அண்மைய செய்திகள்

recent
-

சில மாணவர்கள் பாடசாலை இடைவிலகளுக்கு ஆளாகலாம்! என அச்சம்.....

கோவிட் 19 நோய் பரம்பலைக் கட்டுப்படுத்துவதற்கான சமூக முடக்கத்தினைத் தொடர்ந்து சமூக இடைவெளியுடன் கூடிய சமூகத் தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் பள்ளிக்கூடங்களும் கற்றல் செயற்பாடுகளுக்கு மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் சமூக அளவில் பாடசாலைகளில் இருந்து இடைவிலகல்கள் அதிகரிக்கலாம் என யாழ். போதனா வைத்தியசாலை உதவி பணிப்பாளர் வைத்தியர் சி. யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எமது பிரதேசத்தில் யுத்த காலங்களில் இடப்பெயர்வுக் காலங்களில் பெருமளவு மாணவர்கள் பாடசாலைக் கல்வியில் இருந்து இடைவிலகி இருந்தனர். குறிப்பாக 1987, 1990, 1995 மற்றும் 2006 – 2009 வரை. இதற்கு அவர்களது சமூகப் பொருளாதாரச்சூழலும் ஒரு காரணமாக அமைந்தது. அவ்வாறே கோவிட் சமூக உளத்தாக்கமும் மாணவர்களைக் கல்வியில் இருந்து இடைவிலகச் செய்யும். குறிப்பாக சாதாரணதரம் உயர்தர மாணவர்கள் கல்வியைத் தொடராது இடைவிலகுவர். இவை பொதுவாக கிராமப்புறப் பாடசாலைகள் கிராம நகர இடைநிலைப் பாடசாலைகளில் நிகழலாம்.

எனவே, இது தொடர்பாக விசேட கவனத்தை கல்விசார் சமூகம் செலுத்த வேண்டும். குறிப்பாக குறிப்பிட்ட மாணவர்களுக்கு கல்வியைத் தொடர்வது தொடர்பான தடங்கல்கள் களையப்படல் வேண்டும்.

மாணவர்களின் கல்விசார் வினையாற்றல்களில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாக தனிப்பட்ட காரணிகள், பாடசாலைக் காரணிகள், பிரத்தியோக வகுப்புப் காரணிகள், பெற்றோர், வாழும்சூழல் என்பவற்றுடன் தற்போது இணைய வெளிக் கல்விச்சாலையும் அமைகின்றது. மாணவர்களின் இயல்பூக்கம் இலக்கினை நிர்ணயித்துக் கற்றல், மனப்பாங்கு, புத்திக்கூர்மை, மொழிசார் பரீட்சயம் என்பன கற்றல் மேம்பாட்டில் உதவுகின்றன. எனவே, கோவிட்க்கு பின்பான கல்வி புகட்டலில் இவற்றினைக் கருத்தில் எடுத்தல் அவசியம்.

மாணவர்கள் தாம் இழந்த கற்றல் காலத்தை மீளவும் பெறமுடியாது. ஆனால் துரித கற்றல் முறையில் சில மாணவர்கள் பாடசாலை விலகலுக்கு ஆளாகலாம். சில பாடங்களின் பாடப்பரப்புக்கள் குறைக்கப்படலாம். கணிதம் மொழியறிவு மிகவும் இன்றியமையாதது. பரீட்சைக்குத் தயார்படுத்தும் கல்விமுறையும் தவறானது. ஒழுக்க விழுமியங்கள் நிறைந்த கல்வி மிகவும் அவசியமானது. யாவர்க்கும் கல்வியறிவு யாவர்க்கும் கணனி அறிவு என்ற இலக்கினை நோக்கித் துரித கற்றல் செயற்பாட்டில் பயணிக்க வேண்டும். இந்நிலை திறந்த வகுப்பறைக் கற்றல் முறைமையை பெரிதும் உருவாக்கும்.

கோவிட்டுக்குப் பின்பான சமூகச்சூழலில் பொருளாதாரம் நலிவடைந்து இருக்கும். இதனால் பெற்றோர்கள் பிள்ளைகள்மேல் அதிக கரிசனை காட்டுதல் குறைவடையலாம். எனவே, மாணவர்களின் உள ஆரோக்கியத்தில் பாடசாலைச் சமூகம் விசேட கவனம் எடுத்தல் வேண்டும்.

இன்றைய சிறார்களே எமது நாட்டின் நாளைய சிற்பிகள். எனவே, கோவிட் சமூக உளத்தாக்கம் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டில் பின்னடைவை ஏற்படுத்தாது பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. எனவே, கோவிட் சமூகத்தின் ஒட்டுமொத்தக் கல்வியைக் காவு கொள்ளாது காக்க கல்விச் சமூகத்தின் காலக் கடமைக்காகக் காத்திருப்போம் எனவும் யாழ். போதனா வைத்தியசாலை உதவி பணிப்பாளர் வைத்தியர் சி. யமுனாநந்தா மேலும் தெரிவித்துள்ளார்.


சில மாணவர்கள் பாடசாலை இடைவிலகளுக்கு ஆளாகலாம்! என அச்சம்..... Reviewed by Author on June 13, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.