வவுனியாவில் மழையால் 283 குடும்பங்கள் பாதிப்பு: 30 அணைக்கட்டுகள் திறந்துவிடப்பட்டுள்ளன -
வவுனியாவில் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட 283 குடும்பங்களைச் சேர்ந்த 887 பேர் 5 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து வவுனியா மாவட்டத்தில் கடந்த வாரம் முதல் பெய்து வரும் மழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், தாழ் நிலப்பகுதிகள் வெள்ள நீரில் முழ்கியுள்ளன.
வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மருதோடை, வெடிவைத்தகல், ஊஞ்சல்கட்டி, புளியங்குளம் தெற்கு, நெடுங்கேணி தெற்கு, மாமடு, அனந்தர் புளியங்குளம், கற்குளம், நைனாமடு, புளியங்குளம் வடக்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்குரிய 196 குடும்பங்களைச் சேர்ந்த 593 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், 9 வீடுகளும் பகுதியளவு சேதமடைந்துள்ளது.
வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரதேச செயலக பிரிவின் நேரியகுளம் கிராம அலுவலர் பிரிவில் 86 குடும்பங்களைச் சேர்ந்த 293 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், 45 வீடுகளும் பகுதியளவு சேதமடைந்துள்ளது. வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவில் மருதமடுவ பகுதியில் ஒருவர் பாதிப்படைந்துள்ளதுடன், ஒரு வீடும் சேதமடைந்துள்ளது.
இதன்படி வவுனியா மாவட்டத்தில் 283 குடும்பங்களைச் சேர்ந்த 887 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 55 வீடுகள் பகுதியளவிலும் பாதிப்படைந்துள்ளன.
மேலும் வவுனியா வடக்கில் மருதோடை, இராமனூர், பழையவாடி, புளியங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் 4 நலன்புரி நிலையமும், செட்டிகுளம் அடைக்கலமாதா வித்தியாலயத்தில் ஒரு நலன்புரி நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. நலன்புரி நிலையங்களில் 152 குடும்பங்களைச் சேர்ந்த 466 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கி வருகின்றது.
இதேவேளை வவுனியாவில் 30 குளங்களின் அணைக்கட்டுக்கள் வெட்டப்பட்டு பாதிப்பு ஏற்படாத வகையில் நீர் வெளியேற்றப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர் இ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியான மழை காரணமாக வவுனியாவின் 95 வீதமான குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையால் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் பட்சத்தில் பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
குறிப்பாக உடைப்பெடுக்கும் நிலையில் காணப்பட்ட 30 குளங்களின் அணைக்கட்டுக்கள் வெட்டப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
இதன்மூலம் பாதிப்புக்கள் தடுக்கப்பட்டுள்ளதுடன் உடைப்பெடுக்கும் நிலையில் காணப்படும் குளங்களை மண் பைகளைக் கொண்டு அணை அமைத்து தடுக்கும் நடவடிக்கைகளும் கமக்கார அமைப்புக்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் மழையால் 283 குடும்பங்கள் பாதிப்பு: 30 அணைக்கட்டுகள் திறந்துவிடப்பட்டுள்ளன -
Reviewed by Author
on
December 07, 2019
Rating:

No comments:
Post a Comment