வீதியோரங்களில் அழுகை ஓலங்களுடன் இன்றும் தமிழ் மக்கள்...
உறவுகளை இழந்த நிலையில் வீதியோரங்களில் அழுகை ஓலங்களுடன் தமிழ் மக்கள் இன்றும் திரிகின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.
செங்கலடி யுனைட்டட் கழகத்தின் ஏற்பாட்டில் இன்று (25) பிற்பகல் நடைபெற்ற மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
சிறுபான்மை மக்களினால் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி சிறுபான்மை தமிழ் மக்களின் பிரச்சினையைக் கூட தீர்க்காமல் மூன்றாண்டு கடந்த நிலையில் தற்போது தான் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் திறப்பது தொடர்பாக சிந்திக்கின்றார்கள்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வட,கிழக்கு பகுதி எங்கும் மாதங்கள் கடந்த நிலையிலும் வீதிகளில் உறங்கிப் போராடுகின்ற நிலைமை வலுப்பெற்றுள்ளது.
உறவுகளை இழந்த நிலையில் வீதியோரங்களில் அழுகை ஓலங்களுடன் தமிழ் மக்கள் இன்றும் திரிகின்றார்கள்.
மறுகணம் தங்களின் வாழ்விட வாழ்வாதார காணிகளுக்காகவும் வீதிகளில் உறங்கி போராடுகின்ற நிலைமை தொடருகின்றது.
ஆட்சி மாற்றம் வேண்டுமென தற்போதுள்ள நல்லாட்சியை கொண்டுவந்து மூன்றாண்டுகள் கடந்த நிலையில் தமிழ் மக்களின் கண்ணீருக்கு எவ்வித பதிலும் கொடுக்கப்படவில்லை.
வெறுமனமே கால இழுத்தடிப்புக்களையும் வெற்றுப் பேச்சுக்களையும் தான் இந்த நல்லாட்சி செய்கின்றது.
ஆட்சி மாற்றம் இடம்பெற்று ஓரிரு வருடங்களுக்குள்ளே பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நிவாரணங்கள் வழங்கியிருக்க வேண்டும். அதனை இந்த ஆட்சி அரசு செய்யவில்லை.
எதிர்வரும் தேர்தல்களில் தங்களின் கட்சியைத் தக்க வைப்பதற்கு சிறுபான்மை கட்சிகள் முன் நிற்கின்றதே தவிர காணாமல் ஆக்கப்பட்டவர்களின் முடிவு, மக்களின் நிலமீட்பு போராட்டம் போன்ற பல விடயங்களை மறந்து செயற்படுகின்றார்கள்.
உலகத்திற்கு பொறுப்பு கூறுவோம், பொறுப்பு கூறவேண்டிய இந்த அரசு தனது வாக்குறுதியை மறந்து மூன்றாண்டு கடந்த நிலையில் தான் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் திறப்பது தொடர்பாக ஆராய்கின்றது.
ஒரு பொருளாதார மத்திய நிலையத்தை கொண்டுவருவதில் மத்திய மற்றும் மாகாண அரசுகளுக்கிடையே முட்டி மோதல்கள் இடம்பெறுகின்ற வேளையில் எவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் தொடர்பாக கரிசனை இருக்கப்போகின்றது.
எந்த அளவுக்கு தங்களை நம்பி வாக்களித்த மக்களின் பிரச்சினைகளைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கட்சிக்குள் இருக்கின்ற பிரிவுகள், பிளவுகளை ஓரம் கட்டிவிட்டு வடகிழக்கு மக்களின் போராட்டத்திற்கும் தமிழ் மக்களின் தீர்வுக்கும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.
வீதியோரங்களில் அழுகை ஓலங்களுடன் இன்றும் தமிழ் மக்கள்...
Reviewed by Author
on
June 26, 2017
Rating:

No comments:
Post a Comment