மன்னார் பேசாலை பற்றிமா மத்திய மகா வித்தியாலய பாடசாலை மைதானத்தில் உலங்கு வானூர்தி தரையிரக்கம்- சாதாரண தர பரிட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு அசௌகரியம்.-Photos
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கல நாதனின் தந்தையாரின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ள இன்று புதன் கிழமை(7) காலை கொழும்பிலிருந்து வருகை தந்த சபாநயகர் கருஜயசூரிய உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அடங்கிய குழுவினரை ஏற்றி வந்த உலங்கு வானூர்தி மன்னார் பேசாலை பற்றிமா மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் இன்று புதன் கிழமை (7) காலை 9.15 மணியளவில் தரையிறக்கப்பட்டது.
குறித்த வானூர்தியில் அமைச்சர்களான டி.எம்.சுவாமிநாதன்,கயந்த கருனாநாயக்க,ரவிகருனாநாயக்க,எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன்,பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உற்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் வருகை தந்திருந்தனர்.
குறித்த உலங்கு வானூர்தி பேசாலை பற்றிமா மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் தரை இறங்கிய போது குறித்த பாடசாலையில் இன்று (7) காலை சாதாரண தரப் பரிட்சையில் தோற்றிய மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
வானூர்தி தரையிரக்கப்பட்ட போது பாடசாலை வளாகம் தூசிக்காடாக மாறியதோடு பாரிய இரைச்சல் சத்தம் கேட்டமையினால் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் நிலை குலைந்தனர்.
இதன் போது பரிட்சை நிலைய பொறுப்பதிகாரி ,ஆசிரியர்கள் செய்வதறியாது திண்டாடியதும் குறிப்பிடத்தக்கது.
வருகை தந்த பிரதிநிதிகள் இறக்கி விடப்பட்டதன் பின்னர் தான் உலங்கு வானூர்தி தவறுதலாக குறித்த பாடசாலையில் தரை இறக்கப்பட்டமை தெரிய வந்துள்ளது.
தோட்டவெளி பாடசாலை மைதானத்தில் தரை இறங்க வேண்டிய வானூர்தி கா.பொ.த.சாதாரண தர பரிட்சை இடம் பெற்ற பேசாலை பற்றிமா மத்திய மகாவித்தியால மைதானத்தில் இறங்கியது குறித்து வருகை தந்த அமைச்சர்களும் பாடசாலை நிர்வாகத்துடன் பேசியதை காணக்கூடியதாக இருந்தது.
பாடசாலை நிர்வாகம் இது தொடர்பில் பரிட்சை ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாக பாடசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.
வானூர்தி தவறுதலாக இறக்கப்பட்டு பின்னர் சரியான இடத்திற்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் பேசாலை பற்றிமா மத்திய மகா வித்தியாலய பாடசாலை மைதானத்தில் உலங்கு வானூர்தி தரையிரக்கம்- சாதாரண தர பரிட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு அசௌகரியம்.-Photos
Reviewed by NEWMANNAR
on
December 07, 2016
Rating:

No comments:
Post a Comment