அண்மைய செய்திகள்

recent
-

மின்சார சட்டமூலத்தை மீளப்பெறக் கோரும் போராட்டம் வலுப்பெறுகிறது

 மின்சார சட்டமூலத்தை மீளப்பெறக் கோரும் போராட்டம் வலுப்பெறுகிறது 



தேசிய வளங்களை விற்பனை செய்வதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும், சட்டமூலத்தை மீளப்பெறக் கோரி நாற்பதுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மூன்று நாட்களாக நடத்திய போராட்டத்திற்கு அரசு உரிய பதில் அளிக்காததால், மின்சார சபை ஊழியர்கள் பணிக்குத் திரும்பாத அபாயம் ஏற்பட்டுள்ளது.


கொழும்பில் உள்ள இலங்கை மின்சார சபையின் தலைமையகத்திற்கு முன்பாக ஜனவரி 5ஆம் திகதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நுகர்வோர் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் சங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகர் பிரியந்த விக்ரமசிங்க, “நாட்டை இருளில் தள்ளத் தயாரில்லை, ஆனால், ஊழியர்களால் அதிகபட்சமாக செய்ய முடிந்ததை செய்கிறார்கள்.” எனத் தெரிவித்தார்.


“ஊழியர்களின் பணிகளை கைவிடுவதே நாங்கள் அதிபட்சமாக செய்யக்கூடிய  விடயம், நாங்கள் எந்த விளக்குகளையும் அணைக்கவில்லை. சாவிகளை ஒப்படைத்துவிட்டு வருவோம், முடிந்தால் இந்த பயிற்சி பெற்ற ஊழியர்கள் இல்லாமல் இந்த நிறுவனத்தை நடத்துங்கள்.”


மின்சார சபையை மறுசீரமைப்பதாக தெரிவித்து, அரசாங்கம் இலங்கை மின்சார சபை சட்டத்தை பயன்படுத்தி தேசிய வளங்களை விற்பனை செய்வதாக குற்றம் சுமத்தி, நாற்பதுக்கும் மேற்பட்ட மின்சார ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் இணைந்து முன்னெடுத்த மூன்று நாள் தொடர் போராட்டம் ஜனவரி 3ஆம் திகதி இலங்கை மின்சார சபை தலைமையகத்திற்கு முன்பாக ஆரம்பமானது.


 இருபத்து மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மின்சார ஊழியர்களின் போராட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு “திமிர்பிடித்த அரசாங்கம்” குறைந்தபட்சம் ஒரு வாய்ப்பைக்கூட வழங்கவில்லை என சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் பிரியந்த விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.


“அரசாங்கத்திற்கு எந்தளவிற்கு திமிர் பிடித்துள்ளது என்றால், இருபத்து மூவாயிரம் தொழிலாளர்கள் வீதியில் அமர்ந்து போராட்டம் நடத்தும் போது, ஒரு கலந்துரையாடலுக்குக் கூட அவர்கள் அழைப்பு விடுக்கவில்லை.”


தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கான பின்னணியை உருவாக்கி, நாட்டை இருளில் மூழ்கடித்துவிட்டு, தொழிற்சங்கங்கள் மீது பழியைப் போட அரசாங்கம் காத்திருப்பதாக தெரிவிக்கும் தொழிற்சங்க தலைவர், நாட்டு மக்களைப் பற்றி அரசாங்கம் பொருட்படுத்துவதில்லை எனவும் கூறியுள்ளார்.


இருபத்து மூவாயிரத்துக்கும் மேற்பட்ட அத்தியாவசிய சேவை ஊழியர்கள் வேலையை விட்டு, சாவியைக் கொடுத்துவிட்டு வீதிக்கு வந்தால் அரசாங்கம் வீட்டுக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்படும் என தொழிற்சங்கத் தலைவர் வலியுறுத்தினார்.


அரசு முன்வைத்துள்ள புதிய மின்சார சட்டமூலத்தின் ஊடாக, மின்சார சபை ஊழியர்களின் நிதியை கொள்ளையடிக்க அரசு தயாராக உள்ளதாக, மூன்று நாள் போராட்டம் குறித்து, 41 மின்சார தொழிற்சங்கங்கள் இணைந்து வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


“மின்சார சபை ஊழியர்களுக்கு வைத்திய விடுமுறை, போனஸ் என இரண்டாண்டுகளை கொள்ளையடித்த ஆட்சியாளர்கள், கடைசியில், இரத்தத்திலும், கண்ணீரிலும், வியர்வையிலும் சேர்க்கப்பட்ட ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியையும், ஓய்வூதிய நிதியையும் கொள்ளையடிக்க இந்த சட்டமூலம் மூலம் முன்மொழிந்துள்ளனர்.”

மின்சார சட்டமூலத்தை மீளப்பெறக் கோரும் போராட்டம் வலுப்பெறுகிறது Reviewed by வன்னி on January 06, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.