காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கைவிடப்பட்டிருப்பது மாபெரும் கொடுமை -
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கடந்த ஓராண்டாகத் தங்களுடைய உறவுகளைத் தேடிப் பெரும் போராட்டம் ஒன்றை நடத்தியபோதும், அவர்களுடைய பிரச்சினைக்கு யாரும் எத்தகைய பதிலையும் வழங்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
குறித்த போராட்டம் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்தப் பிரச்சினையை யாரும் பொறுப்பெடுக்கவும் இல்லை. இன்று இந்த மக்கள் கைவிடப்பட்டவர்களாகவும், உதாசீனம் செய்யப்பட்டவர்களாகவும் நிர்க்கதிக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இது அவர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாகும். இதற்கு அரசாங்கமும் சர்வதேச சமூகமும் தமிழ் அரசியல் தலைமைப் பொறுப்பை ஏற்றவர்களும் பதில் சொல்லியாக வேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தங்களுடைய உறவுகளைத் தேடி இலங்கை அரசிடம் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆட்சி மாற்றத்தின் பிறகு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜனாதிபதியைச் சந்தித்துத் தமது கோரிக்கையை முன்வைத்தனர். அதைத்தொடர்ந்து ஜனாதிபதியுடன் பேச்சுகளை நடத்தியிருந்தனர்.
இதனையடுத்து மிக விரைவில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதியின் வாக்குறுதிகளைப் பெற்றவர்களாகவும் இருந்தனர்.
ஆனால், இதுவரையில் எத்தகைய முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இதேவேளை தங்களுடைய உறவுகளைப் பற்றிய தகவல்களைத் தாருங்கள் என்று கேட்டு, இந்த மக்கள் ஐ.நாவின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடமும் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனிடமும் நேரிலேயே மன்றாடியிருந்தனர்.
அரசியல் தலைவர்களிடம் முறையிட்டனர். வடக்கு மாகாண முதலமைச்சரிடம் முறையிட்டனர். ஏனைய அரசியல் தலைவர்களிடமும் முறையிட்டனர்.
இதற்கெல்லாம் பரிகாரம் காணுவதற்காக காணாமல் போனோருக்கான செயலகம் ஒன்றை இலங்கை அரசாங்கம் திறந்தது.
அந்த அலுவலகம் திறக்கப்பட்டு ஓராண்டாகியும் இந்த மக்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை.
இவர்கள் தாங்க முடியாத யுத்தப்பாதிப்போடு தங்களுடைய பிள்ளைகளை அல்லது கணவரை இழந்த துயரத்தையும் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.
இது போதாதென்று கடந்த ஓராண்டாகப் போராடிய சுமையையும் சுமந்திருக்கிறார்கள். ஆனால் இதையிட்டு எவரும் கவலைப்பட்டதாக இல்லை.
இடையறாது இரவும் பகலும் நடத்தி வரும் இவர்களின் போராட்டத்தை ஓராண்டாக நீடிக்க பார்த்திருந்தது மிகப்பெரும் வரலாற்றுத் தவறாகும்.
இவர்களின் மனவுணர்வுகளைப் புரிந்து கொள்ளாது அரசியல் இலாபம் தேடும் விதமாகவே சகல தலைவர்களும் நடந்து கொண்டுள்ளனர்.
ஏற்கனவே போரைச் சந்தித்த பாதிப்போடு இருந்தவர்கள் இன்னும் வருத்துகின்ற விதமாக போராட்டத்தை நடத்தப் பார்த்திருப்பது நாகரிக உலகின் மனச்சாட்சிக்கே விரோதமானதாகும்.
அரசியல் அறத்துக்கு அப்பாற்பட்டதாகும். இந்த நிலையை முடிவுக்குக் கொண்டுவர, அரசியல் நலன்களுக்கு அப்பால் அவர்களுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கைவிடப்பட்டிருப்பது மாபெரும் கொடுமை -
Reviewed by Author
on
February 20, 2018
Rating:

No comments:
Post a Comment