அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

 மன்னார் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு.



மன்னாரில் அபிவிருத்தி என்ற பெயரில்  முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் இலங்கை வரை படத்தில் இருந்து மன்னார் தீவை முற்றாக அழிப்பதை நோக்கி நகர்கின்றது. 

மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னார் பிரஜைகள் குழு   ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (26) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மன்னாரில் இடம் பெற்றது.


மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மார்க்கஸ் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற  குறித்த விழிப்புணர்வு பேரணியின் போது பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,மத தலைவர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,பொதுமக்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

-மன்னார் பிரதான பாலத்தடி இல் இருந்து ஆரம்பமான விழிப்புணர்வு பேரணி பிரதான வீதியூடாக சென்று மன்னார் பஜார் பகுதியை சென் றடைந்தது.பின்னர் மன்னார் மாவட்டச் செயலகம் முன் ஒன்று கூடிய மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு தமது கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இதன் போது மன்னார் தீவில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்   விடயங்களை  மக்கள் முன் வைத்தனர்.

மன்னார் மாவட்டத்தில் அரச படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை மீள மக்களிடம் கையளிப்பதோடு பொதுவான காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும். அத்தோடு அவர்களின் அமைதியான வாழ்விற்கு வழி வகுத்தல்,பல அரச காணிகள் தவறான செயற்பாடுகளினால் மக்களின் வளர்ச்சியினை பாதிக்க கூடியதாக ஒரு சிலர் தமதாக்கி உள்ளனர்.என குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் வேறு மாவட்ட அரசியல் வாதிகள் மற்றும் அரசியல் முகவர்கள் மன்னாரில் உள்ள மக்களினதும், பொதுக் காணிகளையும் வாங்கி தமதாக்கிக் கொள்கின்றனர். 

இதனால் வருங் காலத்தில் மக்களுக்கும்,அவர்களுடைய சந்ததியினருக்கும் ஏற்படவிருக்கும் அபாயம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பாக தலைமன்னார் துறை காணி,நாயாற்றுவெளி காணி, பேசாலை பகுதிகளில் குறித்த பிரச்சினை காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.


அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய காணிகள் அபகரிக்கப்பட்டு சொந்த தேவைக்காக பயன் படுத்தப்படுவதால் இதை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்,  மன்னார் தீவில் அரச மற்றும்  தனிப்பட்ட முகவர்களால் 4,500 க்கு மேல் துளைகள் 50 அடிக்கு கீழ் இடப்பட்டு கனிய மணல் அகழ்வு இதுவரை செய்து முடிக்கப்பட்டுள்ளது.

இதில் எடுக்கப்பட்ட மண்கள் பரிசோதிக்கப்பட்டது டன் மன்னார் தீவில் அனைத்து பிரதேசங்களிலும் கனிய மணல் அகழ்வு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.கனிய மண் அகழ்வினால் நிலமேற்பரப்பு மிகவும் இறுகமற்று  போகிறது.


தொடர் நடவடிக்கைக்காக இக் கனிய மண் ஆய்வு செய்ய அவுஸ்திரேலியாவிலுள்ள தனிப்பட்ட கம்பனிகளுக்கு இம்மண்ணை விற்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டது.


தற்போது மன்னார் தீவின் 63 சதவீத நிலப்பரப்புகள் கடல் மட்டத்தின் கீழ் உள்ளது. இக்கனிய மண் அகழ்வு தொடருமானால்  காலநிலை காரணமாக மன்னார் தீவு முற்று முழுதாக நீரில் மூழ்கும் அபாய நிலை காணப்படுவதால் இக் கனிய மணல் அகழ்வு உடன் தடைசெய்யப்பட வேண்டும்.


இந் நடவடிக்கையினால் மன்னார் தீவில் உள்ள இயற்கை குடி நீர் முற்றாக பாதிக்கப்படுவதுடன் மன்னார் தீவினுள்  காணப்படும் பனைஇ தென்னை போன்ற பயன் தரும் மரங்கள் முற்றாக அழிக்கப்பட்டு சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படும்.


 இதனால் மக்கள் தீவினுள் வாழ முடியாத நிலை ஏற்படும். எனவே இச் செயற்பாட்டை உடன் நிறுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.


 மேலும் மன்னார் தீவினுள் இதுவரை 36 இற்கு மேற்பட்ட உயர் மின் வலு காற்றாடிகள் அமைக்கப்பட்டு தொடர்ந்தும் வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியுடன் 100 இற்கும் மேற்பட்ட உயர்மின் வலுக் காற்றாடிகள்  அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


 மன்னார் தீவை உயர் மின் வலுக்காற்றாடிகளின் பண்ணையாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு மின்வலு காற்றாடிக்கு 6..5 ஏக்கர் நிலப்பரப்பை சுவீகரிக்கவும் விசேட சட்ட மூலம் இந்த நிலங்களை அரசுடமையாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


இவ்வாறு இந்நிலங்கள் சுவீகரிக்க படுவதனால்  மன்னார் தீவினுள் வசிக்கும் மக்களின் இருப்பு நிலம் கேள்விக்குறியாகிவிடும். அத்தோடு மக்கள் பலவந்தமாக இடம்பெயர்வு செய்யப்படும் நிலை உருவாகலாம்.

30 வருடங்களுக்கு மேலாக இம்மக்கள்  போரினால் பாதிக்கப்பட்டு யாவற்றையும் இழந்து சீவிப்பதற்கு கஷ்டப்படும் நிலையில் இ செயற்திட்டங்கள் நடைபெறுமானால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிப்பு நிலை ஏற்பட்டு இம்மக்கள் மன்னார் தீவை விட்டு வெளியேறும் ஒரு துர்பாக்கிய நிலை ஏற்படும். 

எனவே அதை நிறுத்தி மன்னார் மக்களின் இருப்பை உறுதிப்படுத்துமாறு  கோரிக்கை விடுத்தனர்.

மேலும் தற்போதைய நாட்டின் நிலமையில் போதைப்பொருள் பாவனை மிகவும் உயர்வான மட்டத்தில் காணப்படுகின்றது. இதில் முக்கியமாக இளையோர் மட்டத்தில் போதைப்பொருள் பாவனை காணப்படுகின்றது.


இம்மாவட்டத்தில் கரையோரப் பகுதிகளில் இப்போதைப்பொருட்கள் நாளாந்தம் கடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது. கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் இறுக்கமாக காணப்பட்டாலும் போதைப்பொருள் கடத்தல் சர்வ சாதாரணமாக காணப்படுகிறது.


இதனால் தற்போது பாடசாலை மட்டத்தில் இருந்து இப்ப போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது.எமது மாவட்டத்தை சுற்றி இறுக்கமான பாதுகாப்பு நடவடிக்கைக்காக கடற்படை, தரைப்படை, பொலிஸ் காணப்பட்டாலும் போதைப்பொருள் விற்பனை சாதாரணமாக காணப்படுகிறது.


எனவே இப் போதைப்பொருள் பாவனையை முற்றாக இல்லாமல் செய்யுமாறும் கேட்டுக்கொள்வதோடு இதனால் கல்வி மற்றும் கலாச்சார சீரழிவுகளும் ஏற்படுகின்றது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.


தற்போது மன்னாரில் அபிவிருத்தி என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் இலங்கையின் வரைபடத்தில் இருந்து மன்னார் தீவை முற்றாக அழிப்பதை நோக்கி நகர்கின்றது. 


எனவே மன்னார் மக்களை பாதிக்கும் பிரச்சனைகளை தயவு கூர்ந்து கவனித்து எங்களின் நிலம்,உரிமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.என்ற கோரிக்கையை முன் வைத்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.


போராட்டத்தின் முடிவில் ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் மகஜர் மாவட்டச் செயலகத்திற்கு சென்று கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.















மன்னார் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு Reviewed by வன்னி on January 26, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.