கருத்தரங்கில் கலந்து கொள்ளவில்லை என மாணவர்களை கடுமையாக தாக்கிய அதிபர் காயங்களுடன் மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கந்தபளை நு/கோட்பெல் தமிழ் வித்தியாலயத்தில் இம்முறை ஐந்தாமாண்டு புலமைப் பரீட்சை எழுதவுள்ள 07 மாணவர்களை அப்பாடசாலையின் அதிபர் தாக்கியதில் காயங்களுக்கு இலக்கான மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.
இது தொடர்பில் குறித்த மாணவர்களின் பெற்றோர்களால் ராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், நுவரெலியா வலையக் கல்வி காரியாலயத்திற்கு சென்று குறித்த பாடசாலையின் அதிபரை இடமாற்றம் செய்ய கோரியும் பாடசாலை அதிபருக்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.
எனினும், இதுவரை உரிய தீர்வு கிடைக்காத காரணமாகவே பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து இன்று (11) குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கூறுகையில்,
கடந்த சனிக்கிழமை பாடசாலையின் அதிபரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்வி கருத்தரங்குக்கு செல்லாத ஏழு மாணவர்களை பிரம்பால் தாக்கியதாகவும் இதனால் அவர்கள் நடக்க கூட முடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.
மேலும், குறித்த அதிபர் பாடசாலைக்கு மாணவர்களை அழைத்து வரும் பெற்றோர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும் , தற்போது நியமிக்கப்பட்டுள்ள அதிபர் நிர்வாகத் திறன் அற்றவராக உள்ள நிலையில் உடனடியாக அவரை மாற்றி புதிய அதிபரை நியமிக்க கோரியும் இவ்விடயம் தொடர்பில் நீண்ட காலமாக உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்த போதும் இதுவரை குறிப்பிட்ட அதிபரை இடமாற்றம் செய்ய எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமையால் குறித்த போராட்டத்தினை முன்னெடுத்தாகவும் பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த நுவரெலியா வலயக்கல்வி பணிமனை அதிகாரிகளும் , ராகலை பொலிஸ் நிலைய அதிகாரிகளும் உடனடியாக இந்த விடயம் தொடர்பாக துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.
பாடசாலையில் இருந்து குறித்த அதிபரை வெளியேற்றி நுவரெலியா வலயக்கல்வி பணிமனை அழைத்துச் சென்றதன் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
September 11, 2024
Rating:



No comments:
Post a Comment