சம்பூர் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள்: நிபுணர் அறிக்கைக்கு கோரிக்கை
கிழக்கு மாகாணத்தில் அரசாங்கப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் கிராமவாசிகள் குழுவை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்திற்கு அருகில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட இடம் குறித்து ஒரு வாரத்திற்குள் இரண்டு நிபுணர் அறிக்கைகளை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொல்பொருள் திணைக்களத்திற்கு அந்த இடத்தின் வரலாறு குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்ட மூதூர் நீதவான், அகழ்வாய்வு தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியிடமிருந்து அறிக்கை கோரியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் கண்ணிவெடி குறித்த நிபுணர்களின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் பணித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சம்பூர் கடற்கரையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பிரிட்டனை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனம் ஜூலை 20 அன்று ஒரு மண்டை ஓடு மற்றும் பிற எலும்புகளைக் கண்டுபிடித்தது.
இதனையடுத்து பணிகளை இடைநிறுத்த உத்தரவிட்ட மூதூர் பதில் நீதவான், புதன்கிழமை (23) அந்த இடத்தில் அகழ்வாய்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நான்கு அரசு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.
இதற்கமைய, நேற்றைய தினம் (ஜூலை 23) அரச பகுப்பாய்வுத் திணைக்களம், திருகோணமலை சட்ட வைத்திய அதிகாரி, புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம், தொல்பொருள் திணைக்களம், காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (OMP) மற்றும் பொலிஸ் அதிகாரிகள் அந்த இடத்திற்கு வருகைத்தந்திருந்தனர்.
இடத்தை ஆய்வு செய்த மூதூர் நீதிபதி எச்.எம். தஸ்னீம் பௌஸான், மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் ஒரு மயானம் இருந்ததா என்பது குறித்து ஜூலை 30 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்குமாறு தொல்பொருள் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
சம்பூர் கடற்கரையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டு வரும் பிரிட்டனை தளமாகக் கொண்ட மெக் (MAG) உடன் கலந்துரையாடி, மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் எவ்வாறு அகழ்வாய்வுகளை மேற்கொள்ள முடியும் என்பது குறித்து ஜூலை 30 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு திருகோணமலை சட்ட வைத்திய அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சம்பூர் கடற்கரையில் உள்ள சிறுவர் பூங்கா அருகே மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
57 பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரியூட்டியும் கொலை செய்யப்பட்ட, இலங்கை இராணுவத்தின் மீது குற்றம் சாட்டப்படும், ஜூலை 7, 1990 சம்பூர் படுகொலையின் நினைவாக பாதிக்கப்பட்ட கிராம மக்களால் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
.jpg)
No comments:
Post a Comment