நான் ஜெயலலிதாவின் மகள் என்பது ஒ.பன்னீர்செல்வத்துக்கும் தெரியும் அம்ருதா -
பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்ற மஞ்சுளா (வயது 37) சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் தன்னை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று அறிவிக்க வேண்டும் என்றும் டி.என்.ஏ. பரி சோதனை நடத்த வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மதன்.பி.லோகூர், தீபக் குப்தா ஆகியோர் தள்ளுபடி செய்தனர். என்றாலும் கர்நாடக ஐகோர்ட்டை அணுகி கோரிக்கையை முறையிடலாம் என்றும் நீதிபதிகள் கூறினர்.
இதைத் தொடர்ந்து கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்போவதாக அம்ருதா கூறினார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
நான் ஜெயலலிதாவின் மகள் என்பது கடந்த மார்ச் மாதம் தான் தெரியவந்தது. என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் நான் மறைத்து வளர்க்கப்பட்டேன். ஜெயலலிதாவை என் பெரியம்மா என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் தான் என் தாயார் என்று உறவினர்கள் கூறினர்.
கடந்த 1980-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14ந்தேதி ஜெயலலிதாவின் மகளாக பெங்களூருவில் பிறந்தேன். ஜெயலலிதாவின் அத்தையான ஜெயலட்சுமி தான் பிரசவம் பார்த்தார். எனக்கு அம்ருதா என்று பெயர் சூட்டினார்கள். என்னை உறவினர்கள் செல்லமாக மஞ்சுளா என்றும் அழைப்பார்கள். 3 மாத குழந்தையாக இருந்த போதே ஜெயலலிதாவின் தாயார் சந்தியா எனது தாயார் சைலஜாவிடம் என்னை தத்து கொடுத்து விட்டார்.
எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று யாருக்கும் தெரியாமல் மறைத்து வளர்த்தனர். சைலஜாதான் என் தாயார் என்று நான் நினைத்துக் கொண்டு இருந்தேன்.
இதற்கு முன்பு எனது தாயார் சைலஜா பல அ.தி.மு.க. பிரமுகர்களை சந்தித்து தான் (சைலஜா) ஜெயலலிதாவின் தங்கை என்று அவர்களிடம் கூறி இருக்கிறார். ஆனால் யாரும் நம்பவில்லை.
என்னை வளர்த்த தந்தை சாரதியும், கடந்த ஆண்டு இறந்து விட்டார். நான் ஜெயலலிதா மகள் என்பதை அமெரிக்காவில் உள்ள என் உறவினர் ஜெயலட்சுமி, பெங்களூருவில் உள்ள இன்னொரு உறவினர் லலிதா ஆகியோர் உறுதிப்படுத்தி விட்டனர். ஜெயலலிதா தான் என் தாய் என்பதை நிரூபிக்கவே டி.என்.ஏ. பரிசோதனை செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன்.
கர்நாடக ஐகோர்ட்டை முறையிடுமாறு கூறி விட்டனர். விரைவில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்வேன். நான் ஜெயலலிதாவின் மகள் என்பது தற்போது துணை முதல்- அமைச்சராக உள்ள ஒ.பன்னீர்செல்வத்துக்கும் தெரியும்.
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது போயஸ் கார்டன் வீட்டில் பல முறை அவரை சந்தித்து இருக்கிறேன். அப்போது அவர் என்னை ஆரத்தழுவி தாய் ஸ்தானத்தில் இருந்து முத்தம் கொடுப்பார். இங்கிருந்து நீ சென்று விடு, நீ உயிரோடு இருந்தால் போதும் என்று அவர் பல முறை என்னிடம் கூறினார். இப்போதுதான் அவர் என் தாய் என்பதை அவர் இல்லாதபோது உணருகிறேன்.
ஜெயலலிதா பெயருக்கு அவப்பெயர் ஏற்படக் கூடாது என்பதற்காக அவர் உயிரோடு இருந்தவரை அவர் தான் என் தாய் என்று நான் கூறவில்லை. இப்போதுதான் அவர் என் தாய் என்பதை பகிரங்கமாக கூறுகிறேன்.
இதனால் தான் அவரது உடலை தோண்டி எடுத்து எனக்கும் அவருக்கும் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோர்ட்டில் மனு செய்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நான் ஜெயலலிதாவின் மகள் என்பது ஒ.பன்னீர்செல்வத்துக்கும் தெரியும் அம்ருதா -
Reviewed by Author
on
November 29, 2017
Rating:

No comments:
Post a Comment