தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்ட வரலாற்றுத் தவறினால் ஏற்பட்ட விபரீதம்!
ஒட்டுமொத்த இலங்கை தமிழர்களும் அரசியல் அநாதைகளாக நட்டாற்றில் விடப்பட்ட நிலையில் எந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வில்லாமலும், மேற்கொள்ளும் போராட்டங்களுக்கு விடைகளில்லாமலும் பெரும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் பொதுமக்கள்.
இந்த நிலைக்கு யார் காரணம்? போராடும் மக்களின் போராட்டத்திற்குப் பதில் தான் என்ன? தீர்வை எதிர்நோக்கும், விடுதலையை எதிர்பார்த்து காத்திருக்கும் அரசியல் கைதிகள் மற்றும் காணிகளை விடுவித்துத் தருமாறு கோரும் மக்களுக்கான தீர்வு என்ன? இப்படி பல ஆயிரம் கேள்விகளை ஈழத் தமிழர்கள் எழுப்பிக் கொண்டிருக்கிறார்.
ஆனால், அம்மக்களினால் தேர்வு செய்யப்பட்ட அரசியல் தலைமைகளும் பிரதிநிதிகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? மக்கள் தங்கள் வாழ்வாரத்தை தொலைத்து, இயல்பு வாழ்க்கையை இழந்து, போராட்டங்களை கையில் எடுத்த வேளை, அதனை தங்கள் சிரத்தில் மக்கள் பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எடுத்திருக்க வேண்டும்.
எனினும் போர் முடிந்து பத்தாண்டுகளை அடைந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செய்யும் அரசியல் எதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.
வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் மௌனித்த போது தமிழ் மக்களின் அதிக வாக்குகளைப் பெற்ற, விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மக்களின் அனைத்து பேரம்பேசும் முடிவுகளை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் இன்று அவர்கள் செய்யும் அரசியல் எதுவென்று சிறுபிள்ளையே கேட்கும் அளவிற்கு தரம் கெட்டு இழி நிலைக்குச் சென்றுவிட்டதாக விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பெரும் பொன்னான வாய்ப்புக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பெற்று இருந்தும் எந்தவிதமான ஆக்கிபூர்வமான நடவடிக்கைகளையும் எடுத்திருக்கவில்லை என்பதே வரலாற்று உண்மை.
விடுதலைப் போராட்டம் மௌனித்த பின்னர் இரண்டு ஜனாதிபதி தேர்தலைகளை தமிழ் மக்கள் எதிர் கொண்டிருக்கிறார்கள்.
மகிந்த ராஜபக்ச ஆட்சியிலிருந்து விரட்டப்பட்டு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக்கப்பட்ட போது பெரும் வாய்ப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பெற்றார். எதிர் கட்சி என்னும் அந்தஸ்தை கூட்டமைப்பு பெற, எதிர் கட்சித் தலைவராக சம்பந்தன் கதிரையை அலங்கரித்தார்.
உலகநாடுகளுக்கு தமிழர் ஒருவரை எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்த்திவிட்டோம் என்று மார்தட்டியது சிங்களத் தரப்பு. இருப்பினும் அந்தக் கதிரையில் இருந்த இராஜவரோதயம் சம்பந்தன் சாதித்தது என்ன? சிறையில் வாடும் ஒரு கைதியையாவது வெளியே கொண்டுவந்தாரா? அல்லது பெரும் வளங்களைக் கொண்ட நிலங்களை மீட்டாரா? காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் ஏதேனும் முடிவெடுத்தாரா?
வேலையற்று வாடிக் கொண்டிருந்த இளைஞர்களுக்காக குரல்கொடுத்தாரா? எதிர்க் கட்சித் தலைவராக சம்பந்தன் சாதித்தது என்ன?
பலமுறை ரணில் தலைமையிலான அரசாங்கத்திடம் பேரம்பேசும் வாய்ப்பு கைக்கு கிட்டிய போது ரணில் தலைமையிலான அரசாங்கத்தைக் காப்பாற்றி ரணிலை மீண்டும் பிரதமராக்கியதைத் தவிர வேறு எதையும் சாதிக்கவில்லை சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு.
கம்பரெலிய போன்ற வீதிகளை அரைகுறையாகத் திறந்து வைப்பதும் வீதிகளை செப்பனிடுவதும் மேடைகளில் போர் வெடிக்கும் என்று காலத்தைக் கடத்தியதைத் தவிர வேறு எதையும் இவர்கள் உருப்படியாக செய்யவில்லை.
இதுதவிர, தமிழ் மக்கள் சார்பாக இவர்கள் செயற்படாமல் இருந்ததன் விளைவுகளாக,
* மணலாறு, வவுனியா, மட்டக்களப்பு ,நாவற்குழி, திருகோணமலை உட்பட்டபல பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் விஸ்தரிக்கப்பட்டிருக்கிறது. 117.1 சதுர கி.மீ.பரப்பளவிலிருந்த வெலிஓயா தற்போது, 164.2 சதுர கி.மீ. பரப்பளவில் வெறும் சிங்கள பிரிவாக விஸ்தீரணமாகி இருக்கிறது.
* நூற்றுக்கணக்கான விகாரைகள் (அண்ணளவாக 107) சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருக்கிறது.
* தென்பகுதி சிங்களவர்கள் வடக்கு கிழக்கு அரச நிறுவனங்களில் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
* இலங்கை கணக்காளர் சேவை , கிழக்கு முகாமைத்துவ உதவியாளர் சேவை போன்ற போட்டி பரீட்சைகளில் தமிழர்கள் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள்.
* சிறைகளில் தமிழர்கள் இன்றைக்குக்கும் அரசியல் கைதிகளாக இருக்கிறார்கள். இந்த அரசாங்கம் அவர்களை அரசியல் கைதிகளாக கூட ஏற்று கொள்ள மறுக்கிறது
* காணமல் போனோர் உறவுகள் ஆண்டுக்கணக்கான வீதிகளில் நிற்கிறார்கள்.
* மகாவலி திணைக்களம் , வனவளத் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் என மத்திய அரச நிறுவனங்கள் போட்டி போட்டி தமிழர் நிலத்தை அபகரிக்கும் நிலை இருக்கிறது. விவசாய நிலங்கள், மேய்ச்சல் தரைகள், வழிபாட்டு நிலங்கள் கூட பறிக்கப்பட்டு இருக்கிறது.
* வடக்கில் எல்லா அரசாங்க பண்ணைகளும் இலங்கை ராணுவத்தின் பண்ணைகளாக இன்னும் இருக்கின்றன.
* சர்வதேச விசாரணையை நீர்த்து போக செய்து இருக்கிறது .போர்குற்றவாளிகளை காப்பாற்றி அடைக்கலம் கொடுத்து இருக்கிறது.
* முல்லைத்தீவு ஒட்டு தொழில்சாலை , பரந்தன் இரசாயன தொழில்சாலை , வாழைச்சேனை கடதாசி தொழிற்ச்சாலை என தொழில்துறையில் முழுமையாக இயக்கப்பட வேண்டிய /உருவாக்கப்பட வேண்டிய நிறுவனங்கள் எவையும் கடந்த 10 ஆண்டுகளில் உருவாக்க படவில்லை. இவற்றை மீள் இயக்குவதற்கு அரசாங்கமே தடையாக இருக்கிறது.
* 63 ஆயிரத்து 345 குடும்பங்கள் பெண் தலைமைத்துவக் குடும்பங்களாக வட மாகாணத்தில் வாழ்கின்றனர் .40 ஆயிரம் பெண் தலைமைக் குடும்பங்கள் கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்து வருகின்றன.இதுவரை எந்த வாழ்வாதாரங்களும் பெற்று கொடுக்கப்படவில்லை.
* நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் பிக்குவின் சடலம் தகனம் செய்யப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி.
இப்படி ஏராளமான விடயங்களை அடுக்கிக் கொண்டு போகலாம். இவை எவற்றுக்கும் அரசாங்கத்தைக் காப்பாற்றி கைபிடித்துக் கூட்டிச் செல்லும் சம்பந்தர் என்னும் பழுத்த அரசியல்வாதி கிஞ்சித்தும் எத்தீர்வையும் பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் இறங்கவில்லை என்பது வரலாறாக மாறிக் கொண்டிருக்கிறது.
விடுதலைப் புலிகளின் கரங்கள் ஓங்கியிருந்த போது, 2002ஆம் ஆண்டளவில் நாடாளுமன்றத்தில் மாவீரர் நாளுக்கு விளக்கேற்றிய இதே சம்பந்தன் இன்று அடங்கியிருப்பதன் பின்னணி என்ன?
போராட்டம் மெளினிக்கப்பட்டதன் பின்னர் 3வது ஜனாதிபதி தேர்தலை சந்திக்கவிருக்கிறது நாடு. இனத்தை அழித்தவரையா? இனமழிய முன்னேற்பாடுகளை செய்த ரணில் தரப்பையா ஆதரிப்பது என்ற தீவிர ஆலோசனையில் இருக்கிறார்கள் கூட்டமைப்பினர்.
இதற்கிடையில், தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கி அவருக்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வாக்குகளை கொடுத்து தமிழர்களின் சக்தியையும் பலத்தையும் உலகத்திற்கும் தென்னிலங்கைக்கும் காட்டலாம் என்ற முயற்சியில் சிவில் செயற்பாட்டாளர்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.
அவர்களின் முயற்சியும் சரியென்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். தமிழ் மக்களின் பலம் இதுவென்று காட்டும் தருனம் வந்திருப்பதாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள். தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளரை நிறுத்தும் முடிவினை மக்களாக எடுப்பதற்கு காரணம் என்ன?
தங்களுக்கான வாய்ப்புக்கள் யாவற்றையும் கூட்டமைப்பினர் பதவி மோகத்திற்காகவும் சொகுசு வாழ்க்கைக்காகவும் விட்டுக் கொடுத்துவிட்டார்கள் என்று சாதாரண குடிமகனும் சொல்லும் அளவிற்கு அவர்களின் அரசியல் செயல்பாடு அமைந்திருக்கிறது.
சர்வமதத் தலைவர்களையோ அன்றி சிவில் செயற்பாட்டாளர்களின் வார்த்தைகளையோ செவிமடுக்காமல் தான்தோன்றித்தனமாக செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் போன்ற தமிழ் அரசியல் தரப்புக்கு சர்வமதத் தலைவர்களின் முடிவுகளும், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் புத்திஜீவிகளின் பொதுவேட்பாளரைக் களமிறக்குவது என்னும் முடிவு சரியான நிலைப்பாடாகப் பார்க்கப்படுகிறது.
ஏனெனில், குறைவான எண்ணிக்கையினைக் கொண்டிருப்பதோடு அமைச்சரவையில் இருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் ரணிலை மிரட்டிச் சாதிக்கும் அவர்கள் அளவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் தந்திரங்கள் எதுவென்று கேள்வி எழுகிறது.
பழுத்த பெரும் அரசியல் தலைவரான சம்பந்தன் இராஜதந்திரமாக எதைச் சாதித்தார்? எதையும் சாதிக்காமல் எதையும் தமிழர்களுக்குப் பெற்றுக் கொடுக்காமல், அதிகாரக் கதிரையில் இருந்துவிட்டு இறங்கி கீழே நின்று ரணிலை தூக்கி வைத்திருக்கும் இவர்கள் இன்று சர்வம மதத் தலைவர்களின் முடிவினை நிராகரித்து மீண்டும் தவறிழைக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
இத்தவறுகளை சீர்திருத்தாமல் தாங்கள் செல்லும் வழி தவறு என்று உணராமல் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு பயணிக்குமாயின் அவர்களின் அரசியல் பயணத்திற்கான சாவு மணியினை விரைவில் தமிழ் மக்கள் அடிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
சர்வதேசத்துக்கும் ஒட்டுமொத்த சிங்களத் தரப்பிற்கும் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஒரு செய்தியை சொல்வதற்கு மீண்டுமொரு பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை தடுத்து நிறுத்தும் பணியில் இவர்கள் ஈடுபடுவார்கள் எனில் தமிழ் மக்கள் தக்கபாடம் புகட்டுவார்கள்.
அத்தோடு வரலாற்றில் பெரும் கறைபடிந்த கரங்களோடு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தங்கள் அரசியல் பயணத்தை முடிவுக்குக் கொண்டும்வரும் நிலை ஏற்படும் என்பதை அவர்கள் அச்சத்தோடு கவனித்தாக வேண்டும்....
தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்ட வரலாற்றுத் தவறினால் ஏற்பட்ட விபரீதம்!
Reviewed by Author
on
October 05, 2019
Rating:

No comments:
Post a Comment