மக்களின் விருப்பங்களுக்கு மாறாக அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்த முடியாது: சிறீதரன்....
மக்களின் விருப்பங்களுக்கு மாறாக அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்த முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி உதயநகர் கிழக்குஇ உதயநகர் மேற்கு கிராம அலுவலர் பிரிவுகளிலுள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களுடன் அவர்களுடைய தேவைகள் அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் உதயநகர் மேற்கு பொதுநோக்கு மண்டபத்தில் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் திருநேசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்றஉறுப்பினர் சிறீதரன்,
இங்கு பல்வேறு தேவைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
இத்தேவைகளில் சாத்தியமானவற்றை நிறைவு செய்து தருவதில் கூடிய அக்கறை கொண்டுள்ளோம்.
பல்வேறு தேவைகளை முடியுமானவரை நிறைவுசெய்வதற்கு துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக வீதிகளைப் புனரமைப்பது இங்கு மாத்திரமல்ல மாவட்டம் தழுவிய வகையில்பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது.கடந்த 30 வருடங்களுக்கும் மேலாகப் புனரமைக்கப்படாத வீதிகளை ஒரே காலத்தில் புனரமைத்தல் என்பது சவாலான காரியமாகும்.
ஒரு கிலோ மீற்றர் வீதியைப் புனரமைக்க 8 முதல் 10 மில்லியன் ரூபாய் வரை தேவைப்படுகின்றது.
ஆகவே, 1716 கிலோ மீற்றர் வீதிகளைப் புனரமைக்க வேண்டியுள்ளது. அதற்கான கூடுதல் கோரிக்கைகளை அரசாங்கத்திடமும் நிதி நிறுவனங்களிடமும் வழங்கியுள்ளோம்.
இவ்விடத்தில் அபிவிருத்திப் பணிகளில் தாமதங்கள் நிலவுவதாக சிலர் கூறுகிறார்கள்.கடந்த காட்டாட்சிக் காலம் போன்று எங்கிருந்தோ வந்து யாரும் அறியாமல் குறித்த திணைக்களங்களுக்கே தெரியாமல் நிதிக் கணக்கு வழக்கள் எதுவுமின்றி அபிவிருத்திகளை நாங்கள் செய்துவிடமுடியாது.
மக்களுடைய விருப்பங்களுக்கு மாறாக திணைக்களங்களுடைய சட்ட நிதிப்பிரமாணங்களுக்கு அமைவாக வெளிப்படைத் தன்மையாகவே அபிவிருத்திகள் நடைபெறும் என்றார்.
இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் அ.வேழமாலிகிதன், உதயநகர் வட்டார இணைப்பாளர் பிரான்சிஸ் லூகாஸ், கடசியின் பெண்கள் பிரிவுத் தலைவி திருமதி பிரபாமணி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் த.சேதுபதி, மத்திய செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார், கிராம அலுவலர் காண்டீபன், ஓய்வுநிலை அதிபர் சந்திரராசா, கிராம மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மக்களின் விருப்பங்களுக்கு மாறாக அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்த முடியாது: சிறீதரன்....
Reviewed by Author
on
August 06, 2016
Rating:

No comments:
Post a Comment