தப்பட வேண்டும்.

மன்னார் வாழும் கத்தோலிக்க இந்து மக்கள் அனைவரும் பரஸ்பர புரிந்துணர்வோடு மதம் கடந்து தமிழர் எனும் ஒற்றுமை உணர்வில் சகோதர சகோதரிகளாக வாழும் நிலையை வேறு மாவட்டங்களிலுள்ள ஒருசில மத வெறியர்களின் கூறுபோடும் இழிசெயலுக்கு இரையாக்கும் அநீதியை வன்மையாக கண்டிக்கிறோம்.

இயேசு சிலுவையில் உயிர் விடுமுன் 'பிதாவே இவர்களை மன்னியும், இவர்கள் அறியாமல் செய்கிறார்கள்' என பிரார்த்தனை செய்து உயிர்விட்டார்.

அவ்வண்ணமே நாங்களும் மடு அன்னையிடம் பிரார்த்திக்கிறோம். 'தாயே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் இவர்களை மன்னியும், தண்டித்து விடாதேயும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





மன்னார் நிருபர்-

(29-07-2016)


'


தமிழர்களிடையே பிளவை ஏற்படுத்தி தமிழர் ஒற்றுமையை சிதைப்பதற்கு முயற்சி- மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் அறிக்கை.(அறிக்கை இணைப்பு) Reviewed by NEWMANNAR on July 29, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.