முறையான விசாரணையை முன்னெடுங்கள்! மட்டக்களப்பு மக்கள் கோரிக்கை -
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்தில் காணிகள் சட்ட விரோதமான முறையில் அபகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாகரை பிரதேசத்தில் பல பகுதிகளில் அண்மைக்காலமாக வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வருகைதந்து காடுகளை அழித்து எல்லைகள் இடும் பணிகளையும் மேற்கொண்டுவருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பனிச்சங்கேணிக்கு வாழைச்சேனை பனிச்சங்கேணியென்ற இடத்தினைக்கொண்ட உறுதிகளையும் சிலர் வைத்துள்ளதாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலியான உறுதிகளைக்கொண்டும் சிலர் இப்பகுதிகளில் காடுகளை அழித்து காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
2015ம் ஆண்டு காலப்பகுதியில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மூன்று இடங்களில் மேற்கொள்ளப்பட்ட காணி மோசடிகளுக்கு நிதிகுற்றமோசடி விசாரணை பிரிவில் பிரதேச செயலகத்தினால் முறையிடப்பட்ட நிலையில் இது; தொடர்பில் இதுவரையில் எந்தவித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லையெனவும் வாகரை பிரதேச சமூக செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
யுத்ததிற்கு பின்னர் வாகரையின் வளமிக்க காணிகள் வேறு பகுதிகளுக்கு மோசடியான முறையில் வழங்கப்பட்டுள்ளதாக பல்வேறு தடவைகள் மக்கள் உhயி இடங்களுக்கு அறிவித்தும் இதுவரையில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாமை தொடர்பில் மக்கள் அதிர்ப்தி தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் காத்தான்குடியை சேர்ந்த நபரால் குறித்த நிதிக்குற்ற மோசடி விசாரணை பிரிவில் விசாரணையில் உள்ள காணிக்கு அருகாமையில் மீண்டும் ஒரு காணி மோசடியான ஆவணங்களைக் கொண்டு காடுகள் அழிக்கப்பட்டு மாங்கன்றுகள் தென்னங்கன்றுகள் நட்டு அபிவிருத்தி செயற்பாடுகள் மேற் கொண்டு வருவதன் பின்புலத்தில் உள்ள அரசியல் அரச நிர்வாக செயற்பாடு என்ன என்பது தொடர்பில் வாகரை பிரதேச செயலாளர் வெளிப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையும் மக்கள் மத்தியில் இருந்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக தமது மண்ணை பாதுகாப்பதற்காக பெருமளவான போராளிகள் வாகரை மண்ணில் ஆகுதியாக்கியுள்ள நிலையில் இன்று இலகுவான முறையில் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் துணையுடன் மாற்று இனத்தவர்கள் காணிகளை அபகரித்துச்செல்லும் செயற்பாட்டினை மேற்கொண்டுவருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இது தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான முறையான எந்த நடவடிக்கையினையும் எடுக்காமை குறித்தும் இப்பகுதி மக்கள் கடும் அதிர்ப்தி தெரிவித்துள்ளனர்.
அண்மையில் ஏறாவூர்ப்பகுதியில் பிரதேச செயலாளர்கள், கிராமசேiவாயாளர்கள் உட்பட அரச அதிகாரிகளின் இலட்சினைகளை பாவித்து பாரிய மோசடிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள காணி அபகரிப்பின் பின்னணியில் உள்ள போலிகளை இனங்கண்டு அந்த காணிகளை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மேற்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையினை மக்கள் முன்வைத்துள்ளனர்.
முறையான விசாரணையை முன்னெடுங்கள்! மட்டக்களப்பு மக்கள் கோரிக்கை -
Reviewed by Author
on
July 10, 2019
Rating:

No comments:
Post a Comment