ஈழத் தமிழர்களோடு இனி நாவலர் பெருமான் வாழ்வார்
நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் குருபூசை தினம் இன்றாகும். ஈழத்தில் சைவமும் தமிழும் வாழ் வதற்காகத் தன்னை அர்ப்பணித்த பெருந்தகை அவர்.
நாவலர் பெருமான் இல்லாதிருந்திருந்தால் அந்நியராட்சியால் நம் மண்ணில் தமிழும் சைவமும் புதையுண்டு போயிருக்கும்.
அந்தளவுக்கு அந்நியராட்சியில் எங்கள் தமிழும் சைவமும் பெரும் அவலத்துக்குள் சிக்கியிருந்தன.
இந்நேரத்தில்தான் ஆறுமுகநாவலர் எழுந்தார். சமயப் பிரசாரத்தை மேற்கொண்டார். அந்நியர்களின் மதமாற்றக் கொடூரத்தை வன்மையாகக் கண்டித்தார்.
அதேவேளை எத்தகைய முறைகளினூடாக அந்நியர்கள் நம் மக்களை மதமாற்றம் செய்கின்றனர் என்பதை ஆய்ந்தறிந்த நாவலர் திண்ணைப் பள்ளிக்கூடங்களை ஆரம்பித்ததுடன் பசிபோக்க கஞ்சி கொடுக்கும் அறத்தையும் நடைமுறைப்படுத்தினார்.
காலம் உணர்ந்து, மக்களின் தேவை உணர்ந்து அதற்கேற்றாற்போல் திட்டம்தீட்டி அதனை அமுலாக்கி சைவத்தையும் தமிழையும் காப்பாற்றிய ஆறுமுகநாவலர் பெருமானார் எங்கள் இனத்தின் காவலனாக விளங்கினார்.
மதமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்கு வந்த அந்நியர்கள் சிவத்தமிழர்களாக இருந்த ஈழத் தமிழர்களைத் தம் மதம் மாற்ற பெரு நடவடிக்கைகள் எடுத்தனர்.
தமக்கு இருக்கக்கூடியதான ஆட்சி அதிகாரத்தையும் அடக்குமுறைத் திமிர்த்தனத்தையும் ஆயுதங்களாகக் கொண்டு சைவத் தமிழர்களை மதமாற்றம் செய்யும் பொருட்டு ஆங்கிலக் கல்வி மோகத்தையும் அரச உத்தியோகத்தையும் ஆசைப் பொருளாக்கி தங்கள் நோக்கத்தை நிறைவேற்றத் தலைப்பட்டனர்.
இந்த இடத்தில்தான் ஆறுமுகநாவலரின் கல்விச் சிந்தனை களமிறங்குகிறது. வறுமை போக்க கஞ்சித் தொட்டி அமைக்கும் திட்டம் அரங்கேறுகிறது. அவரின் நாவன்மை மேடையேறி தமிழ் மக்களை விழிப்படையச் செய்கிறது.
தனி ஒரு நாவலரின் சைவத்தமிழ்ப் பற்றுத்தான் இன்று நாம் தமிழர்களாக இருப்பதற்கு வழிவகுத்தது.
யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய ஆறுமுகநாவலர் வெஸ்லியன் திருச்சபை ஆரம்பித்த அக்கல்லூரியில் சைவ ஆசாரத்தோடு, அனுட்டானத்தோடு கல்வி கற்பித்தார் என்றால் அதனை எவரும் சாதாரணமாக எண்ணிவிட முடியாது.
அந்நியராட்சியும் வெஸ்லியன் திருச்சபையின் மேலாதிக்கமும் இருக்கின்ற இடத்தில் கழுத்தில் உருத்திராட்சம்; உடலில் திருநீற்றுக் குறிகள் ஒட்டு மொத்தத்தில் சிவப் பொலிவு. கூடவே மொழியாற்றல், ஆளுமைத் திறன், யார்க்கும் அஞ்சாத நிமிர்ந்த ஞானச்செருக்கு. இவற்றின் மிடுக்கோடு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆறுமுகநாவலரின் கல்விப் பணி தொடர்கிறது.
இங்குதான் நாவலரின் நேர்மையை பேர்சிவல் பாதிரியார் அறிந்து கொள்கிறார். ஆங்கிலக் கல்விக்காகவும் அரச தொழிலுக்காகவும் மதம் மாறியவர்களைவிட தன் பிறவிச் சமயத்தையும் தன் தாய் மொழியையும் நேசிக்கும் ஆறுமுகநாவலரே ஈழத்து மண்ணின் உத்தமன் என்ற உண்மையை அவர் உணர்கிறார்.
அதனால்தான் புனித விவிலியத்தை தமிழில் மொழிபெயர்த்துத் தரும்படி ஆறுமுகநாவலரிடம் பேர்சிவல் பாதிரியார் விண்ணப்பம் செய்கிறார்.
அந்த விண்ணப்பத்தை நாவலரும் நிறைவேற்றிக் கொடுக்கிறார். இந்த அற்புதம் நடந்த இந்த மண்ணில் இன்றும் சில பாடசாலைகளில் சரஸ்வதி பூசை நடத்துவதற்கும் சைவப் பண்பாட்டுக்கும் தடை விதிப்பு நடக்கிறது என்பதை எண்ணும்போது நெஞ்சம் அடைத்துப் போகிறது.
வெளிநாட்டில் இருந்து வந்த பேர்சிவல் பாதிரியார் நாவலருக்குக் கொடுத்த மதிப்பை சைவத் தமிழ்ப் பரம்பரையில் வந்தவர்கள் செய்ய மறந்தனரோ என்று எண்ண, சிந்தை குலைகிறது.
பரவாயில்லை இந்து கலாசாரத் திணைக்களத்தின் பெரு முயற்சியில் நாவலர் மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு நாவலர் பெருமானை நம்மோடு வாழவைக்கும்
இந்த மாநாட்டை ஏற்பாடு செய்த இந்து கலாசாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் உமாமகேஸ்வரன் நாவலரை மீண்டும் நல்லூருக்கு அழைத்து வந்த சாதனையாளராக நாம் பதிவு செய்ய முடியும்.
ஈழத் தமிழர்களோடு இனி நாவலர் பெருமான் வாழ்வார்
Reviewed by NEWMANNAR
on
November 22, 2016
Rating:

No comments:
Post a Comment