புணாணை பிள்ளையார் ஆலய வளவிலுள்ள விகாரை அகற்றப்படுமா?
மட்டக்களப்பு புணானை மீள் குடியேற்ற கிராமத்தில் தமிழ் மக்களினால் வழிபட்டு வந்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்கான, நீண்டகாலமாக நிலவி வந்த எல்லைக் கல் இடும் பணி தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு இன்று ஆலய முன்றலில் நடைபெற்றது.
குறித்த கிராமத்திற்கான கிராம சேவகர் க.சுபோஸ் தலைமையில் நடைபெற்ற மேற்படி கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணப்பிள்ளை, புணானை பஞ்சமா விகாரை விகராதிபதி அல்லேவேவ விஜித்தலங்கார தேரர், வாகரை பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்களான ஆர்.ஸ்ரீராம், க.சந்திகாந்தன் மற்றும் பிரதேசத்தின் தமிழ் மற்றும் சிங்கள மக்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது இந்து ஆலய வளவினுள் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையானது 1971ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதாகவும் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று புணானை பஞ்சமா விகாரை விகராதிபதி அல்லேவேவ விஜித்தலங்கார தேரர் தெரிவித்தார்.
சிங்கள தமிழ் மக்களின் ஒற்றுமையை குழப்புவதில் எவர் முன் நிற்கின்றாரோ, அவர்களே இந் நாட்டின் துரோகிகள் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா கிருஸ்ணப்பிள்ளை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மேற்குறித்த கிராமத்தில் தற்போது 200 தமிழ் குடும்பங்கள் உள்ளதாகவும், ஆரம்பத்தில் 5 குடும்பங்களாக காணப்பட்ட சிங்கள குடும்பங்கள் தற்போது 29 குடும்பங்களாக உள்ளதாகவும், இக்கிராமமானது முற்று முழுதாக தமிழ் கிராமமாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
அத்துடன் தமிழ் சிங்கள மக்கள் இங்கு ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்றார். இதனைத் தொடர்ந்து பொது மக்களிடம் இது தொடர்பான ஆலோசனை கேட்கப்பட்டது.
இதன்போது குறித்த பௌத்த விகாரையுள்ள மற்றும் இந்து ஆலயம் உள்ள வளவினை வேலியிட்டு இரு வேறாக வணக்கஸ்த்தலங்களையும் வேறுபடுத்தாமல் ஒரே வளவினுள் இரு வணக்கஸ்த்தலங்களும் அமையப்பெறுவதே சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என சிங்கள மக்கள் சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
இக்கருத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில், இந்து மக்களின் கலை கலாச்சார ஆன்மீக வழிபாட்டு முறைமைகள் பௌத்த மத வழிபாட்டு முறைமையில் இருந்து வேறுபட்டதொன்றாகும். எனவே அதற்கேற்றால் போல் இந்து ஆலயம் வேறுபடுத்தப்பட்டு வணக்க முறைகள் இடம்பெறவேண்டும்.
இப்பிரதேசத்திற்கு எமது மக்கள் 1960 காலப்பகுதியில் வந்து குடியேறியவர்கள். அவர்கள் அடிக்கடி இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து பல இழப்புக்களை எதிர்நோக்கியவர்கள். அவர்களுக்கு சொந்தமான காணியில் அவர்கள் விரும்பிய தெய்வத்தினை வழிபட உரிமையுள்ளவர்கள்.
பல முறை இப்பிரதேச மக்கள் இந்த ஆலயத்திற்கு வேலி இட வந்தால், இங்குள்ள இராணுவ அதிகாரியும் இராணுவ உத்தியோகஸ்த்தர்களும் விகாராதிபதியும் எமது மக்களை அப்பணியினை செய்ய விடாது தடுத்து வந்தனர். இவ்விடயம் இந்த நல்லாட்சியில் எவ்வாறு சாத்தியமாகும் என்றார்.
இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தான் அபிவிருத்திக் குழுவின் வாகரை பிரதேச இணைத் தலைவர் என்ற வகையில் தெரிவித்ததாவது,
பௌத்த விகாரை அமைப்பதற்கு ஒதுக்கப்பட்டு 60 பேர்ச்சஸ் காணியும் இந்து ஆலயத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 40 பேர்ச்சஸ் காணியும் எல்லையிடப்பட்டு மக்களிடம் கையளிக்க வாகரை பிரதேச செயலக காணி உத்தியோகஸ்த்தர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இச்செயற்பாட்டிற்கு எவர் இடைஞ்சலாக இருக்கின்றாரோ அவர்களை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து பொலிசாரின் ஒத்துழைப்புடன் நீதி மன்றில் வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என்றார்.
இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினரின் கருத்துக்களை அறிந்து கொண்ட விகாராதிபதியும் மேற்படி நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார்.
தற்போது தங்களிடம் ஆரம்ப வரைபடம் உள்ளதாகவும் மேற்படி நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு எல்லைக் கல்லிடல் தொடர்பான வரைபடம் தேவையாகவுள்ளதினால் அதனை நில அளவை திணைக்களத்திடம் இருந்து பெற்று அவர்களது பங்கு பற்றுதலுடன் குறித்த பணியினை தொடர்ந்து மேற்கொள்ள போவதாக காணி உத்தியோகஸ்த்தர் ஆர்.ஸ்ரீராம் இக்கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.
புணாணை பிள்ளையார் ஆலய வளவிலுள்ள விகாரை அகற்றப்படுமா?
Reviewed by NEWMANNAR
on
October 21, 2016
Rating:

No comments:
Post a Comment