அண்மைய செய்திகள்

recent
-

கனேடியத் தமிழ் பிரஜை மீது பொலிஸார் சித்திரவதை-நட்டஈடு வழங்க இலங்கைக்கு பணிப்பு


இலங்கையில் அரச படைகளின் சித்திரவதைக்குள்ளான கனேடியத் தமிழ் பிரஜை ஒருவருக்கு இலங்கை அரசு நட்டஈட்டினை வழங்க வேண்டுமென ஐ.நா மனித உரிமைக் குழுவொன்று பணித்திருக்கிறது.

கனடா ரொரன்ரோவில் வசிக்கும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 46 வயது கனேடியத் தமிழரான ரோய் மனோஜ்குமார் சமாதானம் என்பவருக்கே இந்த நட்ட ஈட்டினை வழங்கவேண்டுமென ஐ.நா மனித உரிமைகள் குழு விதந்துரை செய்திருக்கிறது.

அத்துடன் இந்த நட்ட ஈடு குறித்த அறிவிப்பினை இலங்கை அரசு அடுத்து வரும் மூன்று மாதங்களுக்குள் பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமெனவும் அந்தக் குழு அறிவித்திருக்கிறது.

திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் ரோய் மனோஜ்குமார் சமாதானம் 2007ஆம் ஆண்டு செப்டெம்பரில் இலங்கைக்கு சென்ற போது, அவர் அங்குவைத்து விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு சுமார் மூன்றாண்டுகள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்.

இவரது வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார், நண்பரின் வர்த்தகத்துக்காக சிங்கப்பூரில் இருந்து இவர் இறக்குமதி செய்திருந்த சுமார் 600 கையடக்கத் தொலைபேசிகளை கைப்பற்றியிருந்தனர்.

அதனை விடுவிப்பதற்கு பயங்கரவாதத் தடுப்புப்புப் பொலிசார் கப்பம் கோரியதாகவும், அதனை வழங்க மறுத்தமையினால் தன்னை ஒரு “கனேடியப் புலி” என முத்திரை குத்தி, தடுத்துவைக்கப்பட்டு, சித்திரவதை செய்ததாக ரோய் சமாதானம் ஐ.நா மனித உரிமை குழுவிடம்முறைப்பாடு செய்திருந்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என குற்றஞ்சாட்டப்பட்டு மூன்றாண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் மீது மோசமான சித்திரவதைகளும் மேற்கொள்ளப்பட்டதாக ஐ.நா குழுவிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முதலில் அதி தொழிநுட்பம் வாய்ந்த தொலைத் தொடர்பு சாதனங்களைக் கொள்வனவு செய்திருந்தார் என்ற குற்றச்சாட்டு இவர்மீது முன்வைக்கப்பட்டிருந்தபோதிலும், பின்னர் இவர் முக்கியஸ்தர் ஒருவரைப் படுகொலை செய்வதற்குத் திட்டம் தீட்டினார் என்று பழிசுமத்தப்பட்டது.

இவையனைத்தும் பொய்யென கனடாவின் த நசனல் போஸ்ட் பத்திரிக்கைக்குத் தெரிவித்துள்ள ரோய் சமாதானம், தடுப்புக் காவலில் விலங்கிடப்பட்டு வைக்கப்பட்டிருந்த தனக்கு பொலிசார் மோசமான இடங்களில் தாக்கியும், உதைத்தும், துப்பாக்கிகளால் இடித்தும், குழாய்களினால் அடித்தும் துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தன்னைப் படுகொலை செய்யப்போவதாகவும், மனைவியையும் கைதுசெய்து வல்லுறவுக்கு உட்படுத்தப் போவதாகவும் அச்சுறுத்திய பொலிசார் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை ஏற்றுக்கொள்ளும்படியும் வலியுறுத்தியதாகவும் ஐ.நா மனித உரிமை குழுவிடம் அவர் தெரிவித்திருக்கிறார்.

இறுதியில் இலத்திரனியல் கருவிகளை இறக்குமதி செய்தார் என்ற குற்றச்சாட்டினை ஏற்றுக்கொண்டு, அதற்கான தண்டப்பணத்தி னையும் செலுத்திய அவர் 2011இல் மீண்டும் கனடாவிற்குத் திரும்பியிருக்கிறார்.

முறையற்ற வகையில் இலங்கை படையினரின் சித்திரவதைக்குள்ளான இவருக்கு நட்ட ஈட்டினை இலங்கை அரசு வழங்குவது மட்டுமன்றி, அது குறித்த பொது அறிவிப்பினையும் மேற்கொள்ளவேண்டுமென ஐ.நா மனித உரிமைகள் குழு பரிந்துரைத்திருக்கி றது. .

இதேவேளை, ஜெனீவா குழுவின் பணிப்புரையை இலங்கை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிக்கான கனேடிய நிலையத்தின் சட்டத்துறை பணிப்பாளர் மெட் இசென்பிராட் கோரிக்கை விடுத்துள்ளார்.
கனேடியத் தமிழ் பிரஜை மீது பொலிஸார் சித்திரவதை-நட்டஈடு வழங்க இலங்கைக்கு பணிப்பு Reviewed by NEWMANNAR on November 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.