பொதுமக்களின் உடல் எடையை தடுக்க பிரித்தானிய அரசு அதிரடி திட்டம்: வருகிறது புதிய சட்டம்,,,
பிரித்தானியாவில் அதிகரிக்கும் உடல் பருமனை தடுத்து பொதுமக்களின் நலனை பாதுகாக்க அந்நாட்டு அரசு ஒரு புதிய சட்டத்தை கொண்டு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவில் ‘சர்க்கரை அதிகம் கலந்த குளிர்பானங்களை பொதுமக்கள் அதிகளவில் எடுத்துக்கொள்வதே உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணியாக’ பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, பிரித்தானியாவில் பொதுமக்கள் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 14.8 பில்லியன் லிற்றர்கள் குளிர்பானங்களை குடித்துள்ளனர். அதாவது, ஒவ்வொரு நபரும் சுமார் 232.9 லிற்றர் குளிர்பானத்தை அருந்தியுள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு பிரித்தானியாவில் உற்பத்தி செய்யப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் குளிர்பானங்களில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சர்க்கரையை சேர்த்தால், அந்த நிறுவனங்களுக்கு கூடுதலாக வரி விதிக்க பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம், 100 மில்லி லிற்றர் அளவுள்ள குளிர்பானத்தில் 5 கிராமிற்கு அதிகமாக சர்க்கரை கலக்கப்பட்டிருந்தால், அந்த நிறுவனத்துக்கு கூடுதலாக வரி விதிக்கப்படும்.
அதேசமயம், 100 மில்லி லிற்றர் அளவுள்ள குளிர்பானத்தில் 8 கிராமிற்கு மேல் சர்க்கரை கலந்திருந்தால், மேலே குறிப்பிட்டதை விட அதிகளவில் வரி விதிக்கப்படும் என பிரித்தானிய சான்சலரான ஜோர்ஜ் ஓஸ்போர்ன் தெரிவித்துள்ளார்.
எனினும், பழச்சாறு கலந்த குளிர்பானங்கள் மற்றும் பால் கலந்த குளிர்பானங்களுக்கு இந்த புதிய வரி விதிப்பு பொருந்தாது.
சர்க்கரை அளவினை அதிகமாக சேர்க்கும் நிறுவனங்களுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படும் என்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், ’ஒரு லிற்றருக்கு 18pence முதல் 24pence வரை கூடுதல் வரி விதிப்பு அல்லது 330 மில்லி லிற்றர் அளவுள்ள பாட்டில்களுக்கு 6pence முதல் 8pence வரை வரி விதிக்கலாம் என பிரித்தானிய வரவு செலவுத் திட்ட அலுவலகம் பரிந்துரை செய்துள்ளது.
எனினும், இந்த புதிய திட்டம் எதிர்வரும் 2018ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும், இந்த மாற்றத்திற்கு ஏற்ப தயாரிப்புகளை வழங்க நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என சான்சலர் ஜோர்ஜ் ஓஸ்போர்ன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் உடல் எடையை தடுக்க பிரித்தானிய அரசு அதிரடி திட்டம்: வருகிறது புதிய சட்டம்,,,
Reviewed by Author
on
March 21, 2016
Rating:

No comments:
Post a Comment