அண்மைய செய்திகள்

recent
-

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு மன்னாரில் போராட்டம்!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை இன்று செவ்வாய்க்கிழமை (30) அனுஸ்ரித்துக் கொண்டிருக்கும் நாம் இத்தனை ஆண்டுகளாகியும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளின் உண்மை நிலையை கண்டறிவதற்காக வீதிகளில் கண்ணீரோடு அலைந்து திரிந்து உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு நடை பிணங்களாக தொடர்ச்சியான எமது போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம் என மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவலை தெரிவித்துள்ளனர். 

 சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார் தினத்தையொட்டி இன்று செவ்வாய்க்கிழமை (30) காலை 10 மணியளவில் மன்னாரில் அமைதி வழி போராட்டம் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையம் மற்றும் மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவுகளுடன் இணைந்து அமைதிவழிப் போராட்டம் இடம்பெற்றது. மன்னார் மாவட்டச் செயலகத்தின் முன் ஒன்று கூடிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பஜார் பகுதியூடாக மன்னார் பிரதான சுற்று வட்டம் வரை ஊர்வலமாக சென்றனர். 

 இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங்களை ஏந்தியவாறும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தில் அப் பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட குடும்ப உறவுகள் சிவில் சமூக அமைப்பினர் பெண்கள் அமைப்பினர் மற்றும் செயற்பாட்டாளர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வு வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,,, யுத்தம் நிறைவடைந்து தசாப்தங்கள் கடந்து போனாலும் இன்று வரை எம் உறவுகளின் உண்மை தன்மையை வெளிப்படுத்துவதற்கு மாறி மாறி ஆட்சியேரும் எந்த ஒரு அரசாங்கமும் எம் நியாயமான போராட்டத்திற்கு உள்ளார்ந்த எந்தவித அக்கறையும் காட்டவில்லை. 

 தொடர்ச்சியான எம் போராட்டத்தின் போது தமது உறவுகளை தேடும் நீண்ட நாள் போராட்டத்தில் 138 தாய்மார்கள் இதுவரை மரணித்துள்ளனர். இறுதிவரை காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலே உளவியல் தாக்கங்களுக்கு உள்ளாகி இறந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அவர்களின் உயிரோட்டமான சாட்சியங்களும் அழிந்து போயுள்ளன. இன்றைய பொருளாதார நெருக்கடிக்குள்ளும் தங்களின் பிள்ளைகளை தேடி திரியும் தாய்மார்களுக்கு இலங்கை அரசால் எவ்வித நண்மைத்தனங்களும் இல்லை. மாறாக நீதிக்காக போராடும் தாய்மார்களின் மன நிலையினை அறியாத அரசாங்கம் அவர்களை கொடூரமாக தாக்கியும் அச்சுறுத்தியும் வயோதிப வயதான அம்மாக்களின் வலிகளையும் வேதனைகளையும் கொச்சைப் படுத்துகின்றனர். 

 சர்வதேசத்தின் அழுத்தங்ளினால் இலங்கை அரசு விரும்பியோ விரும்பாமலோ உருவாக்கப்பட்ட காணாமல் போனோருக்கான அலுவலகம் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களின் விருப்பங்களை வென்றெடுக்க வில்லை. மாறாக கண் துடைப்புக்கான மக்களின் வெறுப்பை சந்திக்கும் ஒரு கட்டமாகவே OMP அலுவலகம் காணப்படுவதென்பதும் இலங்கை அரசாங்கம் ஏற்று ஒப்புதல் வழங்கிய எந்த ஒரு உள்நாட்டு நீதி பொறி முறைகளையும் சர்வதேசத்தை ஏமாற்றும் விடயமாகவே கருதுகின்றோம். எமது அம்மாக்களின் நீதிக்கான போராட்டம் தொடரும். நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறுகின்ற போராட்டங்கள் வெறுமனே இழப்பீடுகளுக்காகவோ அல்லது சலுகைகளுக்காக வோ அல்ல. மாறாக எமது உயிரான உறவுகளை தேடியதாக அமைந்துள்ளது. வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளுக்கு சர்வதேச நியமங்களுடன் கூடிய பொறுப்புக்கூறல் மற்றும் உண்மையை கண்டறிதல் மீழ நிகழாமை என்பதை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதையும் இனியும் கால அவகாசத்தை கையிலெடுப்பதையோ காலம் தாழ்த்துவதையோ முற்றாக தவிர்க்க வேண்டும் 

 . எந்தவொரு சந்தர்ப்பத்தின் போதும் எமது உறவுகளை தேடும் தாய்மார்களுக்கு எந்த விதத்திலும் அச்சுறுத்தல் விடுவதை தவிர்க்க வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் தாய்மார்களாகிய நாம் வலியுருத்தி நிற்கின்றோம் என தெரிவித்தனர். -குறித்தபோராட்டத்தில் மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா,மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் சகாயம் திலீபன்,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்,மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.















சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு மன்னாரில் போராட்டம்! Reviewed by Author on August 30, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.