நல்லாட்சி அரசே எங்கள் பூர்வீக நிலம்வேண்டும்:கேப்பாப்புலவு மக்கள் தொடர்போராட்டம் -
இராணுவத்தின் காணிகளையோ அல்லது அவர்களின் சொத்துக்களையோ கேட்கவில்லை என தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு, கேப்பாப்புலவு மக்கள் தங்களது பூர்வீர்க நிலங்களை விடுவிக்கக்கோரி இரவு பகலாக முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் 392வது நாளாகவும் இன்று தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன், போராட்டத்தில் ஈடுப்பட்டும் வரும் மக்கள், “நல்லாட்சி அரசே, ஜனநாயக நாட்டில் பூர்வீக மக்கள் அகதி வாழ்வா? நல்லாட்சி அரசே எங்கள் பூர்வீக நிலம்வேண்டும் உள்ளிட்ட பதாதைகளை தாங்கியவாறு தியான முறையிலான போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
எங்கள் காணிகளை இன்னமும் இராணுவம் விடுவிக்கவில்லை. அதற்குள் நாங்கள் காலடி வைக்கமுடியவில்லை. வீதியில் நின்றவாறே எமது காணிகளைப் பார்க்கின்றோம்.
நாங்கள் சிறுவயதில் எங்கள் காணியில் இருக்கும்போது பலாப்பழம், தேங்காய், இளநீர் எதுவேண்டும் என்றாலும் அனைத்தையும் எங்கள் காணிகளில் இருந்து பெற்றுக்கொண்டோம்.
இப்போது இவற்றையெல்லாம் இராணுவம் எடுக்கின்றது நாங்கள் பணத்திற்கு வாங்கியுண்ணும் சூழல் காணப்படுகின்றது.
இதேவேளை, எங்கள் காணிகளில் எங்களுக்கு சாப்பாடு இல்லையென்றால் தாகத்திற்கு இளநீரை கூட குடிப்போம். ஆனால் இப்போது அது எல்லாம் இராணுவத்திடம். எங்கள் விவசாய நிலங்கள், அதிலிருந்து இராணுவம் விவசாயம் செய்கின்றனர், இப்போது தேங்காய் ஒன்று 100 ரூபாய்க்கு வாங்கி வருகின்றோம்.
காணிகளில் எவ்வளவு வருமானங்கள் இருந்தும் நாங்கள் தெருவோரம் அநாதைகளாக கிடக்கின்றோம். எங்கள் முற்றத்தில் உள்ள மாமரத்தில் எனது சிறுவயதில் ஊஞ்சல் கட்டிஆடிய ஞாபகம் எனக்கு இப்போதும் இருக்கின்றது.
அந்த மரத்தில் என்னுடைய பிள்ளையும் ஊஞ்சல் கட்டி ஆடவேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கின்றது. நாங்கள் இராணுவத்தின் சொத்தையோ அல்லது இராணுவத்தின் நிலத்தையோ கேட்கவில்லை.
எங்கள் அப்பா, அம்மா வாழ்ந்த காணியையும், நாங்கள் ஊஞ்சல் கட்டி ஆடிய மாமாரத்தையும் தான் கேட்கின்றோம். இதனை நல்லாட்சி அரசும். இராணுவமும் தரவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசே எங்கள் பூர்வீக நிலம்வேண்டும்:கேப்பாப்புலவு மக்கள் தொடர்போராட்டம் -
Reviewed by Author
on
March 28, 2018
Rating:

No comments:
Post a Comment