எதிர்ப்பவர்களிடம் ஒரு வேண்டுகோள்!
யுத்தத்தின்போதும் அதற்குப் பின்னரான காலத்திலும் காணாமல் போனோர் குறித்து இதுவரை எவ்விதமான தகவல்களும் இல்லாத நிலையில் அது தொடர்பில் ஆராயும் நோக்கில் நல்லாட்சி அரசாங்கம் காணாமல் போனோர் குறித்த நிரந்தர அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அது தொடர் பில் விவாதம் நடத்தப்பட்ட பின்னர் இந்த நிரந்தர அலுவலகம் அமைக்கப்படவுள்ளது.
கடந்த வருடம் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டு இலங்கையின் இணையனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணைப் பொறிமுறையின் ஒரு அங்கமாகவே இந்த காணாமல் போனோர் குறித்து ஆராயும் நிரந்தர அலுவலகம் நிறுவப்படவுள்ளது.
இந்நிலையில் நீதி வழங்கும் செயற்பாட்டில் நம்பிக்கையை இழந்துள்ள பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இந்த காணாமல் போனோர் குறித்த நிரந்தர அலுவலகத்தை அமைக்கவுள்ளமை குறித்து ஓரளவு நம்பிக்கையுடன் இருக்கின்றனர் என்பதே உண்மையாகும்.
அதாவது ஏதோவொரு வகையில் தமக்கு நீதி கிடைக்கும் என்றும் காணாமல் போன தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை கண்டறியப்படும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
எனினும் இந்த காணாமல்போனோர் அலுவலகத்தை நிறுவும் செயற்பாட்டுக்கு கடும் எதிர்ப்புக்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.
குறிப்பாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச அண்மையில் இந்த காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தை அமைப்பதை கடுமையாக எதிர்த்திருந்தார்.
அத்துடன்,தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இவ்வாறு காணாமல்போனோர் குறித்த அலுவலகம் அமைக்கப்படுவதை கடுமையாக எதிர்த்திருக்கிறார்.
அதுமட்டுமன்றி, இந்த அலுவலகம் அமைக்கப்படக் கூடாது என்பதற்கு நீண்ட விளக்கம் ஒன்றை அளித்து அறிக்கையொன்றையும் நேற்று முன்தினம் மஹிந்த ராஜபக்ச வெளியிட்டிருந்தார்.
அதாவது காணாமல் போனோர் அலுவலகம் என்ற பெயரில் அமைக்கப்படும் அலுவலகத்தின் ஊடாக இராணுவத்தினரை பழிவாங்கும் முயற்சியில் நல்லாட்சி அரசாங்கம் ஈடுபடுகின்றது.
எதிர்வரும் நாட்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைக்கமைய நிறுவப்படவுள்ள யுத்தக் குற்ற நீதிமன்றத்தின் ஒரு அங்கமாகவே இந்த காணாமல் போனோர் குறித்த அலுவலகம் செயற்படும் என்று மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இந்த அலுவலகம் பாராளுமன்றம் ஊடாக ஸ்தாபிக்கப்படுவதால் அரச நிறுவனங்கள் உள்ளடங்கும் நீதிக்கட்டமைப்பிலிருந்து விடுபட்டு சுயாதீனமாக இயங்கும் நிறுவனமாக அமையும்.
இது ஒரு அலுவலகம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதனை விசாரணைசபை என்று குறிப்பிடுவதே பொருத்தமானதாகும்.
இந்த நிறுவனம் சாட்சியாளர்களை அழைத்து வந்து விசாரணை செய்யவும், சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அழைப்பாணை விடுப்பதற்குமான அதிகாரங்களை கொண்டுள்ளது எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தவகையில் இந்த காணாமல் போனோர் குறித்த அலுவலகமானது எவ்வகையிலும் அமைக்கப்படக்கூடாது என்றும் இது தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்போது அதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் கை உயர்த்தும்போது மனச்சாட்சியை தொட்டுப்பார்க்க வேண்டும் என்றும் மஹிந்த ராஜபக்ச லியுறுத்தியிருக்கிறார்.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் கடந்த ஆட்சியின் போது காணாமல்போனோர் பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட்டிருந்தால் இந்த மக்களின் தற்போதைய அவல நிலை நீடித்திருக்காது.
ஆனால் கடந்த அரசாங்க காலத்தில் காணாமல்போனோர் பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான தீர்வை காண்பதற்குப் பதிலாக பிரச்சினையை மேலும் விரிசல் நிலைக்குட்படுத்தும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டன.
அதாவது, கடந்த ஆட்சிக்காலத்தின் போது ஒரு கட்டத்தில் அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் யுத்த காலத்தில் எவரும் காணாமல்போகவில்லை என்ற ஒரு அறிவிப்பைக்கூட வெளியிட்டிருந்தார்.
காணாமல்போனோர் தொடர்பான எவ்விதமான தகவல்களும் இன்றி உறவினர்கள் திண்டாடிக்கொண்டிருந்தபோது கடந்த ஆட்சிக்காலத்தில் அது தொடர்பில் கரிசனை காட்டப்படவில்லை.
மாறாக பாதிக்கப்பட்டோர் மேலும் வருந் தும் வகையிலான செயற்பாடுகளே கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்டன.
காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்ற உண்மையைக் கண்டறிவதற்கு கடந்த காலத்தில் ஆக்கபூர்வமான முயற்சிகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.
2013ம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் காணாமல்போனோர் குறித்த விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு நிறுவப்பட்டது.
அந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பத விக்காலம் கடந்த 15 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில் எந்தவொரு எழுத்துமூலமான முறைப்பாட்டுக்கும் தீர்வு கிடைக்கவில்லை.
இந்த ஆணைக்குழுவுக்கு சுமார் 20 ஆயிரம் எழுத்துமூல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. ஆனால் ஆணைக்குழு நியமிக்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் இதுவரை ஆக்கபூர்வமான தீர்வுகள் எதுவும் எட்டப்படவில்லை.
இந்நிலையிலேயே புதிய அரசாங்கம் பத விக்கு வந்தபின்னர் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் குறிப்பிடத்தக்களவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, காணாமல்போனோர் குறித்த உண்மையை கண்டறிவது புதிய அரசாங்கத்தின் முன் காணப்படுகின்ற மிகப் பெரிய பொறுப்பாக இருக்கிறது.
இதன் அடிப்படையிலேயே அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய இந்த காணாமல்போனோர் பற்றிய நிரந்தர அலுவலகத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்ற போது தற்போது அதற்கு எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.
இவ்வாறு இந்த அலுவலகத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் கூட்டு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பதனூடாக பாதிக்கப்பட்ட மக்கள் எந்தளவு தூரம் வருந்துகின்றனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அதாவது இவ்வாறு இந்த காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தை எதிர்ப்பவர்கள் காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிய விருப்பமின்றி உள்ளனரா? அல்லது உறவுகளை தொலைத்துவிட்டு தவித்துக்கொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும் என்பதை இவர்கள் விரும்பவில்லையா? போன்ற கேள்விகள் இந்த இடத்தில் எழுகின்றன.
அவ்வாறு இல்லாவிடின் இவ்வாறு புதிய அரசாங்கத்தின் முயற்சிகளை எதிர்க்கும் கூட்டு எதிர்க்கட்சியினர் காணாமல்போனோர் குறித்து உண்மையைக் கண்டறிவதற்கு முன்வைக்கும் மாற்றுத் திட்டம் என்ன என்பதையாவது கூற வேண்டும்.
அவ்வாறு எவ்விதமான ஆக்கபூர்வமான விடயங்களையும் முன்வைக்காமல் புதிய அரசாங்கம் ஏதாவது ஒரு முயற்சியை முன்னெடுக்கும்போது அதனை கண்மூடித்தனமாக எதிர்ப்பதானது கவலை தரும் விடயமாக அமைந்திருக்கிறது.
இந்த காணாமல்போனோர் விவகாரத்திற்கு மிக விரைவாக தீர்வு காணப்பட வேண்டும். காணாமற்போனோருக்கு என்ன நடந்தது என்ற உண்மை கண்டறியப்பட வேண்டும். அவ்வாறு உண்மை கண்டறியப்படுவதன் மூலமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்ட முடியும்.
இதனை பொது எதிரணியினரும் புரிந்து கொள்ள வேண்டும்.காணாமல்போனோரின் உறவினர்கள் பல்வேறு துன்ப துயரங்களை எதிர்கொண்டு வாழ்ந்துவருகின்றனர்.
அவர்களின் துயர நிலைமையை பார்த்தாவது பொது எதிரணியினர் அரசாங்கத்தின் இந்த நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வர வேண்டும்.
தென்னிலங்கை அரசியல் வாதிகள் எந்தவொரு விடயத்தையும் ஒரு கோணத்தில் மட்டும் பார்க்காமல் பரந்துபட்ட ரீதியில் நோக்க வேண்டும்.
அவ்வாறு செய்வதனூடாக மட்டுமே நல்லிணக்கத்தை நோக்கிப் பயணிக்க முடியும் என்பதுடன், உறவுகளை தொலைத்துவிட்டு திண்டாடிக் கொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஆறுதலை பெற்றுக் கொடுக்க முடியும்.
எனவே, காணாமல் போனோர் குறித்த நிரந்தர அலுவலகத்தை கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கும் அனைத்துத் தரப்பினரும் இதனுடைய தாற்பரியம் மற்றும் இதற்குப் பின்னால் வேதனையுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகள் குறித்து சிந்திக்க வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறவிரும்புகின்றோம்.
எதிர்ப்பவர்களிடம் ஒரு வேண்டுகோள்!
Reviewed by Author
on
July 22, 2016
Rating:

No comments:
Post a Comment