நீதிமன்ற உத்தரவை மீறி பிக்குவின் உடல் தகனம்..! கொதித்தெழும் சீமான் -
இலங்கை நாட்டின் முல்லைத்தீவு, பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து அங்கு விகாரை அமைத்துத் தங்கியிருந்த கொலம்ப மேதாலங்க தேரர் எனும் பித்த பிக்கு புற்றுநோயால் நோய்வாய்ப்பட்டு இறந்த நிலையில் அவரது உடல் கோயில் வளாகத்துக்குள்ளேயே எரிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது அங்கு வாழும் தமிழ் மக்களிடையே தேவையற்றப் பதற்றத்தையும், பெரும் பீதியையும் உருவாக்கி இரு இன மக்களிடையே மோதல் நிகழ்கிற சூழலை உருவாக்கியிருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
புத்த பிக்குவின் உடலை கோயில் வளாகத்திற்குள் புதைக்கவோ, எரிக்கவோ கூடாது என முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் மூலம் தடை பெற்றப் பிறகும்கூட, அதனைத் துளியும் மதியாது பொலிஸாரின் கண்முன்னே அவர்களின் துணையோடே பௌத்த பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த அநீதியைத் தட்டிக்கேட்ட வழக்கறிஞர்களும், கோயில் நிர்வாகிகளும், அப்பாவித் தமிழ் மக்களும் கோரத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இது தமிழர்கள் மீதான தொடர்ச்சியான வன்மத்தின் வெளிப்பாடாகவே நிகழ்ந்திருக்கிறது என்பது தெளிவாகப் புலனாகிறது. பேரினவாதத்தின் ஆதிக்கத்தினை தொடர்ந்து நிலைநாட்டவும், சிங்களமயமாக்கலைத் துரிதப்படுத்தி செயற்படுத்தவும் முல்லைத்தீவில் நடைபெற்ற இச்சம்பவமானது வன்மையானக் கண்டனத்திற்குரியது.
வடக்கு – கிழக்கு மாகாணத்தில் மீண்டும் தமிழர்களுக்கெதிராக ஒரு இனப்படுகொலை நடப்பதற்கான அறிகுறியே இச்சம்பவம் என்பதைப் பன்னாட்டுச் சமூகம் உணர வேண்டுமென அங்கிருக்கும் தமிழ் அரசியல் செயல்பாட்டாளர்கள் கருத்துவெளியிட்டிருக்கிறார்கள். இதுவே ஈழ நிலத்தில் இன்று நிலவும் சூழலாகும்.
தமிழ்த்தேசிய இன மக்களுக்கு எதிராக நிகழும் இத்தகையப் பேரவலத்திற்கு எதிராகக் குரலெழுப்ப வேண்டியது எட்டுகோடித் தமிழர்களை உள்ளடக்கி வாழும் இந்தியப் பேரரசின் தார்மீகக் கடமையாகும். அதற்குரிய அழுத்தத்தைத் தமிழக அரசானது இந்தியப் பெருநாட்டை ஆளும் பாஜக அரசிற்குத் தர வேண்டும் என இத்தருணத்தில் மீண்டுமொரு முறை நினைவூட்டுகிறேன்.
ஆகவே, பன்னாட்டுச் சமூகமும், ஐ.நா. பெருமன்றமும் இனியாவது ஈழ நிலத்தில் நிகழ்ந்த இனப்படுகொலைக்கு ஒரு சுதந்திரமான எவரது தலையீடுமற்றப் பன்னாட்டு விசாரணையை நடத்தி, ஈழ மக்களிடையே ஒரு பொது வாக்கெடுப்பை நடத்த முன்வர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறி பிக்குவின் உடல் தகனம்..! கொதித்தெழும் சீமான் -
Reviewed by Author
on
September 26, 2019
Rating:

No comments:
Post a Comment