ஒரு கோடி ரூபாவிற்கு பெண்ணை கொலை செய்ய திட்டம்!
பெண்ணொருவரைக் கொல்லத் தயாரான சந்தேகநபர் பொலிஸ், படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி - ஹபராதுவ - மீபே பகுதியைச் சேர்ந்த ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையான குறித்த சந்தேகநபருக்கு அண்மையில் அஹங்கம பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரினால் அதே பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரை சுட்டுக் கொல்லும் ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
இதற்காக ஒரு கோடி ரூபா பணம் தருவதாக உறுதியளித்த வர்த்தகர், சந்தேகநபருக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் T-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 6 தோட்டாக்களையும் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் , குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் பின்னர், ஹபராதுவ மீபே சந்தி பகுதியில் 26 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது, ஒப்பந்தத் தொகையான ஒரு கோடியில் இருந்து முற்பணமாக 10,000 ரூபாவை வழங்கப்பட்டுள்ளதாகவும், குறித்த வர்த்தகர் தனக்கு ஹெரோயின் போதைப்பொருளையும் வழங்கியுள்ளதாக சந்தேகநபர் வெளிப்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலங்களின்படி, குறித்த வர்த்தகரிடம் மேலும் பல துப்பாக்கிகள் இருப்பதாக தகவல் வெளியாகியதை அடுத்து, அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சந்தேகநபருக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பதுடன், அந்த துப்பாக்கி வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டு குற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், குறித்த சந்தேகநபருக்கு கொலையை செய்வதற்காக ஒப்பந்தத்தை வழங்கிய வர்த்தகரை கண்டறிவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர் இன்று காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Reviewed by Author
on
October 27, 2024
Rating:


No comments:
Post a Comment